Monday, January 15, 2024

ஒற்றை வரிப் பிரசங்கம்.

ஒற்றை வரிப் பிரசங்கம்.
 

  கலிலேயாவில் உள்ள கானாவில் நடந்த திருமணத்துக்கு  இயேசுவும், அவருடைய தாயும்,  சீடரும்  அழைப்புப் பெற்றிருந்தனர். 


திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார். 

இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார். 


" இயேசுவின் தாய் பணியாளரிடம், 

அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார். 
(அரு. 2:5)

மரியாள் தனது மைந்தனிடம் சொன்னது ஜெபம்.

பணியாளரிடம் சொன்னது பிரசங்கம்,

ஒற்றை வரிப் பிரசங்கம்.

  "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்." 

"அவர் சொல்வதைக் கேளுங்கள்" என்று சொல்லவில்லை. "செய்யுங்கள்" என்று சொன்னார்.

பங்குத் குருவானவர் ஞாயிறுத் திருப்பலியில் ஆற்றும் பிரசங்கத்தை நாம் கேட்கிறோம்,

சில சமயங்களில் தூங்கிக் கொண்டே கேட்கிறோம்.

அரைத் தூக்கத்தில் கேட்டது அரை குறையாக தான்  நமது மனதை அடையும்.

நாம் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

 தூங்காமல் கேட்டாலும் கூட, என்ன சொல்லப்படுகிறது என்பதை விட

 எப்படிச் சொல்லப்படுகிறது என்பதில் தான் அதிக கவனம் செலுத்துகிறோம்.

பிரசங்கத்தின் முடிவில்,

"பிரசங்கம் Super" என்று ஒரு Certificate கொடுப்பதோடு நமது கடமை முடிந்து விடுகிறது.

குருவானவர் செய்த ஒரு மணி நேர பிரசங்கம் முடிந்தவுடன்

அன்னை மரியாள் ஆற்றிய ஒற்றை வரிப் பிரசங்கம் நமது ஞாபகத்துக்கு வர வேண்டும்.

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்"

சாதாரணமாக திருமணத்திற்கு அழைக்கப்படுபவர்கள் மணமக்களை வாழ்த்துவதோடும், அளிக்கப்படும் விருந்தை உண்பதோடும் தங்கள் கடமையை முடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் திருமணத்துக்கு அழைக்கப்பட்ட அன்னை மரியாள் தன்னைக் குடும்பத்தில் ஒருவராகவே கருதி செயல் புரிகிறார்.

ஆகவே தான் திராட்சை ரசம் தீர்ந்தவுடன் அதில் அக்கறை காட்டி ஆவன செய்யும்படி தனது மைந்தனிடம் வேண்டுகிறாள்.


இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே." 

என்று சொன்ன போதும்

தான் சொல்வதை மகன் செய்வார் என்ற உறுதியான நம்பிக்கையுடன்,

"அவர் உங்களுக்குச்  சொல்வதெல்லாம் செய்யுங்கள்."

என்று பணியாளர்களிடம் கூறுகிறார்.

'"எனது நேரம் இன்னும் வரவில்லையே."

இயேசு எதற்காக உலகிற்கு வந்தாரோ அந்த நேரம் அதாவது அவரது பாடுகளின் நேரம் இன்னும் வரவில்லையே என்று இயேசு சொல்கிறார்.


"பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார்."
(  அரு. 13:1)


பாஸ்கா திரு விருந்தின் போது இயேசு  திராட்சை இரகத்தைத் தனது இரத்தமாக மாற்ற விருந்தார்.

புனித வியாழனன்றுதான் அவரது பாடுகள் ஆரம்பித்தன.

அதுதான் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம்.

பாடுகள் பட்டு மரிக்கவே இயேசு உலகிற்கு வந்தார், புதுமைகள் செய்வதற்கு அல்ல.

ஆனாலும் கானாவூர் திருமணத்தின் போது தனது அன்னையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டார்.

அன்னை மரியாளால் தனது மகன் மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு கானாவூர்த் திருமண நிகழ்ச்சி ஒரு அடையாளம்.

"அவர் கூறியபடி செய்யுங்கள்" என்று அன்னை மரியாள் பணியாளர்களிடம் கூறிய பின்

 தூய்மைச் சடங்குகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக இருந்த  ஆறு கல்தொட்டிகளை

  தண்ணீரால் நிரப்பச் சொன்னார்.

அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். 

தனது பாடுகளுக்கு முந்திய நாள் திராட்சை ரசத்தை தனது ரத்தமாக மாற்றவிருந்ததற்கு முன் அடையாளமாக,

 கானாவூர்த் திருமணத்தின் போது இயேசு தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றினார்.

தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியது அவரது பொதுவாழ்வில் அவர் செய்த முதல் புதுமை.

திராட்சை இரசத்தை அவரது ரத்தமாக மாற்றியது பொது வாழ்வின் போது அவர் செய்த கடைசிப் புதுமை.

முதல் புதுமையைத் திருமண வீட்டின் விருந்தினர்களுக்கு உணவு கொடுப்பதற்காகச் செய்தார்.

ஒருவகையில் கத்தோலிக்கத் திருச்சபையும் ஒரு திருமண வீடு தான்.

இயேசு மணவாளன், 
திருச்சபை மணவாட்டி.

நாம் அனைவரும் திருச்சபையின் உறுப்பினர்கள்.

முதல் புதுமையைத் திருமண வீட்டின் விருந்தினர்களுக்கு உணவாகக் கொடுக்கச் செய்தது போல,

கடைசிச் புதுமையை இயேசு தனது மனவாட்டியான திருச்சபையின் உறுப்பினர்களாகிய நமக்கு உணவாகத் தருவதற்காகச் செய்தார்.


முதல் புதுமையில் தண்ணீரை திராட்சை இரசமாக்கினார்.

கடைசிப் புதுமையில் திராட்சை இரசத்தைத் தனது இரத்தமாக மாற்றினார்.

கடைசி இரவு உணவின்போது அவர் செய்த புதுமை அவரது பொது வாழ்வின் கடைசிப் புதுமை.

ஆனாலும் இதைப்பற்றி சிறிது ஆழ்ந்து தியானித்தால் மற்றொரு உண்மை புலனாகும்.

 தனது உடலையும் ரத்தத்தையும் தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுத்துவிட்டு,

 மறுநாள் பாடுகள் பட்டு மரணித்து,

 மூன்றாம் நாள் உயிர்த்து,

விண்ணகம் எய்திய இயேசு இன்றும் 

நமது பொது வாழ்வின் போது நம்மோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தனது ஆன்மாவோடும் சரீரத்தோடும் அன்று வாழ்ந்த அதே இயேசு 

அதே ஆன்மாவோடும் அதே சரீரத்தோடும்தான் 

இன்றும் திவ்ய நற்கருணையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அப்போஸ்தலர்கள் உணவாக உண்ட அதே இயேசுவைத் தான் நாமும் இன்று திருப்பலியின் போது உணவாக உண்கிறோம்.

இவை வெறும் வார்த்தைகள் அல்ல சத்தியமான உண்மை.

இந்த உண்மையை உணர்ந்து நாம் திவ்ய நற்கருணையை உண்கிறோமா?

நமக்கு பிடித்தமான ஒரு அரசியல் தலைவர் நமது இல்லத்திற்கு வந்தால் நாம் அவருக்கு என்ன மரியாதையைக்  கொடுப்போமோ

அந்த அளவு மரியாதையைக் கூட நாம் நமது ஆண்டவருக்குத் கொடுப்பதாக தெரியவில்லை.

அரசியல் தலைவர் ஒரு சாதாரண மனிதன்.

இயேசு நம் அனைவரையும் படைத்த கடவுள்.

மனிதனுக்குத் தலையை மட்டும் வணங்கினால் போதுமானது.

கடவுளை முழங்காலிலிருந்து ஆராதிக்க வேண்டும்.

முழங்காலில் இருந்து ஆண்டவரை வாங்க வேண்டிய நாம்,

குடியரசு தின விழாவின் போது மாணவர்கள் வரிசையாக சென்று ஆரஞ்சு வில்லையை ஆசிரியரிடமிருந்து வாங்கி வாய்க்குள் போடுவது போல,

நற்கருணை நாதரையும் வாங்கி வாயில் போட்டுக்கொள்கிறோம்.

இதுதான் நம்மைப் படைத்த சர்வ வல்லபக் கடவுளுக்கு நாம் கொடுக்கும் மரியாதை.

நமது நண்பன் நமது வீட்டுக்கு வந்தால் அவனை ஓரிடத்தில் உட்கார வைத்துவிட்டு,

 அவனோடு பேசாமல் நமது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால்

அவன் நம்மைப் பற்றி என்ன நினைப்பான்?

இயேசு நமக்குள் உணவாக வரும்போது நாம் அவரோடு எவ்வளவு நேரம் பேசுகிறோம்?

அவர் நம்மிடம் பேசுவதை எவ்வளவு நேரம் கேட்கிறோம்?

கேட்க வேண்டும்.

 அவர் செய்யச் சொல்வதைச் செய்கிறோமா?

நமது தாய் அன்னை மரியாள் 

"அவர் கூறியபடி செய்யுங்கள்" என்று நம்மிடம் கூறுகிற படி,

இயேசு சொல்வதைச் செய்கிறோமா?

ஒவ்வொரு முறை நற்கருணை வாங்கும் போதும் 

இயேசு நம்மிடம் சொல்வதைச் செய்தால் நமது வாழ்க்கை எப்படி எல்லாமோ மாறியிருக்க வேண்டுமே.

 நாம்  துவக்கத்தில் இருந்தது போலவே தான் இப்போதும் இருக்கிறோம்!

கடவுள் மாறாதவர்.

மாறாமை  என்ற அவரது பண்பை நம்மோடு பகிர்ந்து கொள்ளவில்லை.

நாம் மாறினால் தான் வளர்ச்சி அடைய முடியும்.

நமது ஆன்மீக வளர்ச்சியைப் பொருத்தமட்டில் முதலில் நாம் மனம் மாற வேண்டும்.

"அதுமுதல் இயேசு, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றத் தொடங்கினார். ''
(மத். 4:17)

நமது மன மாற்றம் செயலில் தெரிய வேண்டும்.

பைபிளை வாசிக்கும்போது இறைவாக்கு நமது கண் வழியே மனதுக்குள் செல்கிறது.

கோவிலில் பிரசங்கத்தை கேட்கும்போது இறைவாக்கு நமது காதுகள் வழியே மனதுக்குள் போகிறது.

அன்னை மரியாள் ஆற்றிய

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்." 

என்ற பிரசங்கம் நமது ஞாபகத்தில் இருக்க வேண்டும்.

கேட்டதை செயல்படுத்தி ஆன்மீகத்தில் வளர வேண்டும்.

அன்னை மரியாளின் வாழ்க்கை நமக்கு ஒரு முன்மாதிரிகை.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment