Wednesday, January 17, 2024

என் ஜெபம் கேட்கப்படவில்லை!

என் ஜெபம் கேட்கப்படவில்லை!

"ஏண்டா, பேரப்பிள்ளை சோகமா இருக்க?"

"'கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நமது ஆண்டவர் சொன்னார்ல,

என் மேலே அவருக்கு என்ன கோபமோ தெரியல, நான் கேட்டதைத் தரமாட்டேங்கிறாரு."

"'கடவுளுக்கு யார் மேலேயும்  கோபமே வராது.

பொறுமைக்கு எதிர்க் குணம் தான் கோபம்.

கடவுள் அளவு கடந்த பொறுமை உள்ளவர்.

உலகம் போகிற போக்கிற்கு அவருக்கு கோபம் வருவதாக இருந்தால் இதற்குள் உலகத்தை ஒன்றுமே இல்லாததாகச் செய்திருப்பார்.

உன்னுடைய அப்பா சொன்ன ஒரு சொல்லை நீ கேட்காவிட்டால் உனக்கு அடி கிடைக்கும்.

ஆனால் கடவுளுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் நாம் பாவம் மேல் பாவம் செய்து கொண்டேயிருக்கிறோம்.

வருடக்கணக்காக தொடர்ந்து பாவங்கள் செய்து கொண்டேயிருந்தாலும் நாம் அவரிடம் திரும்பி வருவதற்காகப் பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்."

"அப்போ என் ஜெபத்தை ஏன் அவர் கேட்கவில்லை?"

"'நீ அவரிடம் என்ன கேட்டாய்?"

"கல்லூரிப் படிப்பில் முதல்தர மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றிருக்கிறேன்.

உடனே நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டியிருக்கிறேன்.

இதுவரை ஒன்றன்பின் ஒன்றாக மூன்று வேலைகளுக்கு விண்ணப்பித்திருக்கிறேன்.

ஆனால் ஒரு வேலையும் கிடைக்கவில்லை."

"'உன்னைப் படைத்தவர் கடவுள்தான் என்பதை ஏற்றுக் கொள்கிறாயா?"

"இதென்ன, தாத்தா, கேள்வி? இது கூடவா எனக்குத் தெரியாது?"

'''நீ ஒரு பொருளை வாங்கும் போது அதைப் பயன்படுத்துவதற்கென்று ஒரு திட்டம் வைத்திருப்பாய் அல்லவா?"

''முதலில் திட்டத்தைப் போட்டு விட்டுதான் பொருளை வாங்குவேன்."

'"உன்னைப் படைப்பதற்கு முன் கடவுள் உனக்கென்று ஒரு திட்டம் போட்டிருப்பார் அல்லவா?"

''உறுதியாக. ஆனால் அவர் என்ன திட்டம் போட்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது."

"'அவர் திட்டப்படி தான் 
நீ பிறந்திருக்கிறாய், வளர்ந்திருக்கிறாய், 
பள்ளிக்கூடப் படிப்பில் வெற்றி பெற்றிருக்கிறாய்,

அவர் திட்டப்படி உனக்கு வேலை கிடைக்கும்.

உனக்கு உனது கடந்த காலம் மட்டும் தெரியும்.

நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருப்பது மட்டும் தெரியும்.

எதிர்காலத்தில் உனக்கு என்ன நடக்கும் என்று உனக்குத் தெரியாது.

ஆனால் கடவுளுக்குத் தெரியும்.

உனது முழுமையான வாழ்க்கை வரலாறே கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

உனக்கு என்ன வேலை கிடைக்க வேண்டும், 

எப்போது கிடைக்க வேண்டும் என்பது கடவுளுடைய திட்டத்தில் இருக்கும்.

முயற்சி செய்ய வேண்டியது நீ. 
பலனைக் கொடுக்க வேண்டியது கடவுள்.

நீ விண்ணப்பித்திருக்கும் வேலைகள் உனது வாழ்க்கையின் வெற்றிக்கு உதவாது என்று கடவுளுக்குத் தெரிந்திருக்கலாம்.

என்ன வேலை உதவும் என்று கடவுளுக்குத் தெரியும்.

முயற்சியையும் விடாதே, ஜெபத்தையும் விடாதே.

உனக்குப் பொருத்தமான வேலை கிடைக்கும்."

"எனக்கு என்ன வேலை உதவுமென்று கடவுளுக்குத் தான் தெரியுமே, பிறகு ஏன் நான் ஜெபிக்க வேண்டும்?"

"' நீ  ஏதாவது கேட்பதற்காகத் தான் உனது பெற்றோருடன் பேசுவாயா?"

"எனது அன்பைத் தெரிவிப்பதற்காகவும்,

அவர்களோடு எனது உறவை வளர்த்துக் கொள்வதற்காகவும்,

நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும்

எனது பெற்றோரிடம் நான் பேசுவேன்.

எனக்கு வேண்டியதை நான் கேட்காமலேயே எனது பெற்றோர் எனக்குத் தருவார்கள்.''

"'கடவுள் நமது நல்ல தந்தை.  நமது வாழ்வு சிறக்க நமக்கு என்னென்ன வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

அவருடைய நல்ல பிள்ளையாக வாழ வேண்டியது நமது கடமை.

நமக்கு வேண்டியதை அவரே தருவார்.

"ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். 
 

உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். 
  

ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். (மத்.  6:31-33)

புரிகிறதா?"

"அப்படியானால் நமது உலக வாழ்க்கைக்குத் தேவையான எதையும் கடவுளிடம் கேட்கக் கூடாதா?"

"'பிள்ளைகளுக்கு உள்ள உரிமையோடு தந்தையிடம் கேட்கலாம்.

நாம் கேட்பதில் எது நமது ஆன்மீக வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்குமோ அதைக் கடவுள் கட்டாயம் தருவார்.

ஆன்மீக வாழ்க்கைக்கு உதவிகரமாக இல்லாவிட்டால் அதை தர மாட்டார்.

உதவிகரமாய் இருப்பதை அவரே தேர்வு செய்து நமக்குத் தருவார்.

நமக்கு இருக்க வேண்டியது தந்தையின் மேல் அசைக்க முடியாத விசுவாசம்.

தர வேண்டியதை அதற்குரிய நேரம் வரும்போது தருவார்."

"இப்போது புரிகிறது, தாத்தா. 
இறைவனுக்கும் நமக்கும் உள்ள ஆன்மீக உறவை வளர்ப்பதற்கு உதவிகரமாக இருக்கக்கூடிய உதவிகளை மட்டுமே இறைவனிடம் கேட்க வேண்டும்.

நம் மீது நமக்கு இருக்கும் அக்கறையை விட கடவுளுக்கு அதிக அக்கறை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நம் மீது நமக்கு இருக்கும் உரிமையை விட நம் மீது கடவுளுக்கு இருக்கும் உரிமையே அதிகமானது.

ஏனெனில் நித்திய காலமாக நம்மை தனது நினைவில் வைத்திருந்து 

தனது பிள்ளையாக நம்மைப் படைத்தவர் அவர்.

அவர் என்ன செய்தாலும் நமது நன்மைக்காகவே இருக்கும்.

அவர் நம்மை அன்பு செய்வது போல நாமும் அவரை அன்பு செய்து,

அவரது விருப்பம் நம்மில் நிறைவேற ஏற்ற பிள்ளைகளாக வாழ்வோம்.

நாம் அவரிடம் வேண்டுவது,

அவரது விருப்பப்படி உறுதியாகக் கிடைக்கும்.

நன்றி, தாத்தா."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment