Wednesday, January 17, 2024

பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்;(மாற்கு. 1:13)

 பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்;
(மாற்கு. 1:13)

இறைமகன் இயேசு கடவுள். பாவமே செய்ய முடியாதவர்.

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவே அவர் மனு மகனாகப் பிறந்ததால் 

நாம் செய்த பாவங்களின் சுமையை அவரே சுமந்து,

பாவிகள் பெறவேண்டிய ஞானஸ்நானத்தைப்

பரிசுத்தராகிய அவர் பெற்றதுமன்றி,

நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அவர் பாலை நிலத்தில் 40 நாள் நோன்பிருந்தார்.

நமக்குப் பாவச் சோதனைகள் ஏற்படும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு முன்மாதிரிகை காண்பிப்பதற்காக,

 தன்னையே பசாசின் சோதனைக்கு உட்படுத்தினார்.

நமது பாவங்களை மன்னிப்பதற்காக இறைமகன் மனு மகனாகப் பிறப்பார் என்ற உண்மை சாத்தானுக்குத் தெரியும்.

அவர் பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததும் அவனுக்கு தெரியும்.

நாம் பாவமன்னிப்புப் பெறுவதை தடுப்பதற்காக சாத்தான் அவரை குழந்தைப் பருவத்திலேயே கொன்று விட தீர்மானித்தான்.

ஏரோது மன்னன் மூலமாக அதை நிறைவேற்றத் தீர்மானித்தான்.

ஆனால் அதில் அவன் தோல்வியடைந்தான்.

அதன் பின் 30 ஆண்டுகள்  ஒரு சாதாரண மனிதன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதைப் போல இயேசுவும் தனது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

முப்பதாவது வயதில் இயேசு யோர்தான் நதியில் அருளப்பர் கையால் ஞானஸ்நானம் பெற்றபோது,

அவர்தான் மனு மகனாகப் பிறந்த இறை மகனா என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ளச் சாத்தான் தீர்மானித்தான்.

அதற்காகவே இயேசு 40 நாள் பாலைவனத்தில் நோன்பு இருந்தபின் அவரைச் சோதித்தான்.

அவர் இறை மகனா என்பதை உறுதி செய்து கொண்டு,

அவர் மனிதருக்கு பாவ மன்னிப்புக் கொடுப்பதற்கு முன் அவரைக் கொன்று விட வேண்டும் என்பது அவனுடைய திட்டம்.

"உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே"

என்று இயேசு சொன்னவுடன் அவர்தான் மனு மகனாகப் பிறந்த இறைமகன் என்பதை உறுதி செய்து கொண்டான்.

எங்கே பாவம் இருக்கிறதோ அங்கே புத்தி வேலை செய்யாது என்பதற்கு சாத்தான் ஒரு சான்று.

இறைமகன் மனுமகனாகப் பிறந்து மனிதருக்குப் பாவ மன்னிப்பு அளிப்பார் என்ற விவரம் மட்டும்தான் அவனுக்குத் தெரியும்.

அவர் பாடுகள் பட்டு,
 சிலுவையில் தனது உயிரைப் பலியாகக் கொடுத்து 
பாவப் பரிகாரம் செய்து
 பாவங்களை மன்னிப்பார் 
என்ற உண்மை அவனுக்குத் தெரியாது.

அதனால் தான் அவர் மனிதர்களுடைய பாவங்களை மன்னிக்கு முன் அவரைக் கொன்று விட வேண்டும் என்று தீர்மானித்தான்.

அதற்காகத்தான் பரிசேயர்களையும் ,
சதுசேயர்களையும்,
 மறை நூல் அறிஞர்களையும்
 யூதாசையும் தனது கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டான்.

இயேசுவைப் பாடுகளுக்கு உட்படுத்தி, சிலுவையில் அறைந்து கொன்றதின் மூலம்,

எதைத் தடுக்க ஆசைப்பட்டானோ அதை நிறைவேற்ற அவனே தன்னை அறியாமல் உதவி செய்தான்.

கடவுள் தீமையை அனுமதித்ததே அதிலிருந்து மிகப்பெரிய நன்மையை வெளிக் கொண்டு வருவதற்காகத் தான் என்ற உண்மை சாத்தானுக்குத் தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.

ஏனெனில் பாவம் இருக்கும் இடத்தில் புத்தி வேலை செய்யாது.

இயேசு தான் சோதிக்கப்படுவதற்கு சாத்தானுக்கு அனுமதி கொடுத்தது அதன் மூலம் நமக்கு ஒரு முக்கியமான ஆன்மீகப் பாடம் கற்பிப்பதற்காகத்தான்.

சோதனை பற்றிய வசனங்களை வாசித்து,

 தியானித்துப் பார்த்தால் இது புரியும்.

இயேசு தனது நற்செய்திப் பணியை ஆரம்பிக்கும் முன் சோதிக்கப்பட்டார்.

நற்செய்தி பணி செய்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதற்காகச்
 சோதிக்கப்பட்டார்.

40 நாட்கள் நோன்பிருந்தபின் இயேசு பசியாக இருந்தார்.

அவரது பசியை  அவரைச் சோதிப்பதற்குத் தனக்கு சாதகமாக சாத்தான் பயன்படுத்திக் கொண்டான்.

ஒரு கல்லை எடுத்து அவரிடம் காண்பித்து,

"நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்" என்றான். 

நற்செய்தி பணியாளர்களுக்கு இறைவனின் வார்த்தை தான் உணவு. ஆன்மீக உணவு.

தங்களுக்குக் கிடைத்த ஆன்மீக உணவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது தான் நற்செய்திப் பணி.

சாத்தானுக்கு அவர்கள் நற்செய்திப் பணி புரிவது பிடிக்காது.

அதைத் தடுப்பதற்காக இந்த உலகைச் சார்ந்த உணவை, உலக வசதிகளை சாத்தான் அவர்களுக்குக் காண்பித்து, தங்கள் பணியின் மூலம் அவற்றைத் தேடச் சோதிப்பான்.

இயேசு மறுமொழியாக, "மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை" என மறைநூலில் எழுதியுள்ளதே" என்றார்.

நற்செய்தி பணியாளர்கள் உலகைச் சார்ந்த உணவுக்காகவும் வசதிகளுக்காகவும் நற்செய்தி பணியைச் செய்யக்கூடாது 
என்பதைப் புரிய வைப்பதற்காக,

அவர்கள் உலகைச் சார்ந்த உணவினால்  வாழவில்லை, 

இறை வார்த்தையினால்தான், தங்களது ஆன்மீக வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்கிறார்.

உலகைச் சார்ந்த பணிபுரிவோர் தங்களது வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்வதற்காக செல்வத்தைச் சேர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

 ஆனால் ஆன்மீகப் பணியாளர்கள் தங்களுடையவும், மற்றவர்களுடையவும் ஆன்மீக வளர்ச்சிக்காக உழைக்கிறார்கள்.

உழைக்க ஆன்மீக சக்தியைக் கொடுப்பது இறை வார்த்தைதான்.

 கையில் பைபிளை மட்டும் வைத்துக் கொண்டு, காணிக்கை பிரிப்பதை மட்டுமே மையமாகக் கொண்டு நற்செய்தியை அறிவிக்கும்  நமது பிரிவினை சகோதரர்களுக்கு ஆண்டவரின் வார்த்தை ஒரு பாடம்.

பின்பு சாத்தான் அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி, 


"நீர் என்னை வணங்கினால்
இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். " என்றான்.

உலக நாடுகளில் தங்களது புகழ் பரவ வேண்டும் என்பதற்காக,

அதாவது சுய புகழுக்காக,

நற்செய்தி பணி ஆற்ற வேண்டும் என்று சாத்தான் சோதிக்கிறான்.

இயேசு அவனிடம் மறுமொழியாக, "'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக" என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்றார்.

நம்மைப் படைத்த கடவுளை ஆராதிப்பதும், அவர் ஒருவருக்கே பணி புரிவதும்தான் நற்செய்திப் பணியில் நோக்கம் என ஆண்டவர் பதில் சொல்கிறார்.

நற்செய்திப் பணியாளர்கள் உலகத்தில் புகழ் பெறுவதற்காக அல்ல,

இறைவனின் அதிமிக மகிமைக்காகவே பணிபுரிய வேண்டும் என்று சொல்கிறார்.

பின்னர் சாத்தான் அவரை எருசலேம்  கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, "நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; 
  
தேவ தூதர்கள் உமது கால் கல்லில் மோதாதபடி  தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்" என்று மறைநூலில் எழுதியுள்ளது"  என்றான்.

இயேசு அவனிடம் மறுமொழியாக, "'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே" என்றார்.

கோவில் கோபுரத்தின் உச்சியிலிருந்து யாதொரு தீங்கும் ஏற்படாதபடி கீழே குதிப்பது ஒரு வீர சாகசச் செயல்.

 தங்களது திறமைகளை மக்களுக்குக் காண்பிப்பதற்காக நற்செய்தி பணி ஆற்றுபவர்கள் செயல்படக்கூடாது.

நற்செய்திப் பணியாளருக்கு பேச்சாற்றல் இருக்கலாம்.

ஆனால் அந்த ஆற்றலை மக்களுக்குக் காண்பிப்பதற்காக பணி புரியக் கூடாது.

தாழ்ச்சியுடன் இறைவாத்தையை அறிவிப்பதற்காகப் பணி புரிய வேண்டும்.

தான்  நற்செய்திப் பணியைத் துவங்குமுன் இந்த சோதனைக்குத் தன்னை உட்படுத்தியதன் மூலம்  

நற்செய்திப் பணியாளர்களுக்கு இருக்க வேண்டிய குண நலன்கள் பற்றி இயேசு பாடம் எடுக்கிறார்.

"உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்'' என்று இயேசு சொன்னவுடன் அவர் இறை மகன்தான் என்பதை சாத்தான் உறுதி செய்து கொண்டான்.

இயேசுவின் போதனைப்படி நற்செய்தி பணியாளர்கள் எப்படி இருக்கக் கூடாது?

உலகைச் சார்ந்த உணவின் மீது பற்றுள்ளவர்களாகவும்,

உலக செல்வத்தின் மீது ஆசை உள்ளவர்களாகவும்,

தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டவர்களாகவும் இருக்கக் கூடாது.

எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்?

ஆன்மீக உணவின் மீது மட்டும் பற்று உள்ளவர்களாகவும்,

அருள் செல்வத்தை மட்டும் தேடுபவர்களாகவும்,

தாழ்ச்சி உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

இந்த மூன்று குணங்களும் உள்ளவர்களால்தான் தங்களை நற்செய்தி பணிக்கு முற்றிலுமாக அர்ப்பணிக்க முடியும்.

திருமுழுக்குப் பெற்று, இயேசுவின் சீடர்களாக மாறிய நாம் அனைவரும் நற்செய்திப் பணியாளர்கள் தான்.

சாத்தான் இயேசுவைச் சோதிப்பதற்கு பைபிள் வசனங்களைத்தான் பயன்படுத்துகிறான்.

இயேசு அவனுக்குப் பதில் சொல்வதற்கு  பைபிள் வசனங்களைத்தான் பயன்படுத்துகிறார்.

இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கையில் பைபிளை வைத்திருப்பவர்கள் எல்லாம் போதகர்கள் அல்ல.

உண்மையில் நமது பிரிவினைச் சபையினர் நம்மை சோதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இயேசுவிலிருந்து அப்போஸ்தலிக்கப் பாரம்பரியம் வழியாக வந்த கத்தோலிக்க நற்செய்தி பணியாளர்கள் தான் உண்மையான போதகர்கள்.

இதை மனதில் வைத்துக் கொண்டு நமது பிரிவினைச் சகோதரர்கள் மட்டில் கவனமாக இருப்போம்.

இறைவனது மகிமைக்காக மட்டும் நற்செய்திப் பணியாற்றுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment