(மாற்கு நற்செய்தி 1:15).
காலம் நிறைவேறிவிட்டது.
கடவுள் காலங்களுக்கு அப்பாற்பட்டவர், நித்தியர்.
நட்சத்திரங்கள், அவற்றைச் சுற்றி வலம் வரும் கிரகங்கள் ஆகியவை கடவுளால் படைக்கப்பட்டதிலிருந்து நாம் வாழும் பிரபஞ்சத்தின் காலம் ஆரம்பமானது.
மனித குலத்தைப் பொறுத்த மட்டில் நமது வரலாற்றின் காலம் ஆதாம் படைக்கப்பட்ட வினாடியிலிருந்து ஆரம்பமானது.
நமது முதல் பெற்றோர் இறைவனது கட்டளையை மீறி பாவம் செய்ததால் இறைவனோடு அவர்களுக்கு இருந்த ஆன்மீக உறவு முறிந்தது.
ஆனாலும் இரக்கமே உருவான இறைவன் மனிதர்களை மீட்க மீட்பரை அனுப்பப் போவதாக அவர்களுக்கு வாக்களித்தார்.
இறைமகன் மனு மகனாக உருவெடுத்தது வரை உள்ள காலம் எதிர்பார்ப்பின் காலம்.
இறைமகன் அன்னை மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுத்த வினாடியில் எதிர்பார்ப்பின் காலம் நிறைவேறியது.
இறையாட்சி நெருங்கி வந்து விட்டது.
மனித குலம் தனது பாவத்தினால் இழந்த இறையரசை மீட்டுத் தர இயேசு மனிதனாகப் பிறந்தார்.
இயேசு நற்செய்தியைப் போதிக்க ஆரம்பித்தபோது
"இறையாட்சி நெருங்கி வந்து விட்டது."
என்ற செய்தியோடு இயேசு நற்செய்தியைப் போதிக்க ஆரம்பித்தார்.
இறையாட்சியின் இறைவன் இயேசுவே.
அவர் நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு, சிலுவையில் தன்னைப் பலியாக ஒப்புக்கொடுக்கும் வினாடியில் இறையாட்சி முழுமையாக மனித குலத்துக்குள் வந்துவிடும்.
அதாவது மனித குலம் தனது பாவத்திலிருந்து மீட்பு பெறுவதற்கான காலம் வந்துவிடும்.
அதற்கு இயேசு பொது வாழ்வுக்குள் வந்த நேரத்திலிருந்து மூன்று ஆண்டுகளே இருந்தன.
அதனால் தான் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்றார்.
அதற்கு ஆயத்தமாக மனிதர்கள் மனம் மாற வேண்டும்,
மனம் மாற வேண்டும் என்றால் இயேசுவின் நற்செய்தியை நம்ப வேண்டும்.
இந்த வார்த்தைகளோடு தான் இயேசு தனது நற்செய்தி அறிவிக்கும் பணியை ஆரம்பித்தார்.
நாம் இப்போது இறையாட்சியின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அதாவது இறையரசின் குடி மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
We are the citizens of the kingdom of God.
இயேசுவின் சீடர்களால் நமக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தியை ஏற்று மனம் மாறி ஞானஸ்நானம் பெற்ற வினாடியிலிருந்து இறையரசின் குடி மக்களாக வாழ்கிறோம்.
நெருங்கி வந்துவிட்டது என்று இயேசு சொன்ன இறையாட்சி இப்போது நமக்குள் இருக்கிறது, நாம் அதற்குள் இருக்கிறோம்.
நாம் இறையரசின் குடி மக்களாக வாழ வேண்டுமென்றால் முதலில் மனம் மாற வேண்டும்,
அடுத்து நற்செய்தியின் படி வாழ வேண்டும்.
நற்செய்தியை நம்புவது அதை வாழ்வதற்காகத்தான்.
நாம் அநேக சமயங்களில் சொல்கிறபடி செய்வதில்லை.
இயேசு இப்போது நம்மிடம் வந்து "நான் கேட்டுக் கொண்டபடி மனம் மாறியிருக்கிறீர்களா?" என்று கேட்டால் என்ன பதில் சொல்வோம்?
"மாறியிருக்கிறோம்" என்றுதான் சொல்வோம்.
உண்மையிலேயே மனம்
மாறியிருக்கிறோமா?
மனம் மாறினால் வாழ்க்கையும் மாற வேண்டுமே?
நமது வாழ்க்கை மாறியிருக்கிறதா?
இப்போது நண்பர்கள் ஒரு கேள்வி கேட்கலாம்.
நாங்கள் ஞானஸ்நானம் பெற்றபோது குழந்தைகளாக இருந்தோம்.
எங்களது ஆன்மீக வாழ்க்கை அப்போதுதான் ஆரம்பித்தது.
மாறுவதற்கு எங்கள் மனதில் என்ன இருந்தது?
நியாயமான கேள்வி.
குழந்தைகளாக இருந்த நாம் உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் வளர ஆரம்பித்தோம்.
வளர்ந்து கொண்டிருக்கிறோம்.
மாற்றம் இல்லையேல் வளர முடியாது.
ஒவ்வொரு வினாடியும் நமது உடல் மாறிக்கொண்டு தான் இருக்கிறது.
மாற்றத்தின் காரணமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் ஆன்மீக ரீதியாக
மாற்றம் நமது ஆன்மீக வளர்ச்சிக்கும் காரணமாக இருக்கலாம்,
தளர்ச்சிக்கும் காரணமாக இருக்கலாம்.
குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்தோம் என்பதைப் பற்றி இப்போது நமக்குக் கவலை இல்லை.
நேற்று எப்படி இருந்தோம் என்பது நமக்குத் தெரியும்.
இன்று எப்படி இருக்கிறோம் என்பதும் நமக்குத் தெரியும்.
நேற்று இருந்த நமது ஆன்மீக நிலைக்கும்,
இன்று இருக்கும் நமது ஆன்மீக நிலைக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?
நேற்று நம்மிடம் இருந்த குற்றம் குறைகளிலிருந்து விடுதலை பெற்று,
இன்று புண்ணியங்கள் செய்திருந்தால் நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம்.
குற்றம் குறைகள்
அதிகமாகியிருந்தால் நாம் தளர்ச்சி அடைந்திருக்கிறோம்.
இதை நாம் கண்டு பிடிப்பதற்காகத்தான் ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போதும் இரவில் தூங்கப் போகும் போதும் ஆன்மப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆன்மீகவியலார் கூறுகின்றார்கள்.
நேற்று பயன்படுத்தப்பட வேண்டிய நேரத்தை வீண் கற்பனைகளில் செலவழித்திருக்கலாம்.
காலையில் செய்யும் ஆன்ம பரிசோதனையில் இதைக் கண்டுபிடித்தால்
இன்று நேரத்தை ஆன்மீக ரீதியில் பயனுள்ள முறையில் செலவழித்து ஆன்மீகத்தில் வளரலாம்.
நேற்று ஒருவருக்கு உதவி செய்திருந்தால் இன்று இருவருக்கு உதவி செய்து பிறரன்பில் வளரலாம்.
ஒவ்வொரு நாளும் நமது ஜெப நேரத்தை அதிகரித்து ஆன்மீக வாழ்வில் வளரலாம்.
ஆன்மீகத்தைப் பொறுத்தமட்டில்
நேற்று இருந்த அதே நிலையில் மாற்றம் இன்றி இன்று இருக்க முடியாது.
No status quo in spiritual life.
ஒன்று வளர்ந்திருப்போம், அல்லது தளர்ந்திருப்போம்.
ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் ஆன்ம பரிசோதனையின் போது நாம் பெற்றது வளர்ச்சியா அல்லது தளர்ச்சியா என்பதைக் கண்டுபிடித்து மறுநாள் வளர முயற்சி செய்ய வேண்டும்.
கடவுள் மட்டும் மாறாதவர், ஏனெனில் அவர் அளவில்லாதவர்.
நாம் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியை நோக்கி மாறிக்கொண்டேயிருக்க வேண்டும்.
அதற்கு ஒரே வழி இயேசுவின் நற்செய்தியை அறிந்து அதை வாழ்வாக்குவது தான்.
இப்போது இயேசு நம்மிடம் சொல்கிறார்,
நற்செய்தியை அறியுங்கள்,
மனம் மாறுங்கள்,
இறையரசின் குடிமக்களாய் வளருங்கள்.
தினமும் நற்செய்தியை வாசிப்போம்.
தினமும் மனம் மாறுவோம்.
ஆன்மீகத்தில் வளர்ந்து
கொண்டேயிருப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment