Monday, January 8, 2024

அதிகாலையில் கருக்கலோடு எழுந்து புறப்பட்டுத் தனிமையானதோர் இடத்திற்குச் சென்றார். அங்கே செபம் செய்துகொண்டிருந்தார்.(மாற்கு.1:35)

அதிகாலையில் கருக்கலோடு எழுந்து புறப்பட்டுத் தனிமையானதோர் இடத்திற்குச் சென்றார். அங்கே செபம் செய்துகொண்டிருந்தார்.
(மாற்கு.1:35)


Mark 1:35
35 Rising very early before dawn, he left and went off to a deserted place, where he prayed.


Well begun, half done.

என்று ஒரு பழமொழி உண்டு.

நன்றாக ஆரம்பிப்பது பாதி வேலை முடிந்ததற்குச் சமம்.

"முதற் கோணல், முற்றும் கோணல்,"

என்பதும் ஒரு பழமொழி.

ஆரம்பம் சரியாக இல்லாவிட்டால் முற்றிலுமே சரியாக இருக்காது.

ஆரம்பம் சரியாக இருக்க வேண்டுமென்றால் நாம் ஒவ்வொரு நாளையும் எப்படி ஆரம்பிக்க வேண்டும்?

இயேசு ஒவ்வொரு நாளையும் எப்படி ஆரம்பித்தாரோ அப்படியே நாமும் ஆரம்பிக்க வேண்டும்.

வாய் மொழியால் மட்டுமல்ல செயல் மூலமும் போதிப்பவர் இயேசு.

சாதித்துப் போதிப்பவர்.

அவர் ஒவ்வொரு நாளையும் எப்படி ஆரம்பித்தார்?

விடியும் முன், அதிகாலையிலேயே எழுந்தார்.

அதாவது நாள் ஆரம்பமாகு முன்பே அவர் தனது பணியை ஆரம்பிக்கிறார்.

எழுந்தவுடன் தனிமையான ஒரு இடத்துக்குச் செல்கிறார்.

எதற்குத் தனிமையான இடம்?

ஜெபம் சொல்ல.

இயேசு ஜெபம் சொல்ல தனிமையான இடத்துக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை.

ஏனெனில் அவர் கடவுள்.

எங்கும் இருப்பவர்.

இறை மகனாகிய அவருக்கு இரண்டு சுபாவங்கள்.

சுபாவங்கள் இரண்டாயினும் ஆள் , ஒன்று தான், பரிசுத்த 
தமதிரித்துவத்தின் இரண்டாவது ஆள்.

ஜெபம் என்றால் இறைவனோடு இணைந்திருப்பது தானே.

அதுதானே அவரது இயல்பு.

தமதிரித்துவத்தின் மூன்று ஆட்களும் ஒருவருக்குள் ஒருவர் ஒரே கடவுளாக இருக்கிறார்கள்.

பிறகு ஏன் தனிமையான இடத்துக்குச் சென்றார்?

நமக்காக, நமக்கு முன்மாதிரிகை காட்டுவதற்காக.

பாவிகள் மட்டும் பெற்று வந்த ஞானஸ்தானத்தை பாவமே செய்ய முடியாத அவர் அருளப்பர் கையால் பெற்றார்.

மனிதர்களாகிய நமக்கு 
முன்மாதிரிகையாக.

நாம் சோதனை வேளையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நமக்குச் செய்து காண்பிப்பதற்காக

 தானே பசாசினால் சோதிக்கப்பட அனுமதித்தார்.

ஜெபத்தின் அடிப்படை இறைவன் உள்ளமும் நமது உள்ளமும் இணைவது.

இரண்டு உள்ளங்களும் ஒன்றோடு ஒன்று உறவாடுவது தான் ஜெபம்.

நாம் ஒரு சமூகப் பிராணி என்பதால் கோவிலில் இறைச் சமூகத்தோடு இணைந்து ஜெபம் சொல்வதை அவர் விரும்பினாலும்,

தனிமையில் சொல்லும் ஜெபத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்.

தனிமையில் அமர்ந்து உள்ளத்தால் செய்யும் ஜெபத்தைத் தியானம் என்கிறோம்.

உள்ளத்தால் மட்டும் தியானிக்கும் போது, நம்மால் நமது உள்ளத்தை ஒரு நிலைப்படுத்த முடிகிறது.

பராக்குக்கு இடம் கொடுக்காமல் ஜெபிக்க முடிகிறது.

இறைவனோடு நமக்கு இருக்கும் நெருக்கம் அதிகமாகிறது.

இறைவன் நம்மோடு பேசுவதை உணர முடிகிறது.

உலகத் தனமான எண்ணங்களால் நமது உள்ளத்துக்குள் நுழைய முடியாது.

தனிமையில் நாம் இறைவனுக்குள்ளும் இறைவன் நமக்குள்ளும் இருப்பதை உணர முடிகிறது.

இறைவனோடு பேச அலங்கார வார்த்தைகளைத் தேடிச் செல்ல வேண்டியது இல்லை.

வார்த்தைகளே தேவையில்லை.

இரண்டு அன்பர்கள் ஒருவரோடு ஒருவர் கண்களால் பேசும் போது கிடைக்கும் நெருக்கம் வாய்களினால் பேசும்போது கிடைக்காது.

நமது உள்ளத்தை இல்லமாக்கி அமர்ந்திருக்கும் இறைவனோடு உள்ளத்தால் பேசும்போது நாம் இறைப் பிரசன்னத்தில் இருப்பதை உணர்வோம்.

இறைவனது முன்மாதிரியைப் பின்பற்றி நாமும் தினமும் அதிகாலையில் படுக்கையை விட்டு எழ வேண்டும்.

நாம் நமது படுக்கையில் தனியாகத்தான் இருப்போம்.

அந்த தனிமையை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தந்தை, மகன், தூய ஆவியின் உள்ளத்திற்குள் நமது உள்ளம் நுழைய வேண்டும்.

மூன்று ஆட்களும் ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள அன்பை தியானிப்பதோடு,

பரிசுத்த தமதிரித்துவம் நம்மோடு கொண்டுள்ள அன்பை நினைத்து நினைத்து மகிழ வேண்டும்..

அந்த மகிழ்ச்சியில் மலர்ந்த, புன்னகை பூத்த முகத்தோடு 

நமது குடும்பத்துக்குள்ளும், அங்கிருந்து சமூகத்துக்குள்ளும் நுழைந்து அன்றைய வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தால்,

நமது வாழ்க்கைப் பயணம் முழுவதிலும் இறைவனும் நம்மோடு பயணிப்பார்.

அன்பு நம்மோடு பயணிக்கும் போது நமது பயணம் முழுவதும் அன்பு நிறைந்ததாக இருக்கும்.

தன்னை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது அன்பின் இயல்பு.

அன்பு நிறைந்தவர்களாக நாம் பயணிக்கும் போது குறுக்கே யார் வந்தாலும் அவர்களோடு நமது அன்பைப் பகிர்ந்து கொள்வோம்.

நமக்குத் தீமை செய்பவர்கள் வந்தாலும் அவர்களுக்கு நாம் நன்மையே செய்வோம்.

ஏனெனில் நம்முடன் வருபவர் நன்மையே உருவானவர்.

அன்பால் நிறைந்த பயணம் தான் புனித அன்னை தெரசாவின் பிறர் அன்பு பணியின் வெற்றிக்குக் காரணம்.

ஆன்மீக வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெற வேண்டுமா?

அதிகாலையில் எழுவோம்.

தனிமையில் இறைவனோடு இணைவோம்.

இணைந்தே நாள் முழுவதும் பயணிப்போம்.

நமது வாழ்க்கைப் பயணம் வெற்றிப் பயணமாக விண்ணக வாழ்வுக்குள் நம்மை அழைத்துச் செல்லும்.

நித்திய காலத்திலிருந்தே நம்மை   நினைத்துக் கொண்டிருக்கும் இறைவனை நாமும் ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment