(மாற்கு.2:5)
இயேசு கப்பர்நகூமில் உள்ள தன் வீட்டில் இருக்கிறார்.
அவரது நற்செய்தியைக் கேட்கவும், தங்கள் நோய்களிலிருந்து குணம் பெறவும் ஏராளமான பேர் வீட்டில் குழுமியிருக்கிறார்கள்.
அப்பொழுது குணம் பெறுவதற்காக திமிர்வாதக்காரன் ஒருவனை நால்வர் சுமந்து கொண்டு வருகின்றனர்.
கூட்ட நெரிசலின் காரணமாக வாசலின் வழியே அவனை அவரிடம் கொண்டு வர இயலவில்லை.
ஆகவே வீட்டின் மேல்தட்டைப் பிரித்து, திறப்பு உண்டாக்கி, திமிர்வாதக் காரன் படுத்திருந்த படுக்கையை இறக்குகின்றார்கள் .
இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி, 'மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்கிறார்.
அங்கிருந்த சில மறை நூல் அறிஞர்கள்,
"கடவுளுக்கு மட்டும் தானே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு.
இவர் பாவங்களை மன்னிக்கிறேன் என்று சொல்வதன் மூலம் கடவுளை தூசிக்கிறார்." என்று தங்கள் மனதில் எண்ணிக் கொள்கிறார்கள்.
நோயாளியைக் கொண்டு வந்த சாதாரண மக்களுக்கு இருக்கிற விசுவாசம் படித்த மறை நூல் அறிஞர்களுக்கு இல்லை.
அவர்களுடைய எண்ணத்தை அறிந்த இயேசு அவர்களை நோக்கி,
" எது எளிது ? இந்தத் திமிர்வாதக்காரனை நோக்கி, 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா? 'எழுந்து படுக்கையை எடுத்துகொண்டு நட' என்பதா?"
என்று கேட்டுவிட்டு,
மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று அவர்கள் உணர்வதற்காக,
திமிர்வாதக்காரனை நோக்கி -- 'நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ' என்கிறார்."
அவனும் தனது படுக்கையைத் தூக்கிக் கொண்டு வெளியே செல்கிறான்.
முதலில் நோயாளியின் பாவங்களை மன்னிக்கிறார்.
கடவுளுக்கு மட்டும்தானே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்று மறை நூல் அறிஞர்கள் எண்ணிய போது,
தனக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்பதை,
அதாவது தான் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக
ஒரு புதுமை செய்து நோயாளியைக் குணமாக்குகிறார்.
இதன் மூலம் இயேசு மறை நூல் அறிஞர்களுக்கு தன்மீது விசுவாசத்தைக் கொடுக்கிறார்.
ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இறைமகன் மனுமகனாகப் பிறந்து உலகிற்கு வந்தது
அக்காலத்தில் வாழ்ந்த மக்களுடைய நோய் நொடிகளை புதுமைகள் மூலம் குணமாக்குவதற்காக அல்ல.
அது அவரது வருகையின் நோக்கம் அல்ல.
மனிதர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்து அவர்களது பாவங்களை மன்னிப்பதற்காகவே அவர் உலகத்துக்கு வந்தார்.
" இயேசு தனது சீடர்களை நோக்கி, 'என் தந்தை என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்' என்றார்
22 பின்பு அவர்கள்மேல் ஊதி, 'பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
23 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்' என்றார். (அரு.20: 21-24)
மனுக்குலத்தின் பாவங்களை மன்னிப்பதற்காகத்தான் தந்தை தன் மகனை உலகிற்கு அனுப்பினார்.
அதே நோக்கத்துக்காகத் தான் மகனும் தன் சீடர்களை உலகெங்கும் அனுப்பினார்.
ஆக இயேசு உலகிற்கு வந்தது நமது பாவங்களை மன்னிக்க, புதுமைகள் செய்வதற்காக அல்ல.
அப்படியானால் அவர் ஏன் புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்கினார்?
மனிதர்கள் பாவங்களில் இருந்து விடுதலை பெற்று மீட்பு அடைய வேண்டுமானால் இயேசு மீட்பர் என்பதையும்,
அவர் மனிதனாகப் பிறந்த இறைமகன் என்பதையும்
அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இதற்கு அடிப்படை விசுவாசம்.
விசுவாசம் இறைவன் நமக்குக் கொடுக்கும் இலவசப் பரிசு.
முதலில் இயேசு குணமாக விரும்பும் நோயாளிகளுக்கு விசுவாசத்தைப் பரிசாகக் கொடுக்கிறார்.
அந்த விசுவாசத்தோடு நோயாளிகள் அவரைத் தேடி வருகிறார்கள்.
நோயாளிக்குக் குணம் அளித்தபின் "உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று என்று சொல்கிறார்.
அவர்களது உடல் நோயைக் குணமாக்குமுன் அவர்களது ஆன்மாவின் நோயாகிய பாவத்திலிருந்து அவர்களுக்கு விடுதலை கொடுக்கிறார்.
மூன்று ஆண்டுகள் பொது வாழ்வின் போது அவர் மக்களுக்கு இலவசமாகக் கொடுத்தது விசுவாசம், பாவ மன்னிப்பு.
உடல் நோயைப் புதுமைகள் மூலம் குணமாக்கியது மக்களைத் தன்னை நோக்கி வரச் செய்வதற்காக.
ஆசிரியர் பாடம் நடத்துவதற்காகத் தான் வகுப்புக்குச் செல்கிறார்.
ஆனாலும் இடையிடையே கதைகள் சொல்கிறார்.
எதற்காக?
மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்காக.
சில மாணவர்கள் கதை கேட்பதற்கென்றே வகுப்பில் உற்சாகமாக இருப்பார்கள்.
கதைகள் கேட்பதோடு பாடத்தையும் நன்கு கவனிப்பார்கள்.
அதேபோல்தான் மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்காக மனிதனாகப் பிறந்தவர்
அவர்களைத் தன்னை நோக்கி ஈர்ப்பதற்காக அவர்களது நோய் நொடிகளைப் புதுமைகள் மூலம் குணமாக்குகிறார்.
அன்று மக்களுக்கு விசுவாசத்தைப் பரிசாக அளித்ததோடு,
மக்களின் பாவங்களுக்காகப் பாடுகள் பட்டு, மரித்து, உயிர்த்த அதே இயேசு,
"உலகம் முடியுமட்டும் நான் உங்களோடு இருக்கிறேன்."
என்ற அவரது வாக்குப்படி,
இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்.
இன்றும் மனிதர்களுக்கு
நோய் நொடிகள்,
குழந்தையின்மை,
கடன் தொல்லைகள்,
வேலை கிடைக்காமை
போன்ற ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நமக்கு ஏற்படுகின்ற பிரச்சனையிலிருந்து விடுதலை பெறுவதற்காக நேரடியாகவோ புனிதர்கள் மூலமாகவோ நமது ஆண்டவரை நாம் அணுகுகிறோம்.
அவரும் நம் மேல் இரங்கி பிரச்சனையிலிருந்து நமக்கு விடுதலை கொடுக்கிறார்.
ஆண்டவர் நமக்கு செய்கிற உதவிக்கு நமது எதிர்வினை (Reaction) என்ன?
இயேசு நம்முடன் கொண்டிருக்கும் உறவுக்கு ஒரே நோக்கம் நமது மீட்பு மட்டும்தான்.
நமக்குக் கிடைத்த உதவிகள் மூலம்
நமது மீட்புக்கு அத்தியாவசியத் தேவையான நமது விசுவாசம் வளர்கிறதா?
நாம் பாவ மன்னிப்புப் பெற்று பரிசுத்தத்தனத்தில் வளர்கிறோமா?
இறையன்பிலும், பிறரன்பிலும் வளர்கிறோமா?
எந்நேரமும் மரணத்துக்குத் தயாராக இருக்கிறோமா?
தனது உதவிகள் மூலம் நம்மைப் பராமரித்து வரும் கடவுளுக்காக மட்டும் வாழ்கிறோமா?
இக் கேள்விகளுக்கு நம்மிடமிருந்து 'ஆம்' என்ற பதில் வர வேண்டும்.
இறைவனின் உதவியைப் பெற்ற நாம் ஆன்மீகத்தில் வளர வேண்டும்.
ஆன்மீக வளர்ச்சிக்காக இறைவன் தந்த உதவிகளை நமது உலகைச் சார்ந்த வளர்ச்சிக்காக பயன்படுத்திவிட்டு ஆன்மீகத்தில் வளர்ச்சி அடையா விட்டால்
நாம் பெற்ற உதவிகளால் நமக்குப் பயனில்லை.
அநேகர் உதவி பெற்றவுடன் சாமியாரிடம் சென்று நன்றித்திருப்பலிக்குப் பணம் கொடுத்துவிட்டு,
ஆன்மீகத்தில் ஆரம்பத்தில் இருந்தது போலவே தொடர்ந்து இருக்கிறார்கள்.
ஆன்மீகத்தில் வளர்வதன் மூலம் நமது நன்றியைக் கடவுளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
ஞாயிறு திருப்பலிக்கு ஒழுங்காகச் செல்கிறோம்.
நமது ஆன்மீகம் திருப்பலிக்கு முன்னால் இருந்ததை விட,
திருப்பலி முடிந்தவுடன் அதிகமாக வளர்ந்திருக்க வேண்டும்.
வளரா விட்டால் தேய்கிறோம் என்று தான் அர்த்தம்.
பசியோடு இருப்பவன் சாப்பிட்ட பின்பும் அவனது பசி அடங்காவிட்டால் அவன் சாப்பிட்டு என்ன பயன்?
திருப்பலியின் போது நாம் நமது பாவங்களிலிருந்து விடுதலை பெற்று, பரிசுத்தத் தனத்தில் வளராவிட்டால்
திருப்பலியால் நமக்கு என்ன பயன்?
அழுக்குப் போகாமல் குளித்தால் குளித்ததனால் பயனில்லை.
தியேட்டரில் சினிமாப் பார்ப்பது போல கோவிலில் திருப்பலியையும் பார்த்துக் கொண்டிருந்தால்
ஆண்டவர் தன்னையே நமக்காகப் பலி கொடுத்ததன் பயனை நாம் அடையவில்லை என்று அர்த்தம்.
இயேசு உலகம் முடியுமட்டும் நம்மோடிருப்பது நம்மை மீட்பதற்காக மட்டுமே.
மீட்புக்குத் தேவையான உதவிகளையே கேட்போம்.
உலகைச் சார்ந்த உதவிகளைக் கேட்டால் அவற்றை நமது ஆன்மீக மீட்புக்காக ஒப்புக் கொடுப்போம்.
நாம் உலகுக்கு வந்ததன் ஒரே நோக்கம் விண்ணக வாழ்வு என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம்.
அதற்காகவே வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment