Sunday, January 7, 2024

உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்.(மாற்கு.1:18)

உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்.
(மாற்கு.1:18)

இராயப்பர், பெலவேந்திரர், அருளப்பர், வியாகப்பர் ஆகிய நால்வரும் மீன் பிடிக்கும் தொழிலையே வாழ்க்கைத் தொழிலாக கொண்டவர்கள்.

பொழுது போக்குக்காக மீன் பிடிக்கவில்லை, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக மீன் பிடித்தார்கள்.

இயேசு அவர்களை அழைத்தவுடன் தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாக வைத்திருந்த மீன் பிடிக்கும் வலைகளைக் கிடந்த இடத்திலேயே போட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.


 இயேசு அவர்களைப் பார்த்து, 'என் பின்னே வாருங்கள். நீங்கள் மனிதரைப் பிடிப்பவராய் இருக்கச் செய்வேன்' என்று சொன்னபோது 
(Mark 1:18)

"மனிதர்களைப் பிடிப்பது என்றால் என்ன?"

என்று அவர்கள் விளக்கம் கேட்கவில்லை.

இயேசு அழைத்தார்
அவரது அழைப்பை அவர்கள் ஏற்றார்கள்.

உலக வாழ்க்கைக்குரிய சாதனங்களை விட்டு விட்டு அவர் பின்னால் சென்றார்கள்.

அன்று அவர்களை அழைத்த இயேசு இன்று நம்மையும் அழைக்கிறார்.

அன்று அவர்களை எதற்காக அழைத்தாரோ அதற்காகவே நம்மையும் அழைக்கிறார்.

"மனிதர்களைப் பிடிப்பதற்காக."

மனிதர்களைப் பிடிப்பது என்றால் என்ன?

இறையன்பு + பிறர் அன்பு = இயேசு.

இயேசு இறைவன். அவர் தன்னைத் தானே நேசிக்கிறார்.

தன்னை நேசிப்பது போல தன்னால் படைக்கப்பட்ட மற்றவர்களையும் நேசிக்கிறார்.

அவருடைய அன்பு அளவில்லாதது.

அன்பு அன்பு செய்பவரையும் அன்பு செய்யப்படுபவர்களையும் ஐக்கியப் படுத்துகிறது.

அன்பு செய்பவரைப் போல அன்பு செய்யப்படுகிறவர்கள் மாறிவிடுகிறார்கள்.

இது அன்பின் சக்தி.

இயேசுவின் அன்பு நம்மை அவரை நோக்கி ஈர்க்கிறது.

அந்த ஈர்ப்பை நாம் ஏற்றுக் கொண்டால் அன்பின் விளைவாக நாம் அவரோடு ஐக்கியமாகி விடுவோம்.

பாலோடு சேரும் தண்ணீர் பாலாகி விடுவது போல,

இயேசுவோடு ஐக்கியமாகும் நாம் அவருடைய பண்புகளோடும் ஐக்கியமாகி விடுவோம்.

அவரது அன்பு நம்மோடு கலந்து, நமது அன்பும் இயேசுவின் அன்பைப் போல் ஆகிவிடும்.

இறையன்பு + பிறர் அன்பு = நாம்.

இறைவனை நேசிப்பதும்,
 பிறரை நேசிப்பதும் 
நமது இயல்பாகிவிடும்.

அனைத்து மனிதர்களையும் தன்னை நோக்கி ஈர்ப்பதற்காகத்தான் இறைமகன் மனுமகனாய் பிறந்தார்.

மனு மகனோடு இணைந்த நாம் நமது பிறரைப் பிடித்து அவரிடம் கொண்டு வருவதையே நமது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு வாழ்வோம்.

ஆம். இயேசு நம்மை மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாற்றி விடுவார்.

நம்மைப் போல நமது பிறரையும் நாம் நேசிக்க ஆரம்பித்தால்,

நம்மைப் போல நமது பிறரும் இயேசுவோடு இணைய விரும்புவோம்.

விரும்புகிறோமா?

கிறிஸ்துவாக மாறியவன்தான் கிறிஸ்தவன்.

அனைவரும் கிறிஸ்துவோடு இணைய வேண்டும் என்று ஆசிப்பவன் தான் உண்மையான கிறிஸ்தவன்.

வாசிப்பது யோசிப்பதற்காக.

யோசிப்பது விசுவசிப்பதற்காக.

விசுவசிப்பது அதை வாழ்வாக்குவதற்காக.

வாழ்க்கை செயல்களால் ஆனது.

கிறிஸ்தவ வாழ்க்கை நற்செயல்களால் ஆனது.

நமது அன்பு செயலாக மாறும்போது அதை நற்செயல் என்கிறோம்.

நற்செயல் உடல் என்றால் அன்பு உயிர்.

நற்செயல் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம்.

நமது பிறனை நமது அன்பின் மூலம் இயேசுவிடம் அழைத்து வருவது தான் நற்செயல்.

நமது பிறனை இயேசுவிடம் நாம் அழைத்து வராவிட்டால் நம்மிடம் அன்பும் இல்லை, விசுவாசமும் இல்லை.

ஞானஸ்நானத்தின் மூலம் இயேசு நம்மை மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாற்றியிருக்கிறார்.

உறுதி பூசுதலின் மூலம் நமது சேவையை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

திருவிருந்தின் மூலம் அதற்கான சக்தியை நமக்குத் தருகிறார்.

நமது சேவையின் போது தவறுகள் நேர்ந்தால் பாவ சங்கீர்த்தனத்தின் மூலம் அவற்றை மன்னிக்கிறார்.

தேவத்திரவிய அனுமானங்களைப் பெற்றுவிட்டு, இயேசுவுக்காக ஆட்களைப் பிடிக்கப் போகாவிட்டால்,

நன்றாகச் சாப்பிட்டுவிட்டு வேலைக்குப் போகாமல் தூங்குபவர்களுக்குச் சமமாகி விடுவோம்.

தாங்கள் இயேசுவோடு இணைந்து வாழ்வதோடு மற்றவர்களையும் அப்படி வாழ அழைத்து வருபவர்கள் தான் உண்மையான கிறிஸ்தவர்கள்.

நாம் உண்மையிலேயே கிறிஸ்தவர்களா?

 பேருக்கு மட்டும் தான் கிறிஸ்தவர்களா?

சுய பரிசோதனை செய்து பார்ப்போம்.

வாழ்வோம்.

இயேசுவுக்காக வாழ்வோம்.

இயேசுவோடு ஐக்கியமாகி,
இயேசுவாக வாழ்வோம்.

நமது அயலானையும் இயேசுவோடு, இயேசுவாக வாழவைப்போம்.

அதுவே இயேசு நமக்குக் கொடுத்திருக்கும் பணி.

மண்ணில் இயேசுவுக்கு பணிவோம்,

விண்ணில் அவரோடு இணைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment