* * . * . * * . * * * . * * * . *
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், அது நல்லதோ கெட்டதோ, ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.
மனநிலை சரியில்லாதவன் தான் நோக்கமேயின்றி ஏதாவது செய்து கொண்டேயிருப்பான்,
சாப்பிடுபவன் ஒன்று பசிக்காகச் சாப்பிடுவான் அல்லது ருசிக்காகச் சாப்பிடுவான்.
ஏதாவது ஒரு நோக்கத்துக்காகச் செயல் புரிபவன், செயலுக்குப் பின் தனது நோக்கம் நிறைவேறி விட்டதா, இல்லையா என்பதை பற்றி ஆராய்வான்.
பசிக்காகச் சாப்பிடுபவனுக்குச் சாப்பிட்ட பின் பசி நீங்கியிருக்க வேண்டும்.
சாப்பிட்ட பின்பும் பசித்துக்கொண்டிருந்தால் அவன் எவ்வளவு சாப்பிட வேண்டுமோ அவ்வளவு சாப்பிடவில்லை என்று அர்த்தம்.
ருசிக்காக சாப்பிடுபவனுக்கு சாப்பிட்ட பின் ருசியை அனுபவித்த திருப்தி ஏற்பட்டிருக்க வேண்டும்.
அளவுக்கு மீறிய உப்பினாலோ, உறைப்பினாலோ உணவு ருசியாக இல்லாவிட்டால் அவனுக்கு ருசியாய் உண்ட திருப்தி ஏற்பட்டிருக்காது.
திருமண விழாவின் நோக்கம் என்ன?
ஒரு ஆணும் பெண்ணும் கருத்து ஒருமித்த கணவன் மனைவியாக இணைவதே திருமண விழாவின் நோக்கம்.
மேடை அலங்காரமோ,
சங்கீதக் கச்சேரியோ,
பேச்சாளர்களின் வாழ்த்துரையோ, திருமண விருந்தோ,
விழாவை சிறப்பிக்க நாம் செய்யும் எந்த செயலுமோ
திருமண விழாவில் நோக்கம் அல்ல.
இவையெல்லாம் சிறப்பாக அமைந்து திருமணத் தம்பதியர் கருத்து ஒருமித்த கணவன் மனைவியாக மாறாவிட்டால் திருமண விழாவின் நோக்கம் நிறைவேறவில்லை.
நாம் கிறிஸ்மஸ் திருவிழா கொண்டாடியதன் நோக்கம் என்ன?
நமது மீட்புக்காக மனிதவுரு எடுத்த நமது ஆண்டவர் இயேசுவின் அருளை நிறையப் பெற்று, ஆன்மீகத்தில் வளர்ச்சி அடைவது தான் கிறிஸ்துமஸ் விழாவின் நோக்கம்.
அதாவது நமது ஆன்மாவின் மீட்பு தான் கிறிஸ்துமஸ் விழாவின் நோக்கம்.
இதை ஒட்டிய வெளியரங்க,
புத்தாடை அணிதல்,.
குடில் ஜோடித்தல்,
ஸ்டார் தொங்க விடுதல்,
கிறிஸ்மஸ் தாத்தா வலம் வருதல், கிறிஸ்மஸ் விருந்து,
போன்ற கொண்டாட்ட நிகழ்வுகள் எதுவும் கிறிஸ்மஸ் விழாவின் நோக்கம் அல்ல.
இவையெல்லாம் சிறப்பாக அமைந்து இயேசுவின் அருளால் ஏற்படும் ஆன்மீக வளர்ச்சி எதுவும் நம்மிடம் ஏற்பட்டிருக்காவிட்டால் நமது கிறிஸ்மஸ் விழா ஒரு தோல்வி விழாதான்.
கடைக்குச் சென்று ஒரு கப் காபி கேட்கிறோம். கப் வந்தது, காபி வரவில்லை. காசு கொடுப்போமா?
கொண்டாட்டங்கள் சிறப்பாக இருந்தன, குடிலில் பிறந்த இயேசு நமது உள்ளத்தில் பிறக்கவில்லை.
ஆன்மீக வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை.
விழா கொண்டாட்டத்தால் நமக்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை.
விழாவினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
நமது ஆன்மா பரிசுத்தத் தனத்தில் வளர்ந்திருக்க வேண்டும்.
இறையன்பினால் இயேசுவோடு நமது ஆன்மீக உறவின் நெருக்கம் அதிகரித்திருக்க வேண்டும்.
இயேசு நமக்குள்ளும்
நாம் இயேசுவுக்குள்ளும்
இணைந்து வாழ ஆரம்பித்திருக்க வேண்டும்.
நமது பிறரன்பு செயல்களில் வெளிப்பட்டிருக்க வேண்டும்.
செயல்கள் இல்லாத உறவு செத்த உறவு.
செயல் பூர்வமான பிறரன்பு தான் உண்மையான இறையன்பு.
நமது பிறருக்கு நாம் என்ன செய்கிறோமோ அதை இறைவனுக்கே செய்கிறோம்.
இரண்டு சக்கரங்கள் உள்ள மிதிவண்டியின் ஒரு சக்கரம் உருளாடாவிட்டால் மிதிவண்டி நகராது.
இறையன்பும், பிறரன்பும் நமது ஆன்மீக வண்டியின் இரண்டு சக்கரங்கள்.
அதில் ஒன்று நகராவிட்டாலும் நமது ஆன்மீகம் நகராது.
தேர்வு எழுதுபவன் தேர்வு எழுதியவுடன் தான் எழுதிய பதில்களைத் திரும்பிப் பார்ப்பது போல,
நாம் கொண்டாடிய கிறிஸ்மஸ் விழாவைத் திரும்பிப் பார்ப்போம்.
ஆன்மீக ரீதியாக நாம் வெற்றி பெற்றிருந்தால் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
போதிய வெற்றி பெற்றிருக்காவிட்டால் நாம் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்வோம்.
அது அடுத்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் விழாவைச் சிறப்பாக கொண்டாட நமக்கு உதவியாக இருக்கும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment