(மாற்கு நற்செய்தி 4:21)
கடவுள் ஒளிமயமானவர்.
ஒளிமயமான கடவுள் நம்மை பார்த்து,
"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்." என்கிறார்.
மனிதரைத் தனது சாயலாகப் படைத்த போது அவர்களோடு பகிர்ந்து கொண்ட அவரது பண்புகளில் ஒன்று ஒளி.
அவரால் படைக்கப்பட்ட சூரியனின் ஒளி உலகைச் சார்ந்த ஒளி.
அவர் ஆன்மீக ஒளி.
உலக ரீதியாக பகலில் சூரிய ஒளியை அனுபவிக்கிறோம்.
இரவில் பூமியின் இருண்ட பகுதியில் வாழ்கிறோம்.
இரவில் நெருப்பின் உதவியால் விளக்கை ஏற்றி அதன் ஒளியை அனுபவிக்கிறோம்.
ஆன்மாவைச் சார்ந்த உண்மைகளை விளக்குவதற்கு இயேசு உவமைகளை கூறுவது வழக்கம்.
ஆன்மீக ஒளியை விளக்குவதற்கு ஆண்டவர் உலக ஒளியை ஒப்புமையாகக் கூறுகிறார்.
ஒளியால் தன்னைத் தானே மறைக்க முடியாது.
அது உலகியல் ஒளிக்கும் பொருந்தும்,
ஆன்மீக ஒளிக்கும் பொருந்தும்.
இரவில் நாம் விளக்கில் ஒளியை ஏற்றி, விளக்கை மரக்காலால் மூடி வைக்க மாட்டோம்.
மூடி வைக்கப்பட்ட விளக்கால் யாருக்கும் பயனில்லை.
ஏனெனில் அந்த விளக்கால் இரவின் இருளை அகற்ற முடியாது.
இறைவன் பரிசுத்தமானவர், ஆகவே ஒளிமயமானவர்.
நமது முதல் பெற்றோரை அவர் படைக்கும் போது பரிசுத்தமானவர்களாகப் படைத்தார்.
ஆகவே அவர்கள் கடவுளைப் போலவே ஒளியாக இருந்தார்கள்.
ஆனால் இறைவன் தங்களோடு பகிர்ந்து கொண்ட ஒளியைத் தங்களுடைய பாவத்தினால் இழந்தார்கள்.
மனிதர்கள் பாவத்தினால் இழந்த பரிசுத்தத்தனத்தை, அதாவது, ஒளியை மீட்டுக் கொடுக்கவே இறைமகன் மனு மகனாகப் பிறந்தார்.
ஜென்மப் பாவத்தினால் ஆன்மீக ஒளியின்றிப் பிறந்த நாம் ஞானஸ்நானத்தின் போது இழந்த ஒளியை, அதாவது,
பரிசுத்தத்தனத்தை மீண்டும் பெற்றோம்.
நம்மிடம் உண்மையான பிறர் அன்பு இருந்தால் நம்மிடம் நல்லது எது இருந்தாலும் அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வோம்.
அப்படியானால் நமது பரிசுத்தத்தனத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பாவமின்றி இருப்பது தான் பரிசுத்தத்தனம்.
பரிசுத்தத்தனத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது எப்படி?
இயேசு நம்மை பரிசுத்தர்களாக மாற்றுவதற்காக,
அதாவது,
நம்முடைய பாவங்களிலிருந்து நமக்கு விடுதலை பெற்று தருவதற்காக
அதாவது,
நமது பாவங்களினால் இழந்த ஒளியை மீட்டுத் தருவதற்காக
பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பலியாகத் தன் தந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
அவருடைய மரணத்தினால் நாம் பெற்ற மீட்பின் பயனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நமக்கு மீட்பைத் தந்த இயேசு கிறிஸ்துவை மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
நமது சிந்தனையில் உள்ள இயேசுவை நமது சொல்லாலும், செயலாலும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதாவது நமது வாய்மொழியால் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதனாலும்,
முன்மாதிரிகையான கிறிஸ்தவ வாழ்க்கையினாலும்
நமது ஆண்டவரை மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும்.
நாம் பரிசுத்தர்களாக வாழும் போது கிறிஸ்து நம்மோடு பகிர்ந்து கொண்ட ஒளி பிரகாசிக்கும்.
கிறிஸ்துவின் ஒளி அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி மெஞ்ஞானத்தை அனைவருக்கும் அளிக்கும்.
மலைமேல் இருக்கும் ஒளி மறைவாயிருக்க முடியாது.
மனிதர்முன் ஒளிரும் நமது ஒளியாகிய நற்செயல்களைக் கண்டு மற்றவர்கள் நமது விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
நமது நல்ல கிறிஸ்தவ வாழ்க்கையால் ஒளிமயமான இயேசுவை அனைவரும் பெற்று பயன் பெறுவார்களாக.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment