Tuesday, January 2, 2024

வந்து பாருங்கள்" (அரு.1:38)

"வந்து பாருங்கள்" (அரு.1:38)

ஒரு நாள் திருமுழுக்கு அருளப்பர் தனது  சீடர்களில் இருவரிடம் இயேசுவைக் காண்பித்து,

''இதோ! கடவுளுடைய செம்மறி" என்றார்.

அவர் ஏற்கனவே இயேசுவைப் பற்றி,

 "இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்...        
இவரே கடவுளின் மகன் என்று சாட்சியம் கூறுகின்றேன்."

என்று கூறியிருந்தார்.

அவர்கள் அதற்கு மேல் அருளப்பரிடம் விளக்கம் கேட்க வில்லை.

உலக மீட்பரைப் பார்த்தவுடனே அந்த இருவரும் அவரது பின்னால் சென்றார்கள்.

உண்மையை நேரடியாக அனுபவிப்பதற்காக அவர்கள் இயேசுவின் பின்னால் சென்றார்கள்.

இயேசு அவர்களைத் திரும்பிப் பார்த்து,

"என்ன வேண்டும் ?" என்று கேட்டார்.   

அவர்கள், "ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் ?" என்றனர்.

"வந்து பாருங்கள்" என்றார்.

இறை வசனங்களை வாசிக்கும் போது நமது மனது முழுமையான இயக்கத்தில் இருக்க வேண்டும்.

வசனங்களுக்கு முன்னால், உள்ளே, பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளைக் கண்டு பிடிக்க மனது முயற்சி செய்ய வேண்டும். 

பட்டிமன்றத்தில் கூறப்படும் நகைச்சுவைகளை ரசித்து விட்டுப் போவது போல் வசனங்களை வாசித்து விட்டுப் போய்விடக் கூடாது.

நாம் உணவை உண்ணும் போது அதை வாயில் வைத்து நன்கு அரைத்த பின்பு தான் அதை இரைப்பைக்குள் அனுப்புகிறோம்.

அது போல,

வசனங்களுக்குள் இருக்கும் உண்மையை ஆய்ந்து அறிந்த பின்பு தான் அதை நமது ஞாபகத்துக்குள் அனுப்ப வேண்டும்.

அருளப்பர் தனது சீடர்களிடம் இயேசுவைக் காண்பித்து,

''இதோ! கடவுளுடைய செம்மறி"

என்று சொன்னவுடனே அவர்கள் அவரைப் பற்றி ஏற்கனவே அருளப்பர் கூறியதை ஞாபகத்துக்குக் கொண்டு வருகின்றார்கள்.

அவர்தான் உலகத்தின் பாவங்களைப் போக்கும் மீட்பர் என்பதைத் தெரிந்து கொண்டதால்தான் அவரது பின்னால் சென்றார்கள்.

இயேசு முக்காலமும் அறிந்த கடவுள்.

தனது பின்னால் வருபவர்கள் யார் என்றும் அவர்கள் எதற்காக வருகிறார்கள் என்றும் அவருக்குத் தெரியும்.

இருந்தாலும் உண்மையை அறிய ஆசைப்படுபவர் போல,

"என்ன வேண்டும் ?"

அவரே உரையாடலை ஆரம்பிக்கிறார்.

இந்த இரண்டு வார்த்தைகளைத் தியான உணர்வோடு வாசித்தால்,

நமது ஆன்மீக அனுபவம் நமக்கு ஞாபகத்துக்கு வரும்.

எல்லோருடைய ஆன்மீக அனுபவத்தின் துவக்கமும் ஏறக்குறைய ஒன்று போல்தான் இருக்கும்.

நமது ஆன்மீக அனுபவத்தை நாம் ஆரம்பிப்பதில்லை.

கடவுள்தான் ஆரம்பிக்கிறார்.

நமது மனதுக்குள் அவர் கொடுக்கும் உள் உணர்வு (Inspiration) மூலமாகவோ, 

நமது குருக்கள் மூலமாகவோ,

நமது பிறர் மூலமாகவோ கடவுள் நமது அனுபவத்தை ஆரம்பித்து வைக்கிறார்.

தன்னால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனையும் ஆன்மீகத்தில் அவர்தான் வழி நடத்துகிறார்.

நாம் கொடுக்க வேண்டியது நமது ஒத்துழைப்பை மட்டுமே.

எப்போதாவது நமது மனதில் நாம் எதிர்பாராத, நமக்கு காரணம் தெரியாத ஏதாவது மன சஞ்சலம் ஏற்படும்போது,

''பைபிளைத் திறந்து வாசி, 
நற்கருணை நாதரைச் சந்தி,
ஆன்மீக குருவானவரிடம் பேசு, 
பாவ சங்கீர்த்தனம் செய்

என்பன போன்ற உள் உணர்வுகள் நமது மனதில் தோன்றும்.

இறைவன் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் இந்த உணர்வுகளோடு நாம் உடனே ஒத்துழைக்க வேண்டும்.

நமது ஒவ்வொரு அனுபவமும் இப்படித்தான் ஆரம்பிக்கும்.

"என்ன வேண்டும் ?" என்று இயேசு கேட்டவுடன் அவர்கள்,

"ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் ?" என்று கேட்டார்கள்.

அதற்கு ஆண்டவர் நேரடியாகப் பதில் கூறாமல்,

 "வந்து பாருங்கள்" என்றார்.

அனேக சமயங்களில் நாம் ஆன்மீக அனுபவம் என்று கூறும் போது நமது செவியால் கிடைக்கும் அனுபவம் மட்டும் ஞாபகத்துக்கு வருகிறது.

ஆன்மீகவாதிகளோடு பேசுவது,
நமது குருக்களோடு உரையாடுவது, 
ஜெபக் கூட்டங்களுக்குச் சென்று பிரசங்கங்களைக் கேட்பது, 
ஞான வாசகம் வாசிப்பது, 
தியானங்களுக்குச் செல்வது 

போன்றவற்றோடு நமது அனுபவத்தை நிறுத்திக் கொள்கிறோம்.

களத்தில் இறங்குவதில்லை.

திருப்பலியின்போது குருவானவர் 
"ஒருவரோடு ஒருவர் சமாதானம் செய்து கொள்ளுங்கள்" என்று கூறும்போது,

பக்கத்தில் இருப்பவர்களை பார்த்து, தலை வணங்கி, "சமாதானம்" என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறோம்.

சுவர் அருகே அமர்ந்திருப்பவர்கள் சுவரைப் பார்த்து "சமாதானம்" என்று கூறுவதில் திருப்தி அடைகிறார்கள்.

எப்போதாவது உண்மையிலேயே நம்மோடு சமாதானமாக இல்லாதவர்களோடு நேரடியாகப் பேசி சமாதானம் செய்திருக்கிறோமா?

சம்பந்தப்பட்ட நபர் கோவிலில் நம் அருகில் இல்லாவிட்டாலும் திருப்பலி முடிந்த பிறகாவது அவரோடு சமாதானம் செய்திருக்கிறோமா?

நமது சமாதான வாழ்வு கோவிலில் மட்டுமல்ல, நமது தினசரி வாழ்விலும் தொடர வேண்டும்.

முதலில் நமது மனதில் சமாதானம் இருக்கிறதா?

Do we have peace of mind?

"நல் மனதோர்க்குச் சமாதானம்" என்று இயேசு பிறந்த அன்று வானவர்கள் பாடினார்கள்.

நம்மிடம் நல்ல மனது இருந்தால் அதில் நிலவும் சமாதானம்,

நமது சொல் மூலமும் செயல் மூலமும்.

நம்மை சுற்றி வாழ்பவர்களை நோக்கி பரவுமே!

நம்மைச் சுற்றி உள்ளவர்கள் சமாதானக் குறைவாக நம்மோடு பழகினாலும், அவர்களை மன்னித்து நாம் அவர்களோடு சமாதானமாகப் பழகுவோமே!

பழகுகிறோமா?

ஆன்மீக அனுபவம் வெறும் வார்த்தைகளில் இல்லை,

களத்தில் இறங்கி செயல்படும் போது தான் அனுபவம் ஏற்படுகிறது.

"நீர் எங்கே தங்கியிருக்கிறீர் ?" என்று சீடர்கள் கேட்ட போது ஆண்டவர் இடத்தைச் சொல்லவில்லை.

"வந்து பாருங்கள்" என்றார்.

,''என்னோடு வாருங்கள், என்னோடு தங்குங்கள்.

நமது வாயும், செவிகளும் மட்டுமல்ல, 

உள்ளங்கள் இணைய வேண்டும்.

உள்ளங்கள் இணையும் போது தான் உறவு ஏற்படும்."

என்று இயேசு அவர்களை அழைக்கிறார்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment