Saturday, January 27, 2024

ஞானம் நிறைந்த வாழ்வு.ன

ஞானம் நிறைந்த வாழ்வு.


ஒரு மன்னருடைய பிறந்த நாளன்று அவரை வாழ்த்துவதற்காக ஏராளமான பேர் அரண்மனைக்கு வந்திருந்தார்கள்.

மன்னருக்கு சிறு பிள்ளைகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும்.

ஆகவே ஏராளமான பள்ளிக்கூட மாணவர்கள் அரண்மனைக்கு வந்திருந்தார்கள்.

அவர்களுக்குக் கொடுப்பதற்காக நிறைய சாக்லெட்களை மன்னர் வாங்கி வைத்திருந்தார்.

அவர் மாணவர்களை பார்த்து,

"உங்களுக்கு சாக்லெட் என்றால் ரொம்பப் பிடிக்கும் என்று எனக்கு தெரியும்.

எனது சிம்மாசனத்துக்கு அருகில் உள்ள பெரிய பெட்டியில் 
சாக்லெட்கள் நிறைய உள்ளன.

ஒவ்வொருவராக வந்து இரண்டு கைகளாலும் எவ்வளவு சாக்லெட் களை அள்ள முடியுமோ அவ்வளவு அள்ளி உங்களது சட்டைப் பையில் போட்டுக் கொள்ளுங்கள்."

மாணவர்கள் வரிசையாக வந்து மன்னர் சொன்னபடி செய்தார்கள்.

ஒரு ஐந்து வயது சிறுவன் மட்டும் சாக்லெட்களை அள்ளாமல் மன்னரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"தம்பி ஏன் சாக்லெட்களை அள்ளாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?"

"அரசே, உங்கள் கரங்களால் அவற்றை அள்ளி ஒரு பையில் போட்டு என்னிடம் தாருங்கள்."

"உனது கைகளுக்கு என்ன பிரச்சனை?"

பையன் இரண்டு கைகளையும் விரித்துக் காண்பித்தான்.

"புரிகிறது. உனது கைகள் சிறியவை. சட்டைப் பையும் சிறியது.

ஆகவே தான் எனது கைகளால் அள்ளி ஒரு பையில் போட்டு தர சொல்கிறாய்.

உனது மூளையைப் பாராட்டுகிறேன்."

மன்னர் சிறுவன் சொன்னபடியே செய்தார்.

அதற்குப் பின்னால் வந்த மாணவர்கள் அந்த சிறுவனையே பின்பற்றினார்கள்.

அனேக சமயங்களில் சிறுவர்களுக்கு இருக்கும் சிந்திக்கும் திறனும், விவேகமும் பெரியவர்களிடம் இருப்பதில்லை.

சிறு குழந்தை தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தன்னுடைய தாயை முற்றிலுமாக பயன்படுத்திக் கொள்கிறது.

அதற்கு அது பயன்படுத்தும் ஒரே ஆயுதம் அழுகை.

ஆரம்பப் பள்ளியில் படிக்கும் சிறுவர் சிறுமியர் தங்களது பள்ளிக்கூடத் தேவைகளுக்கு தங்களது பெற்றோரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நாம் பெரியவர்கள் நாம் நினைத்ததை நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில்

 யார் யாரை எப்படிப் பயன்படுத்த வேண்டுமோ அப்படிப் பயன்படுத்த தவறிவிடுகிறோம்.

ஆன்மீக ரீதியாக நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதை நினைத்துப் பார்த்தால் நமது இயலாமை நமக்கு புரியும்.

நமது தாயால் நாம் கருத்தரிக்கப் படுவதற்கு முன் நாம் ஒன்றும் இல்லாமல் இருந்தோம்.

ஒன்றுமில்லாமையால் ஒன்றும் செய்ய முடியாது.

 நம்மில் முழுமையாகச் செயல் புரிந்தவர் எல்லாம் வல்ல கடவுள்.

எல்லாம் வல்லவரால் எல்லாம் செய்ய முடியும்.

தனது பண்புகளில் அளவில்லாத கடவுளால் செய்ய முடிவதை அளவுள்ள நம்மால் செய்ய முடியாது.

இது நமக்குத் தெரியும்.

நமக்குத் தெரிவது அறிவு.

அறிவைப் பயன்படுத்தத் தெரிவது ஞானம்.

நமக்கு அறிவு இருக்கும் அளவுக்கு ஞானம் இல்லை.

அதனால்தான் கடவுளால் எல்லாம் முடியும் என்ற நமது அறிவு நமக்குப் பயன்படும் அளவுக்கு அதைப் பயன்படுத்தத் தெரியவில்லை.

முதலில் எழுதி இருந்த கதையில் வரும் ஐந்து வயது சிறுவனுக்கு இருக்கும் ஞானம் கூட வயதில் பெரியவர்களாகி விட்ட நம்மிடம் இல்லை.

சிறிய கைகளால் அள்ளுவதை விட பெரிய கைகளால் அதிகம் அள்ளலாம் என்ற அறிவு அவனுக்கு இருந்தது.

அதற்காக பெரிய கைகளை உடைய மன்னரைப் பயன்படுத்தலாம் என்ற ஞானமும் அவனுக்கு இருந்தது.

தனது ஞானத்தை பயன்படுத்தி அதிகமான சாக்லட் களைப் பெற்றுக் கொண்டான்.

நமது அன்னை மரியாளை

 "ஞானம் நிறை கன்னிகையே" என்று அழைக்கிறோம்.

அருளால் நிறைந்த அவள் தனது அருள் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் 

அருளின் ஊற்றாகிய ஆண்டவரின் அடிமையாக வேண்டும் என்ற ஞானம் அவளுக்கு இருந்ததால்தான்

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது சொற்படியே எனக்கு ஆகக் கடவது"

என்று தன்னையே கடவுளுக்கு அர்ப்பணித்தாள்.

கடவுளின் சர்வ வல்லமை வாய்ந்த சொல் அவளிடம் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டது.

படைக்கப்பட்ட அவள் படைத்தவருக்கே தாயாக மாறினாள்.

சர்வ வல்லவக கடவுள் அவள் சொல்லுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

இயேசு தனது அன்னையை நமது அன்னையாக நமக்குத் தந்ததற்குக் காரணமே நாமும் அவளைப் போல ஞானம் உள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

நாம் ஒன்றும் இல்லாமையிலிருந்து சர்வ வல்லப கடவுளால் படைக்கப் பட்டிருக்கிறோம் என்று நமக்கு தெரியும்.

அவர் நம்மை தனக்காகத்தான் படைத்திருக்கிறார் என்பதும் நமக்குத் தெரியும்.

"ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்.

 அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத்தேயு நற்செய்தி 6:33)

என்று அவர் கூறியிருப்பதும் நமக்குத் தெரியும்.

ஆகவே நாம் அவருக்காக மட்டுமே வாழ வேண்டும் என்பதும் நமக்குத் தெரியும்.

அவர் நமக்காக மட்டுமே திவ்ய நற்கருணையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதும் நமக்குத் தெரியும்.

நாம் நமது முயற்சியால் நமக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்வதை விட அதிகமான அளவு கடவுளிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்பதும் நமக்குத் தெரியும்.

இவ்வளவும் தெரிந்திருந்தும் நாம் நமது முயற்சியால் நமக்காக மட்டும் வாழ்ந்து கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

நமக்கு அறிவு இருக்கும் அளவுக்கு ஞானம் இல்லை என்று அர்த்தம்.

நமது அன்னை தன்னை இறைவனின் அடிமையாக அர்ப்பணித்து அவருக்காக மட்டும் வாழ்ந்தது போல 

நாமும் நம்மை இறைவனுக்கு முற்றிலுமாக அர்ப்பணித்து அவருக்காக மட்டும் வாழ்வோம்.

செடி வைத்தவனுக்குத் தண்ணீர் ஊற்றத் தெரியும்.

படைத்தவருக்குத் தனது படைப்பை காப்பாற்றத் தெரியும்.

நம்மை இறைவன் கையில் ஒப்படைத்து விட்டு அவருக்காக வாழ்வோம்.

நம்மை முற்றிலுமாக அவர் கவனித்துக் கொள்வார்.

நாம் அவருக்காக மட்டும் வாழ்வதே ஞானம் நிறைந்த வாழ்வு.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment