Tuesday, January 30, 2024

"காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்கு செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்றார். "(யோவான் நற்செய்தி 3:8)

" காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்கு செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்றார். "
(யோவான் நற்செய்தி 3:8)


 யூதத் தலைவர்களுள் ஒருவரான நிக்கதேமைப் பார்த்து இயேசு சொன்னார்,

 "ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். 
 
மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். 

 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். 

 காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்கு செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. 

தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்றார். "

விசுவாசிகளின் வாழ்வில் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை இயேசு ஒரு ஒப்புமை வாயிலாக விளக்குகிறார்.

இரண்டு படகுகளை எடுத்துக் கொள்வோம்.

ஒன்று துடுப்பினால் இயங்கும் படகு.

அடுத்தது பாய்மரத்தால் இயங்கும் படகு.

துடுப்பினால் இயங்கும் படகை அதில் பயணம் செய்பவன் இயக்குகிறான்.

துடுப்பினால் படகு செல்ல வேண்டிய திசையை பயணம் செய்பவன் அவனது விருப்பப்படி மாற்றிக் கொள்கிறான்.

அவனது விருப்பப்படி படகில் பயணிக்கிறான்.

ஆனால் பாய் மரப் படகு அதில் பயணிப்பவன் விருப்பப்படி அல்லாமல் 

காற்று வீசும் திசையில் பயணிக்கும்.

படகின் பயணத்தை தீர்மானிப்பது காற்று, பயணிப்பவன் அல்ல.

காற்று அழைத்துச் செல்லும் திசையில் பயணிப்பவன் பயணம் செய்ய வேண்டும்.

காற்று எங்கிருந்து வரவேண்டும், எங்கு நோக்கி செல்ல வேண்டும் என்பதை படகில் பயணிப்பவனால் தீர்மானிக்க முடியாது.

ஆண்டவர் காற்று வீசுவதை பற்றி கூறிவிட்டு

தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்று கூறுகிறார். 

இப்போது இரு மனிதர்களை எடுத்துக் கொள்வோம்.

ஒருவர் ஞானஸ்நானம் பெறாதவர்.
அதாவது தூய ஆவியால் பிறக்காதவர்.

அடுத்தவர் தூய ஆவியால் பிறந்தவர்.

தூய ஆவியால் பிறக்காதவர்

வாழ்க்கையில் தூய ஆவியைப் பற்றி கவலைப்படாமல் தனது விருப்பம் போல் வாழ்பவர்.

அவரைப் படைத்த இறைவன் அவர் எங்கே செல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கே அவரால் செல்ல இயலாது.

இறைவன் அவரைப் படைத்ததன் நோக்கத்தை அடைய முடியாது.

தூய ஆவியால் பிறந்தவர் தனது விருப்பப்படி வாழாமல் ஆவியானவருடைய விருப்பப்படி வாழ்வார்.

முதலில் தன்னை முழுவதும் தூய ஆவியானவருக்கு கையளித்து விடுவார்.

அதன் பிறகு அவர் எப்படி வாழ வேண்டும் என்று தீர்மானிப்பவர் பரிசுத்த ஆவியே.

நாம் இந்த உலகில் தான் பிறந்திருக்கிறோம்.

உண்மைதான்.

உலகில் வாழ உணவு, உடை, இருப்பிடம் போன்ற சில அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

உண்மைதான்.

அதற்கு உலகைச் சார்ந்த பணம் தேவை.

உண்மைதான்.

அதற்கு வருமானம் வரக்கூடிய ஏதாவது ஒரு வேலை அல்லது தொழில் செய்ய வேண்டும்.

உண்மைதான்.

அதற்கு நாம் நமது மூளையைப் பயன்படுத்தி திட்டங்கள் தீட்ட வேண்டும்.

உண்மைதான்.

நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.

உண்மைதான்.

துடுப்பு உள்ள படகை அதில் பயணிப்பவன் இயக்கி பயணிப்பது போல

 இவ்வுலகில் வாழ்பவர்களும் தங்கள் சிந்தனைத் திறனைப் பயன்படுத்தி வாழ்க்கை படகை ஓட்ட வேண்டும்.

உண்மைதான்.

மேற்கூறப்பட்ட யாவும் இவ்வுலகில் வாழ்வதற்கு.

ஆனால் இவ்வுலகம் நிரந்தரமானதல்ல.

இவ்வுலக வாழ்க்கையும் நிரந்தரமானதல்ல.

உடலில் உடுத்த உடை, உடல் வளர உணவு, உடல் வாழ வீடு ஆகியவை உடல் இருக்கும் வரை தான் தேவை.

ஒரு காலம் வரும். நமது உடல் மண்ணுக்குள் சென்று, மண்ணோடு மண்ணாகி விடும்.

அதன் பின் நாம் கஷ்டப்பட்டு ஈட்டிய உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.

நிரந்தரமதற்ற இவ்வுலகு இருப்பது போலவே,

நிரந்தரமான, அழியாத மறுவுலகு ஒன்றும் இருக்கிறது.

அழியும் தன்மையுள்ள நமது உடல் மண்ணுக்குள் சென்றவுடன்

 அழியாத தன்மையுள்ள நமது ஆன்மா மறு உலகுகில் வாழ சென்று விடும்.

மறு உலகில் இரண்டு விதமான வாழ்க்கைகள் இருக்கின்றன.

பேரின்ப வாழ்வு, பேரிடர் வாழ்வு.

மறுவுலகில் பேரின்ப வாழ்வு வாழவே நமது ஆன்மா படைக்கப்பட்டது.

ஆனால் இவ்வுலகில் தனது இஷ்டப்படி வாழ்ந்த உடலோடு சேர்ந்து வாழ்ந்த ஆன்மாவால் பேரின்ப வாழ்வுக்குள் நுழைய முடியாது.

பேரிடர் வாழ்வுக்குள்தான் அது நுழையும்.

பேரின்ப வாழ்வுக்குள் நுழைய வேண்டுமென்றால் ஆன்மா இவ்வுலகில் பரிசுத்த ஆவியால் இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

பாய்மரப் படகு காற்றினால் இயக்கப்படுவது போல நமது ஆன்மா பரிசுத்த ஆவியால் இயக்கப்பட வேண்டும்.

நமது விருப்பம் போல் வாழக்கூடாது.

பரிசுத்த ஆவியால் இயக்கப்படுகின்றவர்கள் சுயமாக எதுவும் செய்ய முடியாது.

ஓட்டுநர் விருப்பப்படி தான் பேருந்து பயணிக்கும்.

ஓட்டுநர் இறங்கிவிட்டால் பேருந்து நின்றுவிடும்.

காற்று வீசும் போது தான் பாய் மரப் படகு பயணிக்கும்.

காற்று வீசாவிட்டால் படகால் பயணிக்க முடியாது.

அதே போல் தான் நமது ஆன்மாவும் பேரின்ப வாழ்வை நோக்கி பயணிக்க வேண்டும் என்றால்

தூய ஆவி என்னும் காற்று வீச வேண்டும்.

 தூய ஆவியானவர் எந்த வழியே நமது ஆன்மாவை வழி நடத்துகிறாரோ அந்த வழியே நமது ஆன்மா பயணிக்க வேண்டும்.

ஆவியாரின் வழிநடத்துதலில் நமது சுய விருப்பங்களுக்கு இடம் இல்லை.

நமது சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றையும் முற்றிலுமாக தூய ஆவியாரின் கரங்களில் ஒப்படைத்து விட வேண்டும்.

அவரின் விருப்பப்படி நினைக்க வேண்டும்,

 அவரின் விருப்பப்படி பேச வேண்டும்,

 அவரது விருப்பப்படி செயல்பட வேண்டும்.

வாழ வேண்டியது நாமல்ல,

 தூய ஆவியானவரே நம்மில் வாழ வேண்டும்.

நமது உணவு, உடை, இருப்பிடம் கூட தூய ஆவியானவருக்குக் கட்டுப்பட்டவை தான்.

தூய ஆவியானவரின் சொற்படி உண்பவர்கள் ருசிக்காக அல்ல, பசிக்காக உண்பார்கள்.

அவர்களிடம் போசனப் பிரியம் இருக்காது.

மது அருந்த மாட்டார்கள்.

நோன்பு அனுசரிப்பதன் மூலம் தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்வார்கள்.

உணவை அயலானோடு பகிர்ந்து உண்பார்கள்.

ஆடம்பரமாக உடை அணிய மாட்டார்கள்.

ஒழுக்கமாக (Decently) உடை அணிவார்கள். 

உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுத்து உதவுவார்கள்.

அவர்கள் வாழும் வீடு ஜெப வாழ்வு வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் காலையில் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் எழுந்து,

இறைவனுக்கு நன்றி கூறிவிட்டு,

இறைவாக்கை வாசித்து தியானித்து விட்டு

அன்றைய வாக்கை வாழ்வதற்காகப் புறப்படுவார்கள்.

அன்றைய நாளில் என்ன செய்தாலும்

உண்டாலும், உடுத்தாலும், நடந்தாலும், என்ன வேலை செய்தாலும்

இறைவனுடைய பிரசன்னத்தில் இறைவனுக்காகச் செய்வார்கள்.

உள் தூண்டுதல்கள் (Inspirations) மூலம் ஆவியானவர் ஒவ்வொரு வினாடியும் அவர்களை வழிநடத்துவார்.

ஏதாவது துன்பங்கள் ஏற்பட்டால் அவற்றை ஆவியானவர் சிலுவைகளாக மாற்றுவார்.

ஆவியானவரின் தூண்டுதல்களின் படி நடந்தால் அவர்களது ஒவ்வொரு அசைவும் விண்ணக பேரின்ப வாழ்வை நோக்கியே அவள்களை நகர்த்தும்.

நமது அன்னை மரியாள் தூய ஆவியானவரின் வழி நடத்துதலின்படி வாழ்வதற்காகத் தான் தன்னையே அவரின் அடிமையாக அர்ப்பணித்தாள்.

நாமும் ஆவியானவரின் கரங்களைப் பற்றிக் கொண்டு 

அவர் நம்மை நடத்துகிற படி நடப்போம்.

பேரின்ப வாழ்வுக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment