அவர் மதிமயங்கிவிட்டார்.
என்று மக்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.
They said, "He is out of his mind "
(Mark 3:21)
"'ஏன் தம்பி, பிரசங்க நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தாய்?"
"சாமியார் மணிக்கணக்காகப் பிரசங்கம் வைத்தால் தூங்காமல் என்ன செய்வார்கள்?"
"'மணிக்கணக்காகவா? நீதான் பிரசங்கம் ஆரம்பிக்கும் போதே தூங்க ஆரம்பித்து விட்டாயே!
நீ இழந்தது சாமியாரின் பிரசங்கத்தை அல்ல, இயேசு ஆண்டவரின் வார்த்தைகளை ."
"நான் ஒண்ணும் இழக்கவில்லை.
இயேசு ஆண்டவரின் வார்த்தைகள் என்னுடைய பைபிளிலும் இருக்கின்றன. எனக்கு நேரம் கிடைக்கும் போது வாசித்துக் கொள்வேன்."
"'திருப்பலியின்போது கிடைத்தது நேரமில்லையோ?
சுவாமியார் இறை வசனங்களுக்கு விளக்கம் சொன்னார்.
விளக்கத்தைக் கேட்டபின் வீட்டிற்குப் போய் வாசித்தால் வசனம் விளங்கும்.
நீ பள்ளிக்கூடத்துக்கு போனதில்லையா?
வகுப்பில் ஆசிரியர் கூறிய பாட விளக்கத்தை நன்கு கேட்ட பின் வீட்டில் போய் பாடத்தை படித்தால் நன்கு விளங்கும்.
ஆசிரியருடைய உதவி இல்லாமல் நீயாகவே படித்தால் என்ன விளங்கும்?
பைபிளை கத்தோலிக்கத் திருச்சபையின் உதவி இல்லாமல் தாங்களாகவே படித்து தங்களுக்கு இஷ்டப்பட்ட பொருளைக் கொடுப்பதினால்தான் இன்று உலகில் ஆயிரக்கணக்கான பிரிவினை சபைகள் பிறந்து கொண்டிருக்கின்றன."
"நான் வாசிக்கும் வசனங்களுக்கான விளக்கத்தை பரிசுத்த ஆவி கொடுப்பார்."
"'பரிசுத்த ஆவி தான் உன்னை கோவிலில் போய் பிரசங்க நேரத்தில் தூங்கு என்று சொன்னாராக்கும்.
இன்றைக்கு நீ எப்போது பூசைக்கு வந்தாய்?"
''நான் வந்த போது முதல் வாசகம் முடிந்து விட்டது."
"'அப்போ முழு பூசை காணவில்லை.
அதிலும் பிரசங்க நேரத்தில் தூக்கம்.
எட்டு மணி பூசைக்கு ஏழே முக்காலுக்கே வந்து விட வேண்டும் என்று சாமியார் சொன்னது ஞாபகத்தில் இல்லையா?"
"சாமியார் சொல்லுவார்.
அவருக்கென்ன.
வேலை இல்லை, கோவிலிலேயே இருக்கிறார். இஷ்டப்பட்ட நேரத்தில் வந்து கொள்ளலாம்.
நான் அப்படியா? வேலை பார்த்தால்தான் சாப்பாடு.
காலையில் இருக்கிற வேலையை முடித்துவிட்டுத் தானே கோவிலுக்கு வர முடியும்."
"' படிக்கிற காலத்தில் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் முன் போவாயா?
ஆரம்பித்த பின் போவாயா?"
"ஆரம்பித்த பின் போனால் அடி கிடைக்கும், ஆகவே சீக்கிரமே போய்விடுவேன்."
"'அப்போ பூசை துவங்குமுன்பே கோவிலுக்கு வர வேண்டுமென்றால் உன்னை யாராவது அடிக்க வேண்டும், அப்படித்தானே?
ஞாயிறு பூசைக்குப் பிந்தி வருவது பாவம். அதுவே ஒரு அடி தானே.
திருமண வீட்டில் விருந்துக்குப் போகும் போது இலை போடும் முன் பந்தியில் இருக்க வேண்டும்.
இலை எடுக்கும் போது போனால் சாப்பாடு கிடைக்காது.
திருப்பலிக்குப் பிந்திப் போனால் திருப்பலியினால் கிடைக்க வேண்டிய அருள் வரங்கள் கிடைக்காது.
அழுக்குப் போகாமல் குளித்தால் சுத்தம் எப்படி கிடைக்கும்?
பிரசங்க நேரத்தில் ஏன் தூங்குகிறாய் என்று கேட்டால் பிரசங்கம் வைப்பவரைக் குறை சொல்கிறாய்.
பூசை துவங்கும் முன்னாலேயே ஏன் வரவில்லை என்று கேட்டால் சாமியாருக்கு வேலை இல்லை என்கிறாய்.
நமது ஆன்மீக வாழ்வுக்காக தங்களையே அர்ப்பணித்து வாழும் குருக்களை விமர்சனம் செய்வது சிலருக்கு பொழுது போக்காகி விட்டது.
இப்படிப்பட்டவர்கள் இப்போது மட்டுமல்ல இயேசுவின் காலத்திலேயே வாழ்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் இயேசுவையே விடவில்லை."
"என்ன சொல்கிறீர்கள்? இயேசுவை அவர்கள் என்ன செய்தார்கள்?"
"'இயேசு எதற்காக உலகிற்கு வந்தார்?"
"நமக்குப் பாவத்திலிருந்து விடுதலைதர உலகுக்கு வந்தார்."
"'நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய பாடுகள் படுவதற்கு முன்னாலேயே
மூன்று ஆண்டுகள் அவர் மக்களுக்கு நற்செய்தியை அறிவித்ததோடு சென்ற இடம் எல்லாம் அவர்களுக்கு நன்மையையே செய்து வந்தார்.
நோயாளிகளைக் குணமாக்கினார்.
பார்வையற்றவர்களுக்கு பார்வை கொடுத்தார்.
முடக்கு வாதக்காரர்களை நடக்க வைத்தார்.
சூம்பிய கையர்களின் கைகளைக் குணமாக்கினார்.
பேய் பிடித்தவர்களை பேயிலிருந்து விடுவித்தார்.
இப்படி சென்றவிடமெல்லாம் நன்மையே செய்து வந்த அவரை
மறை நூல் அறிஞர்கள் எப்படி விமர்சித்தார்கள் தெரியுமா?"
"இவனைப் பெயல்செபு பிடித்திருக்கிறது.
பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்று விமர்சித்தார்கள்.
மக்கள் எப்படி விமர்சித்தார்கள், தெரியுமா?
அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்."
"புத்தி கெட்ட மக்கள்.
கடவுள் பேய்த் தலைவனின் உதவியினால் பேயை ஓட்டினார் என்றும்,
அவர் மதி மயங்கி இருக்கிறார் என்றும் சொல்பவர்களுக்கு எப்படி புத்தி இருக்கும்?"
"' இயேசுவுக்குத் தெரியும்,
காய்த்திருக்கும் மரத்தின் மேல் தான் கல்லெறி விழும் என்று.
மக்கள் அவரை எப்படி விமர்சித்தாலும் அவர் தொடர்ந்து அவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்து வந்தார்.
விமர்சனங்கள் அவரை எதிர்மறையாகப் பாதிக்கவில்லை.
தனக்கு மட்டுமல்ல,
எதிர்காலத்தில் தனது பணியை செய்யவிருக்கும் தன்னுடைய சீடர்களுக்கும் தனக்கு கிடைத்தது போலவே விமர்சனங்கள் கிடைக்கும் என்பதும் அவருக்குத் தெரியும்.
அவர்கள் தன்னைப் போலவே விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு நற்செய்திப் பணியைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும்,
அவர்களுக்கு நன்மையையே செய்ய வேண்டும்
என்று அறிவுறுத்துவதற்காகவே அவர் முன்மாதிரிகையாக நடந்து காட்டினார்.
இன்று நமது குருக்களுக்கு உன்னைப் போன்ற ஆட்களிடமிருந்து கிடைக்கும் விமர்சனங்கள் ஏற்கனவே இயேசுவுக்குக் கிடைத்தவை தான்.
இதை நன்கு அறிந்த நமது குருக்கள் யார் எப்படி விமர்சித்தாலும் தங்களது ஆன்மீகப் பணியை தொடர்ந்து நல்ல முறையில் செய்து வருகின்றார்கள்.
காற்றடிக்கப்பட்ட பந்தை தரை மீது வீசினால் அது மேல் நோக்கி எழும்பும்.
கடவுளின் அருளைப் பெற்று பணிபுரியும் அவரது சீடர்களை மக்களது விமர்சனங்கள் கீழ்நோக்கி அடித்தால் அவர்களது பணி மேலும் மேலும் சிறக்கும்."
"மன்னிக்க வேண்டுகிறேன்.
நான் செய்த தவறுக்கு மற்றவர்கள் மீது பழியைப் போடுவது தவறுதான்."
"'நீ மன்னிப்புக் கேட்க வேண்டியது கடவுளிடம். ஏனெனில் நீ விமர்சித்தது அவருடைய சீடர்களை.
யார் இயேசுவின் சீடர்களுக்குச் செவி கொடுக்கிறார்களோ அவர்கள் இயேசுவுக்கே செவி கொடுக்கிறார்கள்.
யார் இயேசுவின் சீடர்களை விமர்சிக்கின்றார்களோ அவர்கள் இயேசுவையே விமர்சிக்கின்றார்கள்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment