Thursday, January 11, 2024

"இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று கேட்டனர். (மாற்கு. 2:16)

"இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று கேட்டனர். 
(மாற்கு. 2:16)

நமது முதல் பெற்றோர் பாவம் செய்ததினால் அவர்களுடைய வாரிசுகளாகிய நாம் அனைவரும் பாவிகள் தான்.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த,

யூத மதத்தைச் சேர்ந்த பரசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் 

தங்களைச் திருச்சட்டத்தின் பாதுகாவலர்களாக நினைத்து,

 தங்களைத் தவிர மற்ற அனைவரும் பாவிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

 வரி தண்டுவோர் தங்கள் இன மக்களிடமிருந்து வரி வசூலித்து

ரோமை மன்னரிடம் செலுத்தி வந்ததாலும்,

கெடுபிடிகள் செய்து அதிகமாக வரி வசூலித்ததாலும்

அவர்கள் மற்றவர்களால் பாவிகள் என்று கருதப்பட்டார்கள்.

மத்தேயு ஒரு வரி தண்டுபவர்.

மற்றவர்களால் பாவி என்று எண்ணப்பட்ட அவரை இயேசு தனது சீடனாகத் தன் பின்னால் வரும்படி அழைக்கிறார்.

மீன் பிடிப்பதையே வாழ்க்கை தொழிலாக கொண்டிருந்த இராயப்பரையும், பெலவேந்திரரையும், அருளப்பரையும், யாகப்பரையும் 
அழைத்தது போலவே,

வரி வசூலிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்த மத்தேயுவையும் அழைத்தார்.

 வரி வசூலிக்கும்போது செய்கின்ற கெடுபிடித்தனம்,

அதிகமாக வரி வசூலித்தல் ஆகியவை நியாயத்துக்கு புறம்பானவை தான்.

ஆனால் தவறு செய்பவர்களைத் தள்ளி விடுவதற்கு அல்ல, திருத்துவதற்கே இறைமகன் மனுமகனாக பிறந்தார்.

தவறு செய்பவர்கள் திருந்துவது தான் முக்கியம்.

மத்தேயு அவரோடு வந்த பின்பு இயேசு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தார்.   

 வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். 

ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். 
  
இதைக் கவனித்த மறைநூல் அறிஞர்கள் அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பது ஏன் என்று கேட்டனர். 
  
 இயேசு, அவர்களை நோக்கி, 

 "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. 

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். 
(மாற்கு 2:15-17)

பரிசேயர்களும், சதுசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் மற்றவர்களைப் போலவே பாவிகள் தான்.

ஆனால் அவர்கள் தங்களை பரிசுத்தவான்கள் என்றும்,

மற்றவர்களைப் பாவிகள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இயேசு அவர்கள் உட்பட அனைவருக்காகவும்தான் மனிதனாகப் பிறந்தார்.

 அவர் மனிதனாகப் பிறந்ததன் பயனை அடைய வேண்டுமென்றால் அனைவரும் தங்களைப் பாவிகள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு நோயாளி குணம் பெற வேண்டுமென்றால் முதலில் தான் நோயாளி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு தங்களைப் பாவிகள் என்று ஏற்றுக் கொண்டவர்கள் அவர் உலகிற்கு வந்ததன் பயனையும் பெற்றுக் கொண்டார்கள்.

ஆனால் பரிசேயர்களும், சதுசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் தங்களின் 
தற்பெருமை காரணமாகத் தங்களைப் பாவிகள் என்று ஏற்றுக்கொள்ளவில்லை.

மாறாக இயேசுவைக் கொல்லவே வழி தேடினார்கள்.

இயேசுவின் பாடுகளுக்கும், சிலுவை மரணத்திற்கும் காரணமானவர்கள் அவர்கள்தான்.

ஆனாலும் தீமையிலிருந்து நன்மையை வரவழைக்கத் தெரிந்த இறைமகன் இயேசு 

அவர்கள் செய்த மிகப்பெரிய தீமையிலிருந்து மிகப் பெரிய நன்மையாகிய பாவிகளின் மீட்பை வரவழைத்தார்.

அவர்களை இயேசுவுக்கு எதிராக தூண்டி விட்டவன் சாத்தான். 

தீமையில் இருந்து நன்மையை வரவழைக்கும் இயேசுவின் வல்லமை காரணமாக,

நமது முதல் பெற்றோரைப் பாவம் செய்யத் தூண்டியதன் மூலம் உலகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான சாத்தான்,

உலகின் மீட்புக்கும் அவனை அறியாமலேயே காரணமாகி விட்டான்.

சாத்தானின் திட்டம் அவனையே வீழ்த்தியது.

Satan's plan backfired on him.

நாம் பாவிகள்.

நம்மைத் தேடித்தான் இயேசு உலகிற்கு வந்தார்.

நமது பாவங்களை நினைத்து வருத்தப்படுவோம்.

அதே சமயத்தில் பாவத்திலிருந்து நம்மை மீட்க வந்த இயேசுவை நினைத்து மகிழ்ச்சி அடைவோம்.

நம் மீது இயேசு கொண்டுள்ள அன்பை நினைத்துப் பார்ப்போம்.

நாம் செய்த பாவங்கள் இயேசுவின் அன்புக்கு எதிரானவை என்பதையும் நினைத்துப் பார்ப்போம்.

இயேசுவின் அன்போடு இணைய வேண்டுமென்றால் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்.

இயேசு பாவிகளாகிய நம்மைத் தேடி வந்ததே நம்மை நமது பாவத்திலிருந்து விடுவிப்பதற்காகத்தான்.

நாம் நமது பாவங்களிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் நமது பாவங்களுக்காக வருத்தப்பட வேண்டும்.

எந்த அளவுக்கு பாவங்களுக்காக வருத்தப்படுகின்றோமோ,

அந்த அளவுக்கு இயேசுவின் வருகையால் நம்மிடம் ஏற்படும் மகிழ்ச்சி அதிகமாகும்.

வருத்தமும், மகிழ்ச்சியும் எதிர் எதிர் வார்த்தைகள். 

ஆனால் ஒன்றோடு ஒன்று உறவு உடையவை.

பாவத்திற்காக ஏற்படும் வருத்தம் இருக்கும் இடத்தில் தான்,

விடுதலையால் ஏற்படும் மகிழ்ச்சி இருக்கும்.

நமக்கு விடுதலை தர வந்த இயேசு நமது மகிழ்ச்சியை அதிகப்படுத்துவார்.

எங்கே உத்தம மனஸ்தாபம் இருக்கிறதோ,

அங்கே இறைவனோடு ஏற்படும் சமாதானத்தின் மகிழ்ச்சியும் இருக்கும்.

நாம் செய்த பாவங்களுக்காக வருந்துவோம்.

பாவ சங்கீர்த்தனம் செய்வோம்.

சமாதான மகிழ்ச்சியால் நமது உள்ளத்தை நிரப்புவோம்.

பேரின்ப நிலை வாழ்வு நமதாகும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment