ஜெபம் என்றால் என்ன?
இறைவனோடு உரையாடுவது தான் ஜெபம்.
நாம் இறைவனோடு பேசுவதும், இறைவன் நம்மோடு பேசுவதும் தான் ஜெபம்.
வெறுமனே வாய் திறந்து பேசுவது அல்ல, மனம் திறந்து பேசுவது.
நமது உள்ளம் இறைவனது உள்ளத்தோடு உரையாடுவதுதான் ஜெபம்.
உள்ளங்களின் உரையாடல் தான் ஜெபம் என்றால் அதில் நமது உடலுக்கு இடமில்லையா?
நமது சிந்தனை, சொல், செயல் மூன்றுக்கும் ஜெபத்தில் இடம் இருக்கிறது.
நமது சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து பயணிப்பது தான் வாழ்க்கை.
மூன்றும் இறைவனோடு கைகோர்த்து பயணிப்பது தான் ஜெப வாழ்க்கை, மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கை.
ஜெபத்தையும் நமது வாழ்க்கையையும் பிரிக்க முடியாது,
அதாவது,
இறைவனையும் நமது வாழ்க்கையையும் பிரிக்க முடியாது.
ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் ஜெபிக்க வேண்டும்?
ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் வாழ்கிறோம்?
ஒவ்வொரு நாளும் 24 மணி நேரம் வாழ்கிறோம்.
நாள் முழுவதும் வாழ்கிறோம், ஆகவே நாள் முழுவதும் ஜெபிக்க வேண்டும்.
அதுவும் நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் ஜெபிக்க வேண்டும்.
நாள் முழுவதும் கோவிலில் அமர்ந்து ஜெபிக்க வேண்டுமா?
கோவிலில் தானே நமது ஆண்டவர் இருக்கிறார்.
மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுத்த இறைமகன் இயேசு ஆண்டவர் கோவிலில் திவ்ய நற்கருணையில் இருக்கிறார்.
தந்தை, மகன், தூய ஆவியாகிய தமதிரித்துவக் கடவுள் நித்திய காலத்திலிருந்தே எங்கும் இருக்கிறார்.
God is omnipresent.
ஆகவே நாம் கோவிலுக்குள் இருந்தாலும்,
கோவிலுக்கு வெளியே இருந்தாலும்
இறைவனோடு தான் இருக்கிறோம்.
நமது ஒவ்வொரு அணுவும் இறைவனால் தான் இயங்குகிறது.
"அவரின்றி அணுவும் அசையாது" என்பது பழமொழி.
நமக்காக மட்டும் வாழ்வது உலக வாழ்க்கை.
இறைவனுக்காக மட்டும் வாழ்வது ஆன்மீக வாழ்க்கை.
ஆன்மீக வாழ்க்கை = ஜெபம்.
இறைவனுக்காக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு வினாடியும் நாம் ஜெபித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் இறைவன் இருக்க வேண்டும்.
வேறு எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாதா?
வேறு எதையும் பேசக்கூடாதா?
வேறு எதையும் செய்யக்கூடாதா?
எதைப்பற்றி சிந்தித்தாலும்,
எதைப் பேசினாலும்,
எதைச் செய்தாலும்
இறைவனுக்காகச் செய்தால்,
நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் இறைவன் இருக்கிறார்.
கடைக்குச் சென்று மனைவிக்காக ஒரு புடவை எடுக்கிறோம்.
கடைக்குச் செல்லும் போதும், புடவையைத் தேர்வு செய்யும்போதும்,
அதற்காகப் பணம் கொடுக்கும் போதும்,
அதை வீட்டுக்குக் கொண்டு வரும்போதும்,
மனைவியிடம் கொடுக்கும் போதும் நமது உள்ளத்தில் மனைவி இருப்பது போல,
நமது வாழ்க்கையில் எதைச் செய்தாலும்,
மூச்சு விட்டாலும்,
முகம் கழுவினாலும்,
சாப்பிட்டாலும்,
பள்ளிக்கூடம் சென்று பாடம் படித்தாலும்,
அலுவலகம் சென்று பணி புரிந்தாலும்
செய்வதை எல்லாம் இறைவனுக்காகச் செய்யும்போது நாம் ஜெபிக்கிறோம்.
இறையன்புக்காகவும்,
பிறரன்புக்காகவும்
நாம் எதை செய்தாலும் நாம் ஜெபிக்கிறோம்.
நாம் உலகில் பிறந்தது இறைவனுக்காக வாழ.
நாம் மரணமடைவது இறைவனோடு வாழ.
இவ்வுலகிலும் மறு உலகிலும் நம்மையும் இறைவனையும் பிரிக்க முடியாது.
இவ்வுலகில்
நாம் பிறப்பதும் ஜெபம்.
வாழ்வதும் ஜெபம்.
மரணிப்பதும் ஜெபம்.
விண்ணுலகில் நித்திய காலம் வாழ்வதும் ஜெபம்.
இறைவனில், இறைவனுக்காக, இறைவனோடு வாழ்வோம்.
அதுதான் ஜெப வாழ்வு.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment