Wednesday, January 3, 2024

"வந்து பாருங்கள்."(தொடர்ச்சி)

"வந்து பாருங்கள்."
(தொடர்ச்சி)

வந்து பாருங்கள்." என்று இயேசு அழைத்தவுடன் இரண்டு சீடர்களும் அவரோடு சென்று அவரோடு தங்கினார்கள்.

வெறுமனே இயேசுவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதற்காக அவர்கள் அவரோடு தங்கவில்லை.

இயேசுவோடு அவர்கள் மனம் திறந்து பேசினார்கள்.

இயேசு அவர்களோடு பேசினார்.

அவர்களது வாயும் காதுகளும் பேசியதை விட உள்ளங்கள் அதிகம் பேசின.

இயேசுவோடு தங்கி உரையாடிய இருவரில் ஒருவர் பெலவேந்திரர்,

சீமோன் இராயப்பரின் சகோதரர்.

அவர் தனது இறை அனுபவத்தை வாழ்வின் அனுபவமாக மாற்ற களத்தில் இறங்கினார்.

உடனே தனது சகோதரிடம் சென்று, மெசியாவைக் கண்டு உரையாடிய தனது இறை அனுபவத்தை அவரோடு பகிர்ந்து கொண்டார்.

அதோடு நிற்கவில்லை, அவரை இயேசுவிடம் அழைத்து வந்தார். 

நாமும் கூட அநேக சமயங்களில் நமது இறை அனுபவத்தை, மற்றவர்களோடு நமது வாய் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.

ஆனால் அவர்களை இயேசுவிடம் அழைத்து வருகிறோமா?

பகிர்ந்து கொள்வது முக்கியம், அழைத்து வருவது அதைவிட முக்கியம்.

எப்படி அழைத்து வருவது?

நமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும்போதே அவர்களும் நமது அனுபவத்தை அனுபவிக்க மனதில் ஆசை ஏற்படும் வகையில் நாம் பேச வேண்டும்.

ஆசையைத் தூண்டி விட்ட பின் அவர்களை இயேசுவிடம் அழைத்து வர வேண்டும்.

அதன் பின் அவர்களும் இயேசுவை அனுபவிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இவ்வாறு நமது சிந்தனை, சொல், செயல் மூலம் நமது இறை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது தான் இயேசு நம்மிடம் எதிர்பார்க்கும் நற்செய்திப் பணி.

Charity begins at home என்பார்கள்.

நற்செய்திப் பணியும் ஒரு பிறர் அன்புப் பணி தான்.


நாம் நம்மை நேசிப்பது போல மற்றவர்களையும் நேசித்தால்,

நாம் மீட்படைய விரும்புவது போல மற்றவர்களும் மீட்படைய வேண்டும் என்று விரும்புவோம்.

நாம் செல்லும் இடத்திற்கு நமது பிறரும் செல்ல வேண்டும் என்று ஆசித்தால் நாம் செல்லும் வழியை அவர்களுக்கு அறிவிப்போம்.

நம்மைப் போல மற்றவர்களும் விண்ணகத்திற்குச் செல்ல வேண்டும் என்று நாம் விரும்பினால்,

நாம் செல்லும் நற்செய்தி வழியை அவர்களுக்கும் காண்பிப்போம்.

இந்த பிறர் அன்புப் பணியை நாம் முதலில் நமது இல்லத்திலேயே ஆரம்பிக்க வேண்டும்.

சில பெற்றோர் ஒழுங்காக ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலிக்கு வருகிறார்கள்.

ஆனால் படித்துக் கொண்டிருக்கும் தங்களது பிள்ளைகளை Tution க்கு அனுப்பிவிட்டு தாங்கள் மட்டும் வருகிறார்கள்.

நாம் ஒரு திருமண வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்றால் நமது பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டுதான் செல்வோம்.

பிள்ளைகளோடில்லாமல் நம்மால் திருமண விருந்தை தனியாகச் சாப்பிட முடியாது.

அப்படி சாப்பிடுபவர்கள் பிள்ளைகள் மீது பற்றில்லாதவர்கள்.

தங்கள் வயிற்றுக்காக மட்டும் வாழ்பவர்கள்.

பிள்ளைகளை வேறு பணிக்கு அனுப்பிவிட்டு தாங்கள் மட்டும் கோவிலுக்கு வருபவர்கள் 

விண்ணகத்துக்கும் அப்படியே செல்ல வேண்டும் என்று விரும்புவர்களாகத்தான் இருக்கும்.

தாங்கள் செல்லும் விண்ணகத்திற்குத் தங்கள் பிள்ளைகள் வரக்கூடாது என்று எண்ணுபவர்கள் எப்படிப்பட்ட பெற்றோர்? 

பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆன்மீக வாழ்வில் முன் மாதிரி கையாக இருப்பதோடு அவர்களுக்கும் ஆன்மீக வாழ்வில் பயிற்சி கொடுக்க வேண்டும்.

இறை வசனங்களை வாசித்தால் மட்டும் போதாது,

கேட்டால் மட்டும் போதாது,

ஞாபகத்தில் வைத்திருந்தால் மட்டும் போதாது,

அவற்றை நமது வாழ்க்கை அனுபவமாக மாற்ற வேண்டும்.

நாம் விண்ணக நித்திய பேரின்ப வாழ்வை அனுபவிக்கப் போகின்றவர்கள்.

இறைவன் எவ்வளவு இனியவர் என்று ருசித்துப் பாருங்கள்.

ருசியை அனுபவித்துப் பாருங்கள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment