இயேசு மனுமகனாய்ப் பிறந்த இறைமகன்.
மனிதவுரு எடுத்த பின்பும் அவர் சர்வ வல்லவ கடவுள் தான்.
அவருக்கு சுபாவங்கள் இரண்டு, ஆனால் ஆள் ஒருவரே, பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாவது ஆள்.
தந்தையோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளானவர்.
சர்வ லோகத்தையும் ஒன்றும் இல்லாமையிலிருந்து படைத்தவர்.
மனித சுபாவத்தில் பிறப்பும் இறப்பும் உடையவராக இருந்தாலும்,
தேவ சுபாவத்தில் துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள்.
கடவுள் மனிதனாகப் பிறந்ததால்தான் அவரைப் பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த அன்னை மரியாளைக் கடவுளின் தாய் என்கிறோம்.
சர்வ வல்லமை உள்ள கடவுளாக இருந்தாலும், பாவம் தவிர மற்ற அனைத்து மனித பலவீனங்களையும் ஏற்றுதான் மனிதனாகப் பிறந்தார்.
"தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்."
அகில உலகமும் அதில் உள்ள எல்லா வசதிகளும் அவருக்கே சொந்தமாக இருந்தாலும்,
அவர் சாணி நாற்றமெடுக்கும் ஒரு மாட்டு தொழுவையே தனது பிறப்பிடமாக தேர்ந்தெடுத்தார்.
மனுவுரு எடுத்த அவரை முதல் முதல் சந்திக்க ஆடுகள் மேய்க்கும் இடையர்களையே தேர்ந்தெடுத்தார்.
குழந்தையாக இருந்த அவரை ஏரோது கொல்லத் தேடிய போது,
அவனை அவர் ஒன்றுமில்லாமக்கே
அனுப்பியிருக்க முடியும்.
ஆனால் அப்படிச் செய்யாமல் அவரே சாதாரண மனிதனைப் போல எகிப்துக்குத் தப்பிச்சென்று அங்கே மூன்று ஆண்டுகள் நாடோடியாக வாழ்ந்தார்.
தன்னைப் பெற்ற அன்னையையும், வளர்த்த சூசையப்பரையும் தனக்குத் துணையாகப் பயன்படுத்திக் கொண்டார்.
நசரேத்தில் குடியேறிய பின், சூசையப்பரோடு தச்சுத் தொழில் செய்தவர்,
அவரது மரணத்திற்குப் பின் தானே தச்சுத் தொழில் செய்து தன் அன்னையைக் காப்பாற்றினார்.
கடவுளாகிய அவர் மனிதர்களோடு மனிதராக வாழ்ந்தார்.
மூன்று நாட்களாக தொடர்ந்து அவரோடு இருந்து, அவரது நற்செய்தியை கேட்டுக் கொண்டிருந்த மக்கள் மீது இரங்கி,
அவர்களுக்கு உணவு கொடுக்க எண்ணினார்.
ஒன்றுமில்லாமையிலிருந்து உலகை படைத்தவரால்,
ஒன்றுமில்லாமையிலிருந்து
உணவைப் படைக்க முடியாதா?
முடியும்.
பின் ஏன் ஒன்றுமில்லாமையிலிருந்து
அப்பங்களைப் படைக்காமல்,
சீடர்களைப் பார்த்து,
"உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன ?" என்று கேட்டார்?
முதல் மனிதனின் உடலை ஏற்கனவே படைக்கப்பட்டிருந்த மண்ணிலிருந்து உண்டாக்கி விட்டு,
அவனது ஆன்மாவை மட்டும் ஒன்றும் இல்லாமையிலிருந்து படைத்தார்.
இப்போதும் மனிதனின் உடலை உண்டாக்கும் பொறுப்பை ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கும் மனித கணவன் மனைவியிடம் ஒப்படைத்து விட்டு
ஆன்மாவை மட்டும் ஒன்றும் இல்லாமையிலிருந்து படைக்கிறார்.
நமது பெற்றோரின் திருமண உறவின் போது நமது உடல் உண்டானது.
அதே வினாடி கடவுள் நமது ஆன்மாவை படைத்து உடலோடு சேர்க்கிறார்.
இதிலிருந்து ஒன்று புரிகிறது.
படைப்பு கடவுளுக்கு மட்டுமே உரிய செயல் என்றாலும்,
அதில் நமது உதவியையும் கடவுள் பயன்படுத்திக் கொள்கிறார்.
நமது உதவியின்றி அவர் புதிய மனிதனைப் படைப்பதில்லை.
எல்லா மனிதர்களும் கடவுளின் பிள்ளைகள் தான்.
அவரது பிள்ளைகள் அனைவரையும் பராமரிப்பவர் அவர்தான்.
அவரது பிள்ளைகளைப் படைக்க நமது உதவியைப் பயன்படுத்தி கொள்வது போலவே
அவர்களைப் பராமரிக்கவும் நமது உதவியைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
அதற்காகத்தான்,
"உன்னை நேசிப்பது போலவே உனது அயலானையும் நேசி." என்ற கட்டளையை நமக்கு கொடுத்திருக்கிறார்.
இந்த கட்டளையின் அடிப்படையில் தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நேசிக்கிறார்கள், பராமரிக்கிறார்கள்.
இதன் அடிப்படையில் தான் தனது நற்செய்தியை கேட்க வந்த கூட்டத்திற்கு உணவு அளிக்கும் படி தனது சீடர்களை,
உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன ?" என்று அவர்களைக் கேட்க,
அவர்கள், "ஏழு இருக்கின்றன. சில சிறு மீன்களும் உள்ளன" என்றனர்.
ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து நன்றிகூறி, பிட்டுத் தம் சீடரிடம் கொடுத்தார்: அவர்கள் மக்களுக்குக் கொடுத்தனர்.
எல்லோரும் வயிறார உண்டார்கள்.
உண்டவர்களின் எண்ணிக்கை
பெண்களும் சிறுவர்களும் நீங்கலாக, உணவு அருந்திய ஆண்கள் தொகை நாலாயிரம்.
ஆண்களை விட அதிகமான பெண்கள்தான் நற்செய்தியைக் கேட்க வந்திருப்பார்கள்.
அந்த கணக்கின்படி பார்த்தால் உண்டவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்துக்கும் அதிகமாக இருக்கும்.
இந்த நிகழ்ச்சி மூலமாக இயேசு நமக்கு என்ன பாடம் கற்பிக்கிறார்?
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment