சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.
(மாற்கு நற்செய்தி 4:8)
பயிர்த்தொழில் செய்யும் விவசாயி முதலில் தான் பயிர் செய்யும் நிலத்தை நன்கு பண்படுத்தி, பக்குவப்படுத்தி
அதன் பின்பு தான் விதைகளை விதைக்கவோ, நாற்றுக்களை நடவோ செய்ய வேண்டும்.
பயிர் செய்யப்பட வேண்டிய நிலம் பாறை போல் கடினமாக இருக்கக் கூடாது.
கடினமான நிலத்தில் விதைகள் வேரூன்ற முடியாது.
வேரூன்ற முடியாத விதையால் தளிர் விடவும் முடியாது.
நிலம் முட்செடிகள் நிறைந்ததாக இருக்கக் கூடாது.
விதைகளிலிருந்து வெளிவரும் தளிரை முட்செடிகள் வளர விடாமல் அமுக்கி விடும்.
நமது ஆன்மா இறைவனால் ஆன்மீகப் பயிர்த் தொழில் செய்யப்பட வேண்டிய நிலம்.
இறைவன் நமது ஆன்மாவின் மீது விதைகளாகிய தனது வார்த்தைகளை விதைக்கின்றார்.
இறை வார்த்தைகள் நமது ஆன்மாவில் முளைத்து, தளிர் விட்டு வளர வேண்டுமென்றால்
நாம் முதலில் ஆன்மீகப் பயிர் முளைத்து வளர்வதற்கு ஏற்றபடி
நமது ஆன்மாவை பண்படுத்தி பக்குவப்படுத்த வேண்டும்.
நமது ஆன்மாவில் கடினத் தன்மை இருந்தால் முதலில் அதை இறை வார்த்தைகள் வளர்வதற்கு ஏற்றபடி அதை மென்மையானதாக மாற்ற வேண்டும்.
கடினமான உள்ளத்தவர்களால் இறை வார்த்தையை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆண்டவர் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருந்த காலத்தில் கடின உள்ளம் கொண்டிருந்த பரிசேயர்களாலும், சதுசேயர்களாலும், மறை நூல் அறிஞர்களாலும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இளகிய உள்ளம் படைத்த சாதாரண மக்கள்தான் இயேசுவின் நற்செய்தியால் பயன் பெற்றார்கள்.
நமது ஆன்மாவில் விதைக்கப்படும் இறை வார்த்தை முளைத்து வளர்ந்து பலன் தர வேண்டும் என்றால்,
இறையன்புக்கு எதிரான
முள் செடிகளுக்குச் சமமான, எண்ணங்கள் நமது உள்ளத்தில் இருக்கக் கூடாது.
இறைவனை முழுமையாக அன்பு செய்பவர்கள் அவரை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள்.
உலகப் பொருட்களின் மீது இருக்கும் பற்று,
சகுனம் பார்த்தல்,
நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல்
குறி பார்த்தல் ஆகியவை போன்ற குருட்டு நம்பிக்கை உள்ளவர்களுக்கு இயேசுவின் மேல் உண்மையான அன்போ நம்பிக்கையோ இருக்காது.
திருமணம் ஒரு திரு அருட்சாதனம். இயேசுவால் ஏற்படுத்தப்பட்டது. திருமண வாழ்வை ஆசீர்வதிக்க வேண்டியவரும் அவர்தான்.
அவரால் படைக்கப்பட்ட நாம் அவரால் திட்டமிடப்பட்ட நேரத்தில் பிறந்து, வாழ்கிறோம்.
நாம் நேரம் பார்த்து பிறக்கவில்லை.
ஆனால் படைக்கப்படாத ஜாதகத்தைப் பார்த்து பெண்ணையோ மாப்பிள்ளையையோ நிச்சயிப்பதோடு,
நல்ல நேரம் பார்த்து திருமண நாளை நிச்சயித்தால்
நமக்கு இயேசுவின் மீதும் அவரால் படைக்கப்பட்ட நேரத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.
நமக்கு இறைவன் மீது உண்மையான அன்பு இருந்தால் அவர் மீது முழுமையான நம்பிக்கையும் இருக்கும்.
நமது குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் திருமணத்தை நிச்சயத்து விட்டு திருமண வாழ்க்கையின் ஆசீர்வாதத்தை நம்மைப் படைத்தவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.
இறையன்பின் அடிப்படையில் அவரது விருப்பப்படி நாம் நமது வாழ்க்கையை நிச்சயித்தால்தான் அவரது ஆசீர்வாதத்தைப் பெற முடியும்.
நமது ஆன்மாவில் குருட்டு நம்பிக்கைகளாகளாகிய முள் செடிகள் இருந்தால் இறை வார்த்தை நமக்கு எந்த பலனும் தராது.
ஆகவே நமது ஆன்மாவிலிருந்து இறைவனுக்கு விருப்பமில்லாத எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் அப்புறப்படுத்தி விட்டு
இறைவன் மீது உள்ள நம்பிக்கையோடு இறை வார்த்தையை வாசித்து
ஆன்மாவில் விதைத்துப் பயன்பெறுவோம்.
பண்படுத்தப்பட்ட நிலத்தில் விதையை விதைத்து
அது முளைத்து தளிர் விடும்போது அது வளர்ந்து பலன் தருவதற்குத் தேவையான உரத்தை அடிக்கடி போட்டுக் கொண்டிருப்போம்.
இறைவார்த்தையாகிய விதையிலிருந்து முளைத்த ஆன்மீகப் பயிர் வளர ஆண்டவரின் அருள் உரத்தை இட்டு அருள் நீரைப் பாய்ச்சவேண்டும்.
பக்தி நிறைந்த ஜெபத்தின் மூலமாக இறைவனின் அருள் வரத்தை ஈட்ட வேண்டும்.
பயிர் வளர்ந்து வரும் போது பாவம் என்னும் களை முளைத்தால் அதை பாவ சங்கீர்த்தனம் என்னும் களை கொத்தியால் அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கண்ணும் கருத்துமாக நமது ஆன்மீகப் பயிரை வளர்த்தால் நமக்கு 100 மடங்கு பலன் கிடைக்கும்.
பண்படுத்தப்பட்ட ஆன்மாவில் விழுகின்ற இறை வார்த்தைகளில் ,
பண்படுத்தப்படும் அளவுக்கு ஏற்ப,
சில முப்பது மடங்காகவும்
சில அறுபது மடங்காகவும்
சில நூறு மடங்காகவும்
விளைச்சலைக் கொடுக்கின்றன.
பரிசுத்தமான உள்ளத்தோடு இறை வார்த்தைகளை வாசித்து பயன்பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment