(தொடர்ச்சி)
பாவம் ஆன்மீக வாழ்வைச் சார்ந்த தீமை.
பாவத்தினால் நமது ஆன்மாவின் நல வாழ்வு பாதிக்கப்படுகிறது.
நோய் நொடிகள், விபத்துக்கள், குழந்தைப் பேரின்மை, கடன் தொல்லைகள், வேலையின்மை, உணவின்மை, உடையின்மை, இருப்பிடமின்மை போன்ற துன்பங்களால் ஆன்மாவிற்கு எந்த தீங்கும் இல்லை.
இவை நமது உடலைச் சார்ந்த வாழ்க்கையைப் பாதிக்கின்றன.
சௌகரியமான உடலைச் சார்ந்த வாழ்க்கையை விரும்புகிறவர்கள் இவற்றைத் துன்பங்கள் என்று அழைப்பார்கள்.
துன்பங்களால் நமக்கு நன்மையா, கேடா?.
ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் குழந்தைப் பாக்கியம் இல்லை.
புனிதர்களின் திருத்தலங்களுக்குத் திருயாத்திரையாகச் சென்று குழந்தை வரம் கேட்கிறார்கள்.
பதினோராவது ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
பிறந்தநாளையும் ஞானஸ்தானம் பெற்ற நாளையும் ஒரு பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
இறைவனுக்கு நன்றிப் பலி செலுத்துகிறார்கள்.
அவர்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
ஆனால் குழந்தைக்கு ஒரு வயது ஆகும்போது, அது நோய்வாய்ப் படுகிறது.
எவ்வளவோ செலவழித்து மருத்துவம் பார்த்தும்,
குழந்தையைக் காப்பாற்றும் படி இறைவனிடம் வேண்டியும்
பயனின்றி குழந்தை இறந்து விடுகிறது.
இப்போது பெற்றோரின் மனநிலை எப்படி இருக்கும்?
எப்படி இருக்க வேண்டும்?
அவர்கள் உலகைச் சார்ந்த நிலையில் சிந்தித்தால் அவர்களுக்கு கடவுள் மேல் கோபம் வரும்.
குழந்தை பிறந்த போது தாங்கள் செலுத்திய நன்றிகளை எல்லாம் மறந்து விடுவார்கள்.
கடவுளைப் பற்றி குறை சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.
இது கிறிஸ்தவ மனநிலை அல்ல.
அவர்களை பொருத்தமட்டில் குழந்தையின் நோயும், மரணமும் விரும்பத்தகாதவை.
உண்மையில் அவை விரும்பத்தகாதவையா?
ஆன்மிக ரீதியில் அவர்களது மனநிலை எப்படி இருக்க வேண்டும்?
உண்மையில் குழந்தையைப் படைத்தவர்கள் பெற்றோர் அல்ல.
நமது முதல் பெற்றோரை நேரடியாக படைத்த கடவுள்,
பெற்றோரை ஒரு கருவியாகப் பயன்படுத்தி அவர்கள் மூலம் மற்ற மனிதர்களைப் படைக்கிறார்.
படைக்கப்பட்ட குழந்தையின் மேல் முழு உரிமையும் உடையவர் கடவுள் மட்டுமே.
உலகில் குழந்தையைப் படைத்தது அது உலகில் வாழ்ந்து,
மரணம் அடைந்தபின் அவரோடு நித்திய பேரின்பத்தில் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.
பெற்றோர் குழந்தையை வளர்த்து ஆளாக்குவதும் அதே நோக்கத்திற்காகத்தான்.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக செயலாற்றிக் கொண்டிருக்கும் ஒருவர், அந்த நோக்கம் நிறைவேறும் போது மகிழ்ச்சியடைய வேண்டுமா, வருத்தப்பட வேண்டுமா?
அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணிக்கும் ஒருவர் அமெரிக்காவை அடைந்த பின் அதற்காக மகிழ வேண்டுமா, வருந்த வேண்டுமா?
24 மணி நேர பயணத்தை வேகமாக பயணித்ததன் மூலம் 10 மணி நேரத்தில் முடித்து விட்டால்,
வேகமாக சென்று சீக்கிரம் நோக்கத்தை அடைந்ததற்காக நமது மகிழ்ச்சி அதிகரிக்க வேண்டுமா?
அல்லது வருத்தம் அதிகரிக்க வேண்டுமா?
ஒரு குழந்தை பிறந்து,
வளர்ந்து,
பையனாகி,
வாலிபனாகி,
ஆளாகி,
கிழவனாகி,
வாழ்க்கையில் நேரும் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்து விட்டு,
எழுபது வயதில் மரணித்து,
உத்தரிக்கிற தலத்தில் உத்தரித்துவிட்டு
மோட்சத்திற்குச் செல்லுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
இன்னொரு குழந்தை பிறந்து, பாவங்கள் எதுவும் செய்யாமல், ஒரு ஆண்டு மட்டும் வாழ்ந்து, மரணித்தால் அது உத்தரிக்கிற தலத்திற்குச் செல்லாமல் நேரடியாக நித்திய பேரின்ப வாழ்வுக்குச் செல்கிறது.
இந்த இரண்டு குழந்தைகளில் எது பாக்கியம் பெற்ற குழந்தை?
ஞானஸ்தானம் பெற்ற பின் பாவமே செய்யாமல் மரணிக்கும் குழந்தைதான் பாக்கியம் பெற்ற குழந்தை.
ஏனெனில் அதுதான் உலகில் பாவம் எதுவும் செய்யாமல்,
எந்தவித கஷ்டங்களையும் அனுபவிக்காமல் மோட்சத்திற்குச் செல்கிறது.
பெற்றோர் தங்கள் குழந்தையை ஒரு வயது ஆகும்போது விண்ணக வாழ்வுக்கு அழைத்துக் கொண்ட கடவுளுக்கு நன்றி கூற வேண்டுமா?
அவரைக் குறை கூற வேண்டுமா?
கிறிஸ்து பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மரணித்த மாசில்லாக் குழந்தைகள்தான் உலகில் பிறந்த எல்லாக் குழந்தைகளிலும் பாக்கியம் பெற்ற குழந்தைகள்.
நமது வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஆன்மீகக் கண் கொண்டு பார்க்க வேண்டும்.
அப்போதுதான் உண்மை புரியும்.
நமது ஆண்டவர் நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகளுக்கு உட்படுத்தியது தனது உடலைத் தான்.
பூங்காவனத்தில் இயேசு இரத்த வேர்வை சிந்தியதிலிருந்து,
சிலுவையில் தொங்கிய போது விலாவில் ஒரு படை வீரன் ஈட்டியால் குத்திய போது கடைசி சொட்டு ரத்தமும், தண்ணீரும் வெளிவந்தது வரை
அவருடைய இரத்தத்தை முழுவதையும் இழந்தது அவருடைய உடல்தான்.
நமது உடலைச் சார்ந்த துன்பங்கள் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டால் அவை சிலுவைகளாக மாறி விடுகின்றன.
அந்தச் சிலுவைகளைச் சுமந்தால்தான் நாம் இயேசுவின் சீடர்களாக வாழ முடியும்.
நமது ஆன்மீக நலனுக்காகத் தான் இயேசு நமக்குத் துன்பங்களை அனுமதிக்கிறார்.
துன்பங்களை ஏற்றுக் கொள்வோம்,
அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக் கொடுப்போம்,
நமது சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவைப் பின்பற்றுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment