Monday, January 29, 2024

நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்." (மாற்கு நற்செய்தி 5:28)

"நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்." 
(மாற்கு நற்செய்தி 5:28)


 பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண்

 
 இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து

"நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக் கொண்டே

 அவரது மேலுடையைத் தொட்டார். 

 தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றார்.

இயேசு மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, 

"என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்று கேட்டார். 


 அப்பெண் அஞ்சி நடுங்கிக் கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, 

நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். 


இயேசு அவரிடம், "மகளே, உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று.

அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" என்றார். 

இயேசு கடவுள். முக்காலமும் அறிந்தவர். 

சுகம் இல்லாத ஒரு பெண் தான் சுகம் பெறுவதற்காக விசுவாசத்துடன் தனது மேலாடையை தொடுவாள் என்பது அவருக்கு நித்திய காலமாகவே தெரியும்.

இருந்தாலும் உண்மையை குணமான பெண்ணின் வாயிலிருந்து வரவழைக்க வேண்டும்,

அதாவது,

அவளே விசுவாச அறிக்கை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்,

"என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்று கேட்டார். 

அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல,

உலகில் உள்ள அத்தனை பேருக்கும் உடலில் ஏதாவது ஒரு நோய் இருக்கும்.

அனைவரும் நோயில்லாமல் வாழவே விரும்புகிறோம்.

கடவுளுக்கு எல்லாம் முடியும் என்பது நமக்கு தெரியும்.

நாம் மீட்பராக ஏற்றுக் கொண்டுள்ள இயேசு கடவுள் என்பதும் நமக்கு தெரியும்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று இயேசுவே வாக்கு கொடுத்திருப்பதும் நமக்கு தெரியும்.

கேட்பதை விசுவாசத்தோடு கேட்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியும்.

இரத்தப் போக்கினால் வருந்திய பெண் விசுவாசத்தோடு இயேசுவின் மேலாடையை மட்டுமே தொட்டாள், குணம் அடைந்தாள்.

நாம் திவ்ய நற்கருணை வாங்கும் போது இயேசுவையே நமது நாவினால் தொடுகிறோம்.

நமது நாவினால் அவரை ருசித்து, புசித்து விழுங்கிய பின் அவரது உடல் நமது உடலோடு ஐக்கியமாகி விடுகிறது.

நாமும் இயேசுவும்

"இருவர் அல்ல, ஒருவர்."

 என்று கூறுமளவிற்கு ஐக்கியமாகி விடுகிறோம்.

நமது உடல் நோய்கள் நீங்கி நாம் குணம் பெற வேண்டுமென்று இயேசுவிடம் கேட்கிறோம்.

நம்மையே விசுவாசிகள் என்று அழைத்துக் கொள்ளும் நம்மிடம்

 உண்மையாகவே விசுவாசம் இருந்தால் 

நாம் இயேசுவை உணவாக உட்கொண்ட வினாடியே நமது உடலில் உள்ள அத்தனை நோய்களும் குணமாகி விட வேண்டுமே!

குணமாகி விடவில்லை என்றால் நம்மிடம் விசுவாசம் சிறிது கூட இல்லை என்று தானே அர்த்தம்.

இயேசுவிடம் நாம் வேண்டுவது கிடைக்க வேண்டும் என்பதற்காக வேளாங்கண்ணி, பூண்டி, உவரி போன்ற திருத்தலங்களுக்குத் திருயாத்திரையாகப் போகிறோம்.

அங்கெல்லாம் இருக்கும் அதே ஆண்டவர்தான் நமது உள்ளூர்க் கோவிலிலும் இருக்கிறார்.

வீட்டுக்குப் பக்கத்திலுள்ள கடையில் உப்பு இருக்கும்போது அதை வாங்க 10 மைல் தொலைவில் உள்ள கடைக்குப் போவோமா?

திருத்தலங்களுக்குத் திருயாத்திரை போக வேண்டாம் என்று சொல்லவில்லை.

வீட்டில் சாப்பாடு இருந்தாலும் திருமண விருந்துக்குப் போவதில்லை?

உள்ளூர்க் கோவிலில் தினமும் திருப்பலி இருந்தால் தினமும் திருப்பலிக்குப் போகலாமே!

குறைந்தபட்சம் ஞாயிற்றுக்கிழமை முழுத் திருப்பலிக்குப் போகலாமே!

போகிறோமா?

முழுமையான விசுவாசத்தோடு திருப்பலியிலும், திருவிருந்திலும் கலந்து கொள்கிறோமா?

இப்போது நண்பர் ஒருவர் சொல்கிறார்,

"தாங்கள் உடல் நோய்கள் குணமாவதற்காகத் திருப்பலிக்குச் செல்லவில்லை,

ஆன்மீக நோயாகிய பாவத்திலிருந்து விடுதலை பெறவும்,

ஆன்மீக வளர்ச்சிக்காக ஆன்மீக உணவை உண்பதற்காகவும் மட்டுமே திருப்பலிக்குச் செல்கிறோம்."

கூறுவது முற்றிலும் சரி. அதற்காகத்தான் திருப்பலியிலும் திரு விருந்திலும் கலந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும் அவர்கள் தங்களைத் தாங்களே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்.

"அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்து எங்கள் ஆன்மாவைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறோமா?"

தூய்மையான உள்ளத்தோடு திருவிருந்தில் கலந்து கொண்டால்தான்

ஆன்மீகத்தில் வளர்ச்சி அடைய முடியும்.

உடல் நோய்கள் குணமாவது முக்கியமல்ல.

அவற்றைச் சிலுவைகளாக ஏற்றுக்கொண்டு,

அவற்றைச் சுமந்து கொண்டு ஆண்டவர் பின் சென்றால் நாம் பாக்கியசாலிகள்.

அதற்கும் விசுவாசம் வேண்டும்.

விசுவாசம் தான் நமது கிறிஸ்தவ வாழ்வின் உயிர்.

உயிரோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment