Sunday, January 7, 2024

அவர்கள் கப்பர் நகூம் ஊருக்கு வந்தார்கள்.(மாற்கு.1:21)

அவர்கள் கப்பர் நகூம் ஊருக்கு வந்தார்கள்.
(மாற்கு.1:21)

இயேசு 30 ஆண்டுகள் நாசரேத்தூரில் தன்னுடைய அன்னையோடு வாழ்ந்து விட்டு,

நற்செய்தி பணியை ஆரம்பிக்கும்போது தனது இருப்பிடத்தை 

கப்பர்நகூம் நகருக்கு மாற்றிக் கொண்டார்.

அருளப்பர் கையால் ஞானஸ்நானம் பெற்றபின் இயேசு நாற்பது நாட்கள் பாலைவனத்தில் நோன்பு இருந்த பின்,

பசாசினால் சோதிக்கப்பட்ட பின்,

கப்பர்நகூம் நகரில் இருந்த தனது இல்லத்திற்கு வந்தார்.

அவர் நாசரேத்தூரை விட்டு, செபுலோன், நப்தலி நாட்டில் கடலோரமாயுள்ள கப்பர்நகூமுக்கு வந்து குடியிருந்தார்.
( மத். 4:13)


அங்கிருந்துதான் தனது சீடர்களோடு அவர் கானாவூர் திருமண வீட்டுக்குக் சென்றிருக்க வேண்டும்.

 திருமணம் முடிந்தபின், அவரும் அவருடைய தாயும்,  அவருடைய சீடரும் கப்பர் நகூமுக்குச் சென்றதாக வாசிக்கிறோம். 
John 2:12

இராயப்பர், பெலவேந்திரர், அருளப்பர், வியாகப்பர், மத்தேயு ஆகியோருடைய இல்லங்களும் அங்கு தான் இருந்தன.

அங்கிருந்துதான் கலிலேயா முழுவதும் கால்நடையாகப் பயணித்து நற்செய்தி பணியை ஆற்றினார்.

இயேசு பிறந்தது பெத்லகேமில்.
வளர்ந்தது நாசரேத்தில்.
நற்செய்தி ஆற்றிய போது அவரது இல்லம் இருந்தது கப்பர்நாகூமில்.
நமக்காக பாடுகள் பட்டு மரித்தது ஜெருசலேமில் .

இப்போது தனது பணியை எங்கே இருந்து தொடர்கிறார்?


 இயேசு விண்ணகம் எய்துமுன் தனது சீடர்களை நோக்கி,

"இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார். 
(மத்தேயு  28:20)


இயேசு உலகம் முடியும் வரைத் தனது சீடர்களோடு இருந்து தனது நற்செய்திப் பணியைத் தொடர்ந்து ஆற்றி வருகிறார்.

அவருடைய சீடர்கள் யார்?

அவரைப் பின்பற்றி வாழ்கிற அனைவரும் அவருடைய சீடர்கள் தான்.

கத்தோலிக்கத் திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்று அவரது நற்செய்தியின் படி வாழ்ந்து வருகின்ற நாம் அனைவரும் அவருடைய சீடர்கள் தான்.

இயேசு நமக்குள் வாழ்கிறார்.

நாம்  எங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் அவரும் நம்மோடு வருகிறார்.

எதற்காக?

நற்செய்திப் பணி ஆற்றுவதற்காக.

அன்று நேரடியாக மக்களிடையே சென்று நற்செய்தியை அறிவித்த இயேசு,

இன்று நமது மூலமாக நற்செய்தியை அறிவிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

அவரது திட்டப்படி நாம் செயல்படுகிறோமா?

அல்லது அவரை நம்முடன் வைத்துக் கொண்டே நமது இஷ்டப்படி செயல்படுகிறோமா?

நமது சிந்தனையில் வாழும் அவரை நமது சொல்லாலும், செயலாலும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

அதுதான் நாம் செய்ய வேண்டிய நற்செய்திப் பணி.

இது நமது கடமை மட்டுமல்ல,

 நமக்குக் கிடைத்திருக்கும் பாக்கியம்.

கிறிஸ்தவராக, 

கிறிஸ்துவாகிய அவராக,

வாழ்வோம்.

அவரோடு இணைந்து நற்செய்தி பணியாற்றுவோம், உலகம் முடியும் வரை.

இவ்வுலகம் முடிந்த பின் மறு உலகில் அவரோடு நித்திய பேரின்பத்தில் நமது வாழ்வைத் தொடர்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment