Tuesday, January 2, 2024

.எங்களுடைய அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்."

"எங்களுடைய அன்றாட உணவை  எங்களுக்கு இன்று தாரும்."

"தாத்தா, இயேசு நமக்குக் கற்பித்த ஜெபத்தில் உணவுக்கும்  முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன?

மன்றாட்டுக்களின் வரிசைப்படி பார்த்தால் பாவ மன்னிப்பு கேட்பதற்கு முன்னாலேயே உணவைக் கேட்கும் படி இயேசு நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.

அதுதான் ஏன் என்று எனக்குப் புரியவில்லை"

"உனக்கு இப்போது என்ன பிரச்சனை? 

உணவு என்று எதை நினைக்கிறாய்?"

"நாம் சாப்பிடும் சாப்பாட்டைத் தான்."

"'சாப்பாட்டைத் தான் என்று நீ நினைப்பது சரிதான்.

ஆனாலும் நீ குறிப்பிடுவது எந்தச் சாப்பாடு என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?"

"நான் வாயினால் உண்ணும் உணவைத்தான் சொல்கிறேன்."

"'நீ குறிப்பிடுவது கர்த்தர் கற்பித்த ஜெபத்தில் வரும் மன்றாட்டு.

ஜெபம் ஒரு ஆன்மீக முயற்சி.

இறைத் தந்தைக்கும் நமக்கும் இடையே போடப்பட்டிருக்கும் ஆன்மீகப் பாலம்.

 இதன் வழியாகத்தான் நாம் தந்தை இறைவனிடம் செல்ல வேண்டியிருக்கிறது.

ஆன்மீக ரீதியாக அதைப் பற்றித் தியானித்தால் முழு உண்மை புரியும்.

உணவு என்ற வார்த்தை உடல் ரீதியான உணவை மட்டுமல்ல ஆன்மீக உணவையும் குறிக்கிறது.

அது மட்டுமல்ல,

அன்றாட, இன்று என்ற வார்த்தைகளுக்கு ஒரு ஆழமான பொருள் இருக்கிறது ."

''சொல்வதைப் புரியும்படி சொல்லுங்கள்."

'''உடல் ரீதியான உணவு நமது வாயினால் சாப்பிடும் சாப்பாடு என்பதை விளக்கத் தேவையில்லை.

ஆன்மீக உணவு என்றால் என்ன பொருள்படும் என்று நீ நினைக்கிறாய்?"

''உடல் வளர்ச்சியும், வலிமையும் பெற நாம் உண்ணும் தாவர உணவை உடல் ரீதியான உணவு என்று கூறுகிறோம்.

அதேபோல நமது ஆன்மா பரிசுத்தத் தனத்தில் வளர நமக்கு வேண்டிய இறை அருளை ஆன்மீக உணவு என்று கூறுகிறோம் என்று நினைக்கிறேன்.

நான் கூறுவது சரியா?"

'"இறையருள் நமது ஆன்மீக உணவு தான்.

அதைவிட மேலாக  அருளின் ஊற்றாகிய நமது ஆண்டவராகிய இயேசுவே நமது ஆன்மீக உணவு.

திருப்பலியின் போது நடைபெறும் திரு விருந்தில் நாம் நமது ஆண்டவரை உணவாக உட்கொள்கிறோம்."

"அன்றாட, இன்று என்ற வார்த்தைகளில்  என்ன விஷேசம் இருக்கிறது?"


"'பயிர்த் தொழில் புரிவோர் தங்களது வயலில் விளையும் நெல் முழுவதையும் சாக்குகளில் போட்டு கட்டி தங்களது வீட்டில் பத்திரமாக வைத்திருப்பார்கள்.


அது அவர்களது ஆண்டு முழுவதற்குமான உணவு.

அன்றாடம் கூலித் தொழில் புரிவோர் அன்றன்றைய கூலியைக் கொண்டு அன்றன்று வேண்டிய உணவைத் தயாரித்து உண்பர்.

அன்றன்று உணவு கிடைப்பது உறுதியானால் ஆண்டு முழுமைக்குமான உணவைச் சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

நமது ஆன்மீக உணவாகிய அருளை கடவுளிடமிருந்து மொத்தமாகப் பெற்று சேமித்து வைக்க முடியாது.

ஒரு நாள் முழுவதும் இடை விடாமல் ஜெபம் செய்து கிடைக்கும் அருள் நான்கு நாட்களுக்கு போதும் என நினைத்து 

அடுத்த நான்கு நாட்கள் ஜெபம் சொல்லாமல் இருக்க முடியாது.

தினமும் ஜெபம் சொல்ல வேண்டும்.  தினமும் அருளைப் பெற வேண்டும். தினமும் அருளின் உதவியால் ஆன்மீகத்தில் வளர வேண்டும்,

ஆன்மீக வாழ்வு வாழ வேண்டும்.

நாம் தினமும் ஜெபம் செய்து ஆண்டவரின் அருள் உதவியைப் பெற நமக்கு அவர் உதவ வேண்டும் என்று கேட்கிறோம்.

நாம் தினமும் ஜெபம் சொல்லவும் ஆண்டவருடைய அருள் உதவி தேவை."

"தாத்தா, ஆண்டவரின் அருள் உணவை நாம் ஒவ்வொரு நாளும் எல்லா நேரமும் ஜெபம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் திவ்விய நற்கருணை உணவை திருப்பலிக்குச் செல்லும்போது மட்டும் தானே பெற முடியும்?"

"'தினசரி திவ்ய பலி பூசைக்குச் செல்வதற்கு வேண்டிய அருள் உதவியை இறைவனிடம் கேட்கிறோம்.

தினமும் திருப்பலியிலும், திரு விருந்திலும் கலந்து கொள்வது நமது ஆன்மீக வாழ்வுக்கு மிகவும் உதவிகரமானது.

உடல் ரீதியான உணவை உட்கொள்ளு முன் நாம் என்ன செய்கிறோம்?"

"காலை உணவு உட்கொள்ளு முன் நன்கு குளிக்கிறோம்.

பகலில் உணவு உட்கொள்ளு முன்
கைகளைக் கழுவி சுத்தம் செய்கிறோம்."

"'நமது ஆன்மீக உணவாகிய திவ்ய நற்கருணையை வாங்கு
 முன் நமது ஆன்மாவை சுத்தம் செய்கிறோமா?

அல்லது பாவ அழுக்குோடு நன்மை வாங்குகிறோமா?"

''பாவ சங்கீர்த்தனம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.

ஒன்று பாவம் செய்வது குறைந்திருக்க வேண்டும்,

அல்லது அதைப் பற்றி மக்கள் கவலை படாதிருக்க வேண்டும். 

இந்த இரண்டில் எது உண்மை"

"நாம் அனைவரும் பாவிகள் என்பது உண்மை.

சாவான பாவத்தோடு நற்கருணை வாங்குவது ஒரு சாவான பாவம்.

நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு நமது குருகளுக்குக்  கொடுத்திருக்கிறார்.

நாம் பாவ மன்னிப்புப் பெற்று பரிசுத்தத் தனத்தில் வளர நமது குருக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பரிசுத்தமான உள்ளத்தோடு நாம் திவ்ய நற்கருணையை அருந்த வேண்டும்.

யூதாஸ் சாவான பாவத்தோடு ஆண்டவரை உட்கொண்டான்.

அதன் விளைவு உனக்குத்   தெரியும்.

அவனுள் சாத்தான் புகுந்தான்.

நமக்குள் சாத்தான் புக இடம் கொடுத்து விடக்கூடாது.

பரிசுத்தமான உள்ளத்தோடுதான் ஆண்டவரை உட்கொள்ள வேண்டும்."

",தாத்தா, ஆண்டு முழுமைக்கான உணவை மொத்தமாகச் சேர்த்து வைத்திருப்பது சரியா?"

"'உலக ரீதியாகப் பார்த்தால் அது சரி போல் தான் தோன்றும்.

வருங்கால செலவுக்காக வங்கியில் பணத்தைச் சேமித்து வைப்பது தவறு என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் நாம் ஆன்மீக ரீதியாக சிந்திக்க வேண்டும்.

ஒருவரிடம் ஆண்டு முழுமைக்கும் தேவையான உணவு இருக்கிறது.

பக்கத்து வீட்டுக்காரன் ஒரு அன்றாட கூலித் தொழிலாளி.

ஒரு நாள் சுகமில்லாத காரணத்தினால் அவனால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.

அன்று முழுவதும் அவனும், அவனது குடும்பமும் பட்டினி கிடக்க வேண்டியிருக்கும்.

அப்படிப்பட்ட சமயத்தில் ஆண்டு முழுமைக்கும் உணவு சேமித்து வைத்திருப்பவன் தன்னிடம் உள்ள உணவைப் பட்டினி கிடப்பவனோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதற்காகத்தான் "உன்னை நீ நேசிப்பது போல உனது அயலானையும் நேசி" என்று நமது ஆண்டவர் அன்புக் கட்டளை கொடுத்திருக்கிறார்.

இருப்பவர்கள் இல்லாதவர்களோடு தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் ஆண்டவரின் பிள்ளைகள்.

நம்மிடம் இருப்பது ஆண்டவர் நமக்குத் தந்தது.

அவர் தந்ததை அவர் சொன்னபடி பயன்படுத்த வேண்டும்.

அனைவரும் தங்களிடம் உள்ளதை பகிர்ந்து உண்ண ஆரம்பித்தால் உலகின் பசி தீரும்.

பசிப்பவர்களுக்குக் கொடுப்பதை கடவுளுக்கே கொடுக்கிறோம்."

"உலகியல் உணவைப் பகிர்ந்து கொடுக்கலாம்.

ஆனால் ஆன்மீக உணவாகிய அருளை மற்றவர்களோடு எப்படிப் பகிர்ந்து கொள்வது?"

"நமக்காக மட்டுமின்றி மற்றவர்களுக்காகவும் நாம் இறைவனிடம் ஜெபிக்க வேண்டும். 

"எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்" என்று புனிதர்களை நோக்கி ஜெபிக்கிறோம்.

நாம் மற்றவர்களுக்காக வேண்டிக் கொண்டால் நமக்குள் புனிதத்துவம் வளரும்.

இன்று விண்ணகத்தில் புனிதர்களாக இருப்பவர்கள்

 உலகில் வாழ்ந்த போது தங்களுக்காக மட்டுமல்லாமல்

 மற்றவர்களது நலனுக்காகவும் தங்களது வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்தார்கள்.

நாமும் அப்படி வாழ வேண்டும் என்று தான் நமது ஆண்டவர் விரும்புகிறார்.

அதனால் தான் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும் என்று ஜெபிக்க சொல்லித் தந்திருக்கிறார்.

'எனக்கு' மட்டும் என்று சொல்லித் தரவில்லை.

'எங்களுக்கு' என்று சொல்லும் போது நாம் மற்றவர்களுக்காகவும் வேண்டிக் கொள்கிறோம்.

அதை உணர்ந்து ஜெபத்தைச் சொல்ல வேண்டும்.

மனப்பாடமாக மட்டும் சொல்லக்கூடாது.

நமது ஜெபம் நமது மனதிலிருந்து வர வேண்டும்."

 அடிக்கடி சொல்ல வேண்டிய ஜெபம்.

"நித்திய பிதாவே,

உமது திருமகனின்

வேதனை மிகுந்த பாடுகளைப் பார்த்து,

என் மீதும்,

எனது குடும்பத்தின் மீதும்,

அகில உலகத்தின் மீதும்

இரக்கமாயிரும்,

ஆமென்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment