Sunday, December 31, 2023

அவர் வளர வேண்டும், நானோ குறைய வேண்டும்.(அரு.3.30)

அவர் வளர வேண்டும், நானோ குறைய வேண்டும்.
(அரு.3.30)

நேற்றுதான் புத்தாண்டு பிறந்தது. இன்று அதில் 365இல் ஒரு பகுதியைக் காணவில்லை. ஒரு நாள் தேய்ந்து விட்டது.

தேதி ஒன்று இரண்டாகும்போது வளர்கிறது என்று கூறாமல் தேய்கிறது என்று கூறுவது எப்படி நியாயம் என்று கேட்கலாம். 

நாட்களும், மாதங்களும், வருடங்களும் நம்மை விட்டு கடந்து போவதால் தான் 
குழந்தை பையன் ஆகிறது 
பையன் வாலிபன் ஆகிறான் வாலிபன் பெரியவனாய் ஆகிறான் பெரியவன் தாத்தாவாகிறான்.  

ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

ஒரு மனிதன் வளர வேண்டுமானால் அவன் வாழும் காலம் தேய வேண்டும்.

அது மட்டுமல்ல மனிதன் வயதில் வளரும் போது வாழ்வில் தேய்கிறான்.

ஒருவன் 60 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று இறைவன் திட்டமிட்டுருந்தால் 

அவன் பிறந்து ஒரு வயது ஆகும்போது அவன் வாழ்நாளில் ஒரு ஆண்டு குறைகிறது.


10 வயது ஆகும்போது 10 ஆண்டுகள் குறைகின்றன.

40 வயது ஆகும்போது அவன் வாழ்நாளில் 40 ஆண்டுகள் குறைகின்றன.

60 ஆண்டுகள் ஆகும் போது அவனது வாழ்நாள் முடிந்து விடுகிறது.

அப்படியானால் வயதால் வளரும் மனிதன் வாழ்வில் வளர்கிறானா? தேய்கிறானா?

வளர்ச்சியும், தேய்மானமும் சேர்ந்தே பயணிக்கின்றன.

அதுதான் வாழ்க்கை.

திருமுழுக்கு அருளப்பர் இயேசுவையும் தன்னையும் ஒப்பிட்டுப் பேசும் போது

"அவர் வளர வேண்டும், நான் குறைய வேண்டும்" என்கிறார்.

இயேசுவையும், நம்மையும் நாம் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

நம்மில் இயேசு வளர வேண்டுமென்றால் நாம் குறைய வேண்டும்.

வளர்ச்சியும் (இயேசுவும்)
தேய்மானமும் (நாமும்) சேர்ந்தே பயணிக்க வேண்டும்.

 நாம் குறையா விட்டால் இயேசுவால் நம்மில் வளர முடியாது.

எப்படி?

இயேசு எதற்காக உலகிற்கு வந்தார்?

நமது ஆன்மாவை மீட்க.

நமக்கு ஆன்மா, உடல் என்று இரண்டு அம்சங்கள் இருக்கின்றன.

நாம் நமது உடல் வளர்வதைத் தான் நமது கண்களால் பார்க்கிறோம்.

நமது உடல் வளர்வதற்காகத்தான் உழைக்கிறோம், உண்கிறோம்.

ஆனால் ஒன்றை மறந்து விடுகிறோம்.

நமது உண்மையான வளர்ச்சி ஆன்மாவின் வளர்ச்சி தான்.

நோய் நொடி இன்றி, வலிமையில் வளர்வது உடல் வளர்ச்சி.

பாவ மாசின்றி பரிசுத்தத்தனத்தில் வளர்வது ஆன்மாவின் வளர்ச்சி.

எதன் வளர்ச்சியில் நாம் அதிக அக்கறை காட்ட வேண்டும், உடல் வளர்ச்சியிலா, ஆன்மாவின் வளர்ச்சியிலா?

ஆன்மாவின் வளர்ச்சியில் தான்.

ஏனெனில் நமது ஆன்மா தான் அழிவின்றி நித்திய காலம் வாழ வேண்டியது.

நமது உடலை எப்படி பேணி வளர்த்தாலும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அதன் வாழ்வு முடிவுக்கு வந்து, அது மண்ணுக்குள் போய்விடும்.

நமது உடலைச் சார்ந்த வளர்ச்சியில் மட்டும் நாம் ஆர்வம் காட்டினால் நமது ஆன்மாவை இழக்க நேரிடும்.

ஆகவே நமது ஆன்மா வளர வேண்டும், உடல் தேய வேண்டும். இதுதான் நமது உண்மையான வளர்ச்சி.

நமது ஆன்மா வளர வேண்டுமென்றால் அதை மீட்பதற்காக மனிதனாய்ப் பிறந்த இறைமகன் இயேசு அதில் குடியேற வேண்டும்.

இயேசுவின் ஆதிக்கம் வளர வேண்டும்.

இயேசுவின் அருளால் நமது ஆன்மா வளரும்போது,

நமது உடலைச் சார்ந்த அக்கறை தேய வேண்டும்.

நாம் உலகில் பிறந்திருப்பது ஆன்மீக வளர்ச்சிக்காகத்தான்.

நமது ஆன்மீகம் வளர வேண்டும் என்றால் அதில் இயேசு வளர வேண்டும்,

உடல் சார்ந்த வளர்ச்சி குறைய வேண்டும்.

இயேசு நமது ஆன்மாவில் வளர நாம் அவரோடு ஒத்துழைக்க வேண்டும்.

ஏதாவது ஒரு நாளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு,

அன்று நாம் எதன் வளர்ச்சிக்கு அதிக ஆர்வம் காட்டுகிறோம்,

ஆன்மீக வளர்ச்சிக்கா
 உடல் வளர்ச்சிக்கா

என்பதை ஆய்ந்து உணர்வோம்.

நமது 24 மணி நேர வாழ்வில் 

ஆன்மீக வளர்ச்சிக்கான ஜெபம், தவம், நற்செயல்கள் ஆகியவற்றுக்கு எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம்,

உடல் நலத்திற்கான காரியங்களுக்கு எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் 

என்பதை ஆராய்ந்து பார்த்தால் நாம் உண்மையிலேயே ஆன்மீகவாதிகளா, உடல் நல வாதிகளா என்ற உண்மை புலனாகும்.

நண்பர் ஒருவர் கேட்கிறார்,

ஒரு நாளில் ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும்?

உடலைச் சார்ந்த வளர்ச்சிக்கு எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும்?

ஒரே பதில் தான்.

24 மணி நேரத்தையும் ஆன்மீக வளர்ச்சிக்காகத் தான் செலவழிக்க வேண்டும்.

இப்போது ஒரு கேள்வி எழும்.

நமது உடலில் தானே ஆன்மா வாழ்கிறது.

 உடல் படுத்து விட்டால், ஆன்மா எப்படி நடக்கும்?

ஒரு மாணவன் மேல்நிலைப் பள்ளியில் 12 வது வகுப்பில் வெற்றி பெற எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும்?

முதல் வகுப்பிலிருந்து 12 ஆண்டுகள் படிக்க வேண்டும்.

ஒரு மனிதன் விண்ணக வாழ்வுக்குச் செல்ல எவ்வளவு காலம் ஆன்மீக வாழ்வு வாழ வேண்டும்?

அதற்கும் ஒரே பதில் தான்.

பிறந்ததிலிருந்து மரணம் அடையும் வரை காலம் முழுவதும் ஆன்மீக வாழ்வு தான் வாழ வேண்டும்.

அப்படியானால் உடலைச் சார்ந்த வாழ்வு?

உடலைச் சார்ந்த வாழ்வையும் ஆன்மீக மீட்புக்காக வாழ வேண்டும்.

ஆன்மீக வாழ்வுக்காக 100 சதவீத வாழ்வு,

உடல் மட்டுக்குமாக 0 சதவீத வாழ்வு.

நாம் உண்பதையும், உடுப்பதையும் உறங்குவதையும் கூட ஆன்மீக நலனுக்காக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டால்,

 அவையும் ஆன்மீக வாழ்வாக மாறிவிடும்.

இயேசுவை நம்மை முழுமையாக ஆள அனுமதித்து விட்டால்,

நமது ஒவ்வொரு செயலையும் அவருக்கு ஏற்றதாக மாற்றி விடுவார்.

"இயேசுவே, இன்று நான் விடும் ஒவ்வொரு மூச்சையும் உமக்கு ஒப்புக்கொள்கிறேன்.

இயேசுவே, எனது உடல் உமக்காக உழைக்க வேண்டும். அதற்காகவே அதற்கு உணவு கொடுக்கிறேன்.

இயேசுவே, எனது அயலானுக்கு உதவி செய்ய பணம் தேவைப்படுகிறது. அதற்காகவே அதை ஈட்டுகிறேன்.

இயேசுவே, காலை 6:00 மணிக்கு திருப்பலிக்குச் செல்ல வேண்டும்.
அதற்காகவே சீக்கிரம் படுக்கைக்கு செல்ல வேண்டும். ஐந்து மணிக்கு எழுந்து விடுவேன்.

இயேசுவே, எனது பாவங்களுக்குப் பரிகாரமாக தவ முயற்சிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்காக இன்று நண்பகல் உணவை மட்டும் உண்கிறேன்."

இவ்வாறாக நமது ஆசைகளுக்கு முற்றிலும் விடை கொடுத்து விட்டு,

சகலத்திலும் இயேசுவின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே வாழ்ந்தால்

நமது ஒவ்வொரு செயலும் ஆன்மீகச் செயலே.

நமது உடல் இயேசுவின் பணியாளாக மாறி விடுகிறது.

நம்மில் இயேசுவின் மேல் உள்ள ஆசை வளர வேண்டும். நமது ஆன்மா வளரும்.

உடல் நலன்மீது உள்ள ஆசை குறைய வேண்டும்.

இயேசுவோடு வளர்வது தான் நமது உண்மையான வளர்ச்சி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment