Thursday, January 25, 2024

"நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; "(மாற்கு நற்செய்தி 16:17)

"நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; "
(மாற்கு நற்செய்தி 16:17)

இயேசு தனது சீடர்களை "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்ற 
அனுப்பிய போது அவர்களைப் பார்த்து,

" நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; 

நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். " என்று கூறிவிட்டு,

நம்பிக்கை கொண்டோர் என்னவெல்லாம் செய்வார்கள் என்று கூறுகிறார்.


" பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். 

கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. 

அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்." 

இயேசுவின் வார்த்தைகளைச் சிறிது தியானிப்போம்.

நமக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாமும் அதை விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றோம்.

மீட்பு பெறுவது உறுதி என்று நம்புகிறோம்.

ஒரு சிறிய ஒப்புமை.

நமக்குச் சுகமில்லை.

மருத்துவரிடம் செல்கிறோம்.

மருத்துவர் மருந்து கொடுக்கிறார்.

மருந்தை ஒழுங்காகச் சாப்பிடுங்கள், சுகமாகி விடும் என்கிறார்.

நாம் மருந்தைச் சாப்பிடுகிறோம்.

ஒரு மாதம் ஆகியும் சுகமாகவில்லை.

திரும்பவும் மருத்துவரிடம் செல்கிறோம்.

"ஐயா நீங்கள் தந்த மருந்தைச் சாப்பிட்டேன், ஆனால் இன்னும் குணம் ஆகவில்லை." என்று சொல்கிறோம்.

''தம்பி, இன்னும் நோய் குணமாகவில்லை என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும்.

நீ மருந்தை ஒழுங்காகச் சாப்பிடவில்லை." என்று தான் மருத்துவர் கூறுவார்.

விசுவசித்து ஞானஸ்நானம் பெற்ற நாம் 


இயேசுவின் பெயரைச் சொல்லி பேய்களை ஓட்ட முயன்றோம், அவை ஓடவில்லை.

நம்மால் புதிய மொழிகளைப் பேச முடியவில்லை.

பாம்புகளை நம் கையால் பிடிக்க முடியவில்லை. 

கொல்லும் நஞ்சைக் குடித்தோம்,

மருத்துவரிடம் போக வேண்டியிருந்தது.

  

 உடல் நலமற்றோர்மீது கைகளை வைத்தோம், அவர்கள் குணமடைய வில்லை.

இயேசுவிடம் சென்று,

" ஆண்டவரே, நீங்கள் கூறிய படி நற்செய்தியை விசுவசித்து ஞானஸ்தானம் பெற்றோம்.

 ஆனால் நீங்கள் 
விசுவசிப்பவர்கள் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொன்னீர்களோ 

அவற்றில் ஒன்றைக் கூட எங்களால் செய்ய முடியவில்லை.

 ஏன் ஆண்டவரே?'' என்று கேட்கிறோம்.

அவர் நம்மைப் பார்த்து,

"எனது மக்களே, நான் உங்களைப் படைத்த கடவுள்.

உங்களை எனது சாயலில் படைத்தேன்.

என்னை விசுவசித்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று நான் சொன்னேனோ அவற்றையெல்லாம் உங்களால் செய்ய முடியும்.

உங்களால் செய்ய முடியாவிட்டால் உங்களிடம் கடுகளவு விசுவாசம் கூட இல்லை என்று தான் பொருள்.

விசுவசிக்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது.

முழு மனதோடு விசுவசிக்க வேண்டும்.

முழு மனதோடு விசுவசித்தல் என்றால் என்ன என்பதை உங்களுக்குப் புரிய வைக்கிறேன்.

 பள்ளிக்கூடப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள்.

வேலை கிடைக்க வேண்டும் என்று எனக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள்.

நீங்கள் விசுவாசத்தோடு விண்ணப்பிக்க வேண்டும்.

அதாவது உங்களது விண்ணப்பம் உங்களுக்கு நலன் பயப்பதாய் இருந்தால் நான் அதை உறுதியாகக் கேட்பேன், கேட்டதைத் தருவேன் என்று நீங்கள் விசுவசிக்க வேண்டும்.

நீங்கள் கேட்பது உங்களுக்கு நலம் தருமா, தராதா என்பது எனக்குத் தெரியும்.

நீங்கள் கேட்ட வேலை உங்களுக்கு ஆன்மீக ரீதியாக நலம் தராது என்றால் அதைத் தர மாட்டேன் என்பதையும் விசுவசிக்க வேண்டும்.

எந்த வேலை ஆன்மீக ரீதியாக உங்களுக்குப் பயன் தருமோ அந்த வேலை உங்களுக்குக் கிடைக்க நானே ஏற்பாடு செய்வேன் என்பதையும் 
விசுவசிக்க வேண்டும்.

ஆனால் நீங்கள் வழக்கமாக செய்வது என்ன?

"ஆண்டவரே நான் உம்மிடம் விண்ணப்பித்திருக்கும் வேலை எனக்குக் கிடைத்துவிட்டால் முதல் மாதச் சம்பளத்தை உமக்குக் காணிக்கையாகத் தந்து விடுகிறேன்."

உங்களுக்கு என்மேல் இருக்கும் விசுவாசத்தை விட உங்களது காணிக்கையின்மேல் அதிக விசுவாசம் இருக்கிறது.

அதாவது உங்களது காணிக்கையின் மேல் ஆசைப்பட்டு நீங்கள் கேட்டதை நான் தருவேன் என்று நம்புகிறீர்கள்.

உங்களது வருமானத்திலிருந்து காணிக்கை செலுத்துவது நல்ல காரியம் தான்.

கோவிலில் செலுத்தப்பட்ட காணிக்கை பிறர் அன்பு பணிகளுக்காகச் செலவழிக்கப்படும்.

அதைச் செய்யுங்கள்.

ஆனால் அதை உங்களது விண்ணப்பம் கேட்கப்படுவதற்கு நிபந்தனையாக நீங்கள் போடக் கூடாது.

அப்படிப் போட்டால் உங்களுக்கு என் மேல் முழுமையான விசுவாசம் இல்லை என்றுதான் அர்த்தம்."


"இப்போது புரிகிறது ஆண்டவரே.

 நிபந்தனையற்ற நம்பிக்கை,
நிபந்தனையற்ற அன்பு,
நிபந்தனையற்ற சேவை ஆகியவற்றையே நீர் விரும்புகிறீர்.

உம்மிடம் கேட்பது உமக்குச் சித்தம் இருந்தால் கிடைக்கும்,

உம் பெயரால் சொல்வது உமக்குச் சித்தம் இருந்தால் நடக்கும் என்று நூறு சதவீதம் உறுதியாக நம்ப வேண்டும்.

நாங்கள் எதை விரும்பினாலும் எங்களது விருப்பம் அல்ல உமது விருப்பமே எங்களில் நிறைவேற வேண்டும்.

நாங்கள் கேட்டது கிடைத்தாலும் உமது சித்தம்.

கிடைக்காவிட்டாலும் உமது சித்தம்.

நாங்கள் சொன்னது நடந்தாலும் உமது சித்தம்.

நடக்காவிட்டாலும் உமது சித்தம்.

உமது சித்தத்திற்கு முற்றிலும் அடிபணிய எங்களுக்கு வரம் தாரும், ஆண்டவரே."

லூர்து செல்வம்

No comments:

Post a Comment