Friday, January 5, 2024

கண்ணுக்குப் புலப்படாதது, காதுக்கு எட்டாதது, மனித உள்ளத்தில் எழாதது. கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்தது". (1கொரி.2:9)(தொடர்ச்சி)

கண்ணுக்குப் புலப்படாதது, காதுக்கு எட்டாதது, மனித உள்ளத்தில் எழாதது. கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்தது". (1கொரி.2:9)
(தொடர்ச்சி)

''தாத்தா, மோட்சம் நேரம், இடம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது என்று சொன்னீர்கள்.

மோட்ச வாழ்வு ஒரு வாழ்க்கை நிலை என்று சொன்னீர்கள்.

ஆகவே இடத்துக்கு அப்பாற்பட்டது என்று சொன்னீர்கள்.

நமது உலக வாழ்வு நமது பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்டது.

அதாவது பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே உள்ள காலத்துக்கு, அதாவது, நேரத்துக்கு உட்பட்டது.

உலகில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மரிக்கிறோம்.

அந்த நேரத்தில் தான் நமது ஆன்மா மோட்சத்திற்குள் நுழைகிறது.

அந்த நேரத்திலிருந்து தானே விண்ணக வாழ்வு ஆரம்பிக்கிறது.

ஆனால், அங்கு நேரம் இல்லை என்கிறீர்கள். அது எப்படி? "

"'உலகில் நமது வாழ்வு நாம் தாயின் வயிற்றில் உற்பவிக்கும் போது ஆரம்பிக்கிறது.

மோட்சத்தில் கடவுளின் வாழ்வு எப்போது ஆரம்பிக்கிறது?"

''கடவுளின் வாழ்வுக்கு ஆரம்பமே இல்லை. முடிவும் இல்லை. அவர் நித்தியர்."

'''கடவுளுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்றால் மோட்சத்துக்கும் துவக்கமும் முடிவும் இல்லை என்று தானே அர்த்தம்.

ஆகவே மோட்சத்தில் நேரம் இல்லை.

உலகில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இறக்கும் மனிதனின் ஆன்மா அந்த வினாடியே நித்தியத்துக்குள் நுழைந்து விடுகிறது.

அதாவது நித்தியராகிய கடவுளுக்குள் நுழைந்து விடுகிறது.

உலக கணக்குப்படி நல்ல கள்ளனின் ஆன்மா கி.பி.33 ஆம் ஆண்டு மோட்சத்துக்குள் நுழைந்தது.

இன்று மரிக்கும் ஒரு மனிதனின் ஆன்மா மோட்சத்துக்குள் நுழைகிறது என்று வைத்துக் கொள்வோம்.

உலக கணக்குப்படி நல்ல கள்ளன் மோட்சத்துக்குள் நுழைந்து 1991ஆண்டுகள் கழித்து நுழைகிறது.

  இந்தக் காலக் கணக்கு பூமியில் மட்டும் தான். 

ஆனால் விண்ணகத்தில் இந்த கணக்கு இல்லை.

அங்கு வாழும் அனைத்து ஆன்மாக்களும் நித்தியத்தில் தான் வாழ்கின்றன.

உலகில் மனிதன் இடம் விட்டு இடம் பயணிக்கிறான். பயணத்துக்கு நேரம் ஆகிறது.

விண்ணகத்தில் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேரமும் ஆகாது"

''புனித அந்தோனியார் மோட்சத்தில் வாழ்கிறார்.

நாம் தமிழ்நாட்டிலிருந்து அவரை நோக்கி ஜெபிக்கிறோம்.

நாம் ஜெபிக்கும் போது அமெரிக்காவில் உள்ளவர்களும் ஜெபிக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் ஜெபிக்கிறார்கள்.

எல்லோருடைய ஜெபத்தையும் அவரால் எப்படிக் கேட்க முடிகிறது?"

"'அவர் வாழ்வது கடவுளுக்குள். உலகில் உள்ள அத்தனை கோடி மக்களும் ஒரே நேரத்தில் அவரை நோக்கி ஜெபித்தாலும்,

உலகக் கணக்குப்படி அதே நேரத்தில் அவர்களது ஜெபம் அவர் வழியாகக் கடவுளை அடைகிறது.

நீ தமிழ்நாட்டிலிருந்து ஒரு புனிதரை நோக்கி ஜெபிக்கிறாய்.

அதே சமயத்தில் உனது நண்பன் இங்கிலாந்திலிருந்து அதே புனிதரை நோக்கி ஜெபிக்கிறான்.

இருவருடைய செபத்தையும் தான் அந்தப் புனித கேட்கிறார்.

உங்களுடைய ஜெபத்துக்கு பூமியில் நேர வித்தியாசம் இல்லை, விண்ணகத்தில் நேரமே இல்லை.

உலக எண்ணப்படி உன் அருகில் இருக்கும் புனிதர் அவன் அருகிலும் இருக்கிறார்.

ஏனெனில் விண்ணகத்தில் இடம் இல்லை, ஆகவே தூரம் இல்லை.

கத்தோலிக்கத் திருச்சபை ஒரு இறைக் குடும்பம்.

தந்தை இறைவன்.

பூமியில் வாழும் விசுவாசிகளும், விண்ணகத்தில் வாழ்பவர்களும்

இறைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

அனைவரும் இறையன்பினாலும் பிறரன்பினாலும் இணைக்கப்பட்டிருக்கிறோம்.

மோட்ச வாசிகள் நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைந்து விட்டதால் அவர்களுக்கு நம்முடைய உதவி தேவையில்லை.

ஆனால் உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கும், 
பூமியில் வாழும் நமக்கும் 

அவர்களுடைய உதவி தேவை.

நாம் அவர்களை நோக்கி வேண்டும் போது,

அவர்கள் இறைவனிடம் வேண்டி அவரிடமிருந்து நமக்கு வேண்டிய உதவிகளைப் பெற்றுத் தருகிறார்கள்.

நாம் இறைவனிடம் நேரடியாகவும் வேண்டலாம், விண்ணகவாசிகள் மூலமாகவும் வேண்டலாம்.

அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒரே தந்தையின் பிள்ளைகள்.

நாம் இறைவன் வாழும் இல்லம்.

இறைவன் நம்முள் வாழ்கிறார்.

மோட்ச வாசிகள் அவருக்குள் வாழ்கிறார்கள்.

ஆகவே மோட்சம் நமக்குள்ளேயும் இருக்கிறது.

"கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது.''
Luke 17:20

"இப்போ புரிகிறது. கடவுளும் அவருக்குள் வாழும் புனிதர்களும் நமக்குள்ளே இருப்பதால் நமது ஜெபம் அவர்களுக்கு உடனே கேட்கும்.

அவர்களும் நமது தேவைகளைப் புரிந்து நமக்கு உதவி செய்து கொண்டேயிருக்கிறார்கள்."

",அப்படியானால், தாத்தா, நாம் கைகளை ஆட்டிக் கொண்டு, சப்தம் போட்டு ஜெபிக்க வேண்டிய அவசியம் இல்லையே. மௌனமாக ஜெபித்தால் போதுமே.''

"'மனதுக்குள் தியானித்துக் கொண்டே ஜெபிக்கும் போது தான் நம்மால் மனதை ஒருநிலைப்படுத்தி ஜெபிக்க முடியும்.

மனதை ஒருநிலைப்படுத்தி ஜெபித்தால் தான் உள்ளங்கள் பேசும்.

உள்ளங்கள் இணைவது தான் உண்மையான ஜெபம்.

சில சமயங்களில் உள்ளத்தில் எழும் எண்ணங்களை வெளிப்படுத்த பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காது.

ஆனால் இரண்டு உள்ளங்கள் நேரடியாகப் பேசும் போது வார்த்தைகள் தேவையில்லை."

"இறைவன் எவ்வளவு இனிமையானவர் என்று ருசித்துப் பாருங்கள் என்பதன் பொருள் இப்போதுதான் புரிகிறது.

இறைவனை நமது உள்ளத்தால் ருசித்துப் பார்க்க வேண்டும்.

இறைவனை ருசித்துப் பார்க்கும்போது மோட்சத்தையே ருசித்துப் பார்க்கிறோம்.

We have a pretaste of Heaven when we meditate on God.

நாம் இறைவனைத் தியானிக்கும் போது 

மோட்ச பேரின்பத்தை அங்கு செல்வதற்கு முன்னாலேயே இங்கேயே ருசித்துப் பார்க்கிறோம். 

"உள்ளத்தால் உம்மை நினைக்கும் போது, இறைவா,

உம்மோடு வாழ்கிறேன், இறைவா.

உம்மோடு நான் வாழ்கின்ற வாழ்வு,

விண்ணிலும் தொடர அருள் புரியும், இறைவா."


இறைவனோடு ஜெபத்தில் ஐக்கியமாவோம்.

விண்ணக வாழ்வை மண்ணகத்திலேயே தொடங்குவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment