" ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார்." (மாற்கு 5:19)
கலிலேயாக் கடலின் மேற்கு பகுதியில் யூதர்களும், கிழக்குப் பகுதியில் புற இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள்.
இயேசு புற இனத்தார் வாழும் கெரசேனர் நாட்டிற்குச் செல்கிறார்.
அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.
(மாற்கு நற்செய்தி 5:17)
நற்செய்தி அறிவிக்கச் சென்ற இயேசுவை புற இனத்தார் ஏன் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு வேண்டிக் கொண்டார்கள்?
இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார்.
அவர் பல பேய்களினால் பிடிக்கப்பட்டிருந்தவர்.
இயேசு அவற்றிலிருந்து அவருக்கு விடுதலை கொடுத்தார்.
பேய்கள் இயேசுவின் அனுமதியோடு மலைப்பகுதியில் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்த
பன்றிகளுக்குள் புகுந்தன.
ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.
பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர்.
அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள்.
நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக் கொண்டார்கள்.
ஆக தங்களில் ஒருவருக்கு இயேசு குணமளித்ததற்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக அவரை தங்களை விட்டு போய்விடுமாறு வேண்டிக் கொண்டார்கள்.
அவர்களை நன்றி கெட்ட ஜென்மங்கள் என்று சொல்லத் தோன்றுகிறது அல்லவா?
அப்படியானால் நாம்?
நமக்காக,
நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக,
மனிதனாகப் பிறந்து
பாடுகள் பட்டு
சிலுவையிலே தன்னைப் பலியாக்கி,
இப்போது ஒவ்வொரு வினாடியும் நம்மோடிருந்து எண்ணிறந்த ஆபத்துகளிலிருந்து நம்மைக் காப்பாற்றி,
நம்மை வழிநடத்தி வரும் இயேசுவை
நமது பாவத்தினால் நம்மை விட்டு வெளியேற்றுகிறோமே
நாம் எப்படிப்பட்டவர்கள்?
நன்றி உள்ளவர்களா?
நன்றி கெட்டவர்களா?
ஒரு வினாடி சிந்திப்போம்.
நமக்கு நிலை வாழ்வு அளிப்பதற்காக,
நமது ஆன்மீக வளர்ச்சிக்காக,
தன்னையே நமக்கு ஆன்மீக உணவாகத் தரும் இயேசுவை கடவுளுக்குக் கொடுக்கக்கூடிய மரியாதையோடு பெறுகிகிறோமா?
ஏதோ தின்பண்டத்தைப் பெறுவது போல் பெருகிறோமா?
ஒரு வினாடி நடுநிலைமையோடு சிந்தித்துப் பார்த்தால் நாம் உண்மையிலேயே நன்றி உள்ளவர்களா நன்றி கெட்டவர்களா என்பது நமக்கு தெரிய வரும்.
நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியில் கலந்துவிட்டு
வீட்டுக்குத் திரும்பியபின் நாம் பாவம் செய்தால்
அப்போது நினைத்துப் பார்ப்போம்
நாம் உண்மையிலேயே நன்றி உள்ளவர்களா நன்றி கெட்டவர்களா என்று.
கெரசேனர் பகுதி மக்கள் இயேசுவைத் தங்களை விட்டு போய்விடுமாறு வேண்டிக் கொண்டாலும்
அவர் தன்னைப் பற்றி அவர்களுக்கு அறிவிக்க ஒருவரை விட்டுத் தான் செல்கிறார்.
யாரை?
அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்.
ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார்.
அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார்.
ஆக அந்நாட்டு மக்கள் இயேசுவைத் தங்கள் பகுதிக்குள் வர அனுமதிக்காவிட்டாலும் தன்னைப் பற்றி எடுத்துக் கூற அவர்களில் ஒருவரையே அங்கே இயேசு விட்டுச் சென்றார்.
அவர் பேய் பிடித்திருந்தவராக இருந்தாலும் அவரிடமிருந்தும் நாம் ஒரு ஆன்மீகப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அவரைப் பற்றி நற்செய்தி ஆசிரியர் தனது நூலில் குறிப்பிட்டிருப்பது அதற்காகத்தான்.
நற்செய்தி வாசிப்பிலிருந்து நாம் பாடம் எதுவும் கற்றுக் கொள்ளாவிட்டால் நற்செய்தி வாசித்து ஒரு பயனும் இல்லை.
நாம் உண்ணும் உணவு நமது உடலுக்கு சக்தியையும் வளர்ச்சியையும் தராவிட்டால் உண்பதால் என்ன பயன்?
நாம் வாசிக்கும் இறைவாக்கு நமது வாழ்விலும் நமது அயலான் வாழ்விலும் எந்த பயனும் ஏற்படுத்தாவிட்டால்
இறைவாக்கை வாசித்து எந்த பயனும் இல்லை.
இறைவாக்கை வாசித்துத் தியானிக்கும் போது இறைவன் நமது வாழ்வில் செய்து கொண்டு வரும் நன்மைகளைப் பற்றியும் தியானிக்க வேண்டும்.
அவர் செய்து கொண்டு வரும் நன்மைகளுக்கு அவருக்கு நன்றி செலுத்துவதோடு
நம்மைச் சுற்றி வாழும் அனைவரிடமும் அவரைப் பற்றியும் அவர் செய்து கொண்டு வரும் நன்மைகளைப் பற்றியும் எடுத்துரைக்க வேண்டும்.
இந்த சிறிய நற்செய்திப் பணிக்கு பெரிய படிப்புகள் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நம்மிடம் இருப்பதை கொடுத்தாலே போதும்.
என்னுடைய அம்மா முதல் வகுப்பு கூட படிக்கவில்லை.
ஒரு எழுத்துக் கூட எழுத வாசிக்கத் தெரியாது.
அவர்களுக்குப் பைபிள் பங்குச் சுவாமியார்தான்.
திருப்பலியின் போது சுவாமியார் வைக்கும் பிரசங்கம் தான் அவர்களுக்கு பைபிள் வாசிப்பு.
அதை அவர்கள் வாழ்ந்ததோடு மற்றவர்களுக்கும் அறிவித்தார்கள்.
அதற்கு இறைவன் அவர்களுக்கு அளித்த பரிசு,
அவர்களது மூத்த மகன்
சங். சுவாமி ஞா. மிக்கேல் பெர்க்மான்ஸ் சே. ச. (இந்தியா முழுவதும் பயணித்து சர்வ சமய ஐக்கியப் பணி ஆற்றியவர்.)
இறைவன் நமக்குத் தந்ததை அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
அதுவே நாம் ஆற்றும் சிறந்த நற்செய்தி பணி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment