Tuesday, January 9, 2024

தொழுநோயாளி ஒருவன் அவரிடம் வந்து முழந்தாளிட்டு, 'நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்' என்று வேண்டினான்.(Mark 1:40)

தொழுநோயாளி ஒருவன் அவரிடம் வந்து முழந்தாளிட்டு, 'நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்' என்று வேண்டினான்.
(Mark 1:40)

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று நமது ஆண்டவர் 
கூறியிருக்கிறார்.

எப்படிக் கேட்க வேண்டும்?

"தொழுநோயாளி ஒருவன் அவரிடம் வந்து முழந்தாளிட்டு, 'நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்' என்று வேண்டினான்."

கடவுள் முன் முழந்தாளிட்டு  நமக்கு வேண்டியதைக் கேட்போம்.

கேட்பதைப் பணிவுடன் கேட்போம்.

''ஆண்டவரே,நீர் விரும்பினால் நான் கேட்பதை எனக்குத் தர முடியும்.

ஆனால்,  எனது விருப்பமல்ல, உமது விருப்பமே என்னில் நிறைவேறட்டும்.

நான் உம்மிடம் கேட்க விரும்புவதை உமக்கு விருப்பம் இருந்தால் தாரும்.

எனது விருப்பத்தை உமது விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன்.

உமது விருப்பப்படி நடக்க எனக்கு என்ன தேவை என்று உமக்குத் தெரியும்."

இந்த மனநிலையோடு தான் நாம் இறைவனிடம் நமக்கு வேண்டியதைக் கேட்க வேண்டும்.

''பரலோகத்தில் வாழும் எங்கள் தந்தையே, உமது சித்தம் பரலோகத்தில் நிறைவேறுவது போல பூலோகத்திலும் நிறைவேறுவதாக."

என்று ஜெபிக்கவே நமது ஆண்டவர் நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார்.

நமது விருப்பத்தைக் கேளாமல் அவரது விருப்பப்படி தான் நம்மைப் படைத்திருக்கிறார்.

அவரது படைப்பை எவ்வாறு பராமரிப்பது என்று அவருக்குத் தெரியும்.

நமக்கு வேண்டியதை நாம் விரும்புவதற்காக நமக்கு மனம் ஒன்றைத் தந்திருக்கிறார்.

தன்னை முழுமையான சுதந்திரத்தோடு கடவுள் படைத்திருந்தாலும் நமது அன்னை மரியாள்,

''இதோ  ஆண்டவரது அடிமை. உமது விருப்பப்படியே எனக்கு ஆகட்டும்.''

என்று கூறி தன்னை ஆண்டவரது அடிமையாக அர்ப்பணித்து வாழ்ந்தாள்.

சுய விருப்பப்படி அல்லாமல் எஜமானனின் விருப்பப்படி வாழ்பவன் தான் அடிமை.

நாம் நமது அன்னையைப் பின்பற்றி நம்மைக் கடவுளது அடிமைகளாக அர்ப்பணித்து விட வேண்டும்.

மனிதர்கள் என்ற முறையில் நமக்கு சுய விருப்பங்கள் இருக்கலாம்.

மகன் என்ற முறையில் தந்தையிடம் அவற்றைத் தெரிவிக்கலாம்.

அடிமை என்ற முறையில்  அவரது விருப்பத்திற்கு நம்மை முழுவதும் கையளித்து விடவேண்டும்.

நமது உள்ளத்தை கடவுளின் உள்ளத்தோடு இணைப்பது தான் ஜெபம்.

Union of our mind with God's mind is called prayer.

 கடவுளின் உள்ளத்தில் இருப்பதை அறிந்து அதன்படி வாழ உதவ வேண்டியது தான் நமது ஜெபம்.

நமது உள்ளத்தில் இருப்பது நாம் சொல்லாமலேயே அவருக்குத் தெரியும்.

இருந்தாலும் பேசுவது மூலமாகத்தான் உறவு வளரும்.

இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவின் நெருக்கத்தை அதிகப்படுத்துவதற்காகத் தான் நாம் அவரை நோக்கி ஜெபிக்கிறோம்.

ஜெபத்தின் போது இறைவன்பால் நமக்குள்ள அன்பைத் தெரிவித்துவிட்டு, நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து விட்டால்,

நமக்கு என்ன நேர்ந்தாலும் அது அவருடைய விருப்பம் தான்.

நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்,

அவரது கட்டளைகளின் படி வாழ வேண்டும். 

இறைவனை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்க வேண்டும்.

நம்மை நாம் நேசிப்பது போல மற்றவர்களை நேசிக்க வேண்டும்.

இந்த கட்டளைகளை நமது சிந்தனை, சொல், செயலால் நிறைவேற்ற வேண்டும்.

ஓட்டுநர் பேருந்தை ஓட்டும்போது அவரது விருப்பப்படி பேருந்து ஓடுகிறது.

ஓட்டுனர் கெட்டிக்காரராக இருந்தால் அவரால் பேருந்துக்கு எந்த விபத்தும் ஏற்படாது.

நம்மை வழிநடத்தும் ஆண்டவர் சர்வ வல்லவர், 

நம் மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளவர்,

அளவற்ற ஞானம் உள்ளவர்.

அவரது அன்பும், வல்லமையும், ஞானமும் நம்மை வழி நடத்தும் போது, நமக்கு நன்மையைத் தவிர வேறொன்றும் நேராது.

நாம் கடவுளின் கரங்களில் நம்மை முற்றிலும் ஒப்படைத்து விட்டால், 

நமது கண்களை மூடிக்கொண்டு,

அவர் நம்மை நடத்தும் வழியில் நம்பிக்கையோடு நடக்கலாம்.

நாம் நடக்கும் வழி விண்ணகத்துக்குதான் செல்லும்.

அங்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் நம்மைப் படைத்திருக்கிறார்.

அவருடைய உதவியின்றி விண்ணகப் பாதையில் நம்மால் தனியே நடக்க முடியாது.

நமது வாழ்க்கையில் அவரது விருப்பப்படி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நாம் விண்ணகப் பாதையில் நடக்க உதவுவதாகவே இருக்கும்.

விண்ணகப் பாதையில் நடந்து விண்ணகம் அடைவதையே மீட்பு என்று அழைக்கிறோம்.

நம்மை மீட்பதற்காகவே இறை மகன் உலகில் மனு மகனாகப் பிறந்தார்.

சுயமாக நமக்கு மீட்பின் பாதை தெரியாது.

சில சமயங்களில் நமது சுய விருப்பங்கள் நமது மீட்புக்குத் தீங்கு விளைவிப்பனவாக இருக்கலாம்.

படித்து முடித்து ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறோம்.

அந்த வேலை கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

நம்மை முழுவதும் கடவுளிடம் ஒப்புக்கொடுத்த பின்,

நமது ஆசை நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும்.

நமக்கு வேலை கிடைத்திருந்தாலும் அது கடவுளின் சித்தம் தான்.

கிடைக்காவிட்டாலும் கடவுளின் சுத்தம் தான்.

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்."  இது இறைவாக்கு.

திருமணம் ஒரு தேவத் திரவிய அனுமானம்.

இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே திருமணம் செய்து கொள்கிறோம்.

நமக்கு ஒரு ஆண் குழந்தை முதல் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

நமது ஆசையை இறைவனிடம் தெரிவிக்கிறோம்.

இறைவனது விருப்பப்படி திருமண வாழ்க்கையை நடத்துவது நமது கடமை.

ஆண் குழந்தை பிறந்தாலும் இறைவனுக்கு நன்றி.

பெண் குழந்தை பிறந்தாலும் இறைவனுக்கு நன்றி.

குழந்தையே பிறக்காவிட்டாலும் இறைவனுக்கு நன்றி.

சுகம் இல்லாமல் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

மருத்துவரிடம் வைத்தியம் பார்க்கிறோம்.

நமக்கு சுகம் அளிக்கும்படி இறைவனிடம் வேண்டுகிறோம்.

நாம் சுகம் அடைந்தாலும் இறைவனுக்கு நன்றி.

சுகமின்மை மரணத்தில் முடிந்தாலும் இறைவனுக்கு நன்றி.

இவ்வுலகில் வாழ்ந்தாலும்,

 மறு உலகில் வாழ்ந்தாலும்

 வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல.

 இறைவனோடு வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.

"என்னைப் படைத்த இறைவா,

 நான் எப்படி வாழ வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ 

அப்படியே வாழ வேண்டிய 

அருள் வரத்தை எனக்குத் தாரும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment