Sunday, December 10, 2023

கடவுளைத் தூஷித்துப்பேசும் இவர் யார்? கடவுள் ஒருவரேயன்றிப் பாவத்தை மன்னிக்க வல்லவர் யார்?"(லூக்.5:21)

கடவுளைத் தூஷித்துப்பேசும் இவர் யார்? கடவுள் ஒருவரேயன்றிப் பாவத்தை மன்னிக்க வல்லவர் யார்?"
(லூக்.5:21)

இயேசு உறுதியாக குணமாக்குவார் என்ற விசுவாசத்தோடு வீட்டின் கூரை வழியே இறக்கி விடப்பட்ட திமிர்வாதக்காரனை நோக்கி இயேசு,

"அன்பனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

மறைநூல் அறிஞரும் பரிசேயரும், "கடவுளைத் தூஷித்துப்பேசும் இவர் யார்?

 கடவுள் ஒருவரேயன்றிப் பாவத்தை மன்னிக்க வல்லவர் யார்?" என்று எண்ணினர்.

மறைநூல் அறிஞருக்கும் பரிசேயருக்கும் இயேசு கடவுள் என்ற விசுவாசம் இல்லை.

ஆகவே இயேசு கடவுளைத் தூஷிப்பதாக எண்ணினர்.

அவர்களது எண்ணங்களை அறிந்த இயேசு  தன் மேல் அவர்களுக்கு விசுவாசம் ஏற்படுவதற்காக அவர்களை நோக்கி,

"எது எளிது ? " உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன " என்பதா ? " எழுந்து நட என்பதா ?" என்று கேட்டதோடு

 "மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"

 திமிர்வாதக்காரனை நோக்கி- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து, உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு, வீட்டிற்குப்போ" என்றார்.

 உடனே அவன் அவர்கள்எதிரில் எழுந்து, தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு, கடவுளை மகிமைப் படுத்திக்கொண்டே வீடு சென்றான்."

இயேசுவின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் ஒரு நோக்கம் இருக்கும்.

இயேசு தனது பொது வாழ்வின் போது அநேக புதுமைகளைச் செய்தார்.

ஆனால் புதுமைகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் உலகுக்கு வரவில்லை.

அவர் உலகுக்கு வந்தது மனிதர்களின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும், அவர்களது பாவங்களை மன்னிக்கவும்.

உலகைச் சார்ந்த நோய்கள் குணமாக வேண்டும் என்பதற்காக மருந்து சாப்பிடுகிறோம்.

நமது பாவங்கள் ஆன்மாவைச் சார்ந்த நோய்.

நமது பாவ நோய் குணமாக வேண்டுமென்றால் நமக்கு விசுவாசம் வேண்டும்.

பாவங்களிலிருந்து விடுதலை பெற்று புண்ணியத்தில் வளர்வதுதான் ஆன்மீக வாழ்வு.

விசுவாசம் தான் ஆன்மீக வாழ்வின் உயிர்.

விசுவாசம் இல்லாவிட்டால் பாவ மன்னிப்பும் இல்லை, ஆன்மீக வாழ்வும் இல்லை.

மனிதர்களிலேயே தன் மீது விசுவாசத்தை ஏற்படுத்துவதற்காகத் தான் இயேசு புதுமைகள் செய்தார்.

இயேசு செய்த முதல் புதுமை கானாவூர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியது.

அந்த புதுமை அவரைப் பின்பற்றுபவர்களிடம் விசுவாசத்தை ஏற்படுத்தியது.

விசுவாசம்தான் நோயாளிகளை அவரிடம் அழைத்து வந்தது.

ஆகவே தான் நோயாளியை குணமாக்கும் போதெல்லாம்
" உனது விசுவாசம் உன்னை குணமாக்கிற்று" என்று  சொல்வதை இயேசு வழக்கமாகக் கொண்டார்.

விசுவாசம் இன்றி பாவ மன்னிப்பு இல்லை.

பாவ மன்னிப்பு இன்றி மீட்பு இல்லை.

தன்னைக் கடவுள் என்று மக்கள் விசுவாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இயேசு புதுமைகளை செய்தார்.

கூரை வழியே இறக்கப்பட்ட திமிர்வாதக்காரனிடம் விசுவாசம் இருந்தது.

ஆகவே தான் இயேசு அவனை நோக்கி,

''உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

தனக்குப் பாவங்களை மன்னிக்க அதிகாரம் ஒன்று என்பதை நிரூபிப்பதற்காகத்தான்,

திமிர் வாதக்காரனைக் குணமாக்கினார்.

நமது உடலையும் ஆன்மாவையும் படைத்தவர் அவர்தான்.

ஆகவே அவை இரண்டுமே அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டவை. 

ஆனாலும் இயேசு உடல் ரீதியாக நோயைக் குணமாக்கும் உலகியல் மருத்துவர் அல்ல.

ஆன்மாவைக் குணமாக்கும் ஆன்மீக மருத்துவர்.

அவர் உடலைச் சார்ந்த நோய்களை குணமாக்கியதே மக்களிடம் விசுவாசத்தை ஏற்படுத்துவதுவற்கும், அதை உறுதிப்படுத்துவதற்கும்தான்.

நமது ஆன்மீக வாழ்வு இறைவனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்றால் இயேசுவின் இந்த அணுகு முறையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசு ஏற்றுக்கொள்கிற படியான விசுவாசம் நம்மிடம் இருக்கிறதா?

அது என்ன நிலையில் இருக்கிறது?

நாம் ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவியின் அருளால் விசுவாசத்தை இலவசமாகப் பெற்றோம்.

விசுவாசிகளாக மாறினோம்.

விசுவசிப்பவன் மட்டும் விசுவாசி அல்ல,

விசுவாசத்தை வாழ்பவனே உண்மையான விசுவாசி.

நமது பாவங்களை மன்னிக்க இயேசுவுக்கு அதிகாரம் உண்டு என்பதை விசுவசிக்கிறோம்.

இந்த விசுவாசத்தை வாழ்கிறோமா?

நமது கிறிஸ்தவ வாழ்க்கையே ஜென்ம பாவத்திலிருந்து விடுதலை பெற்ற வினாடியிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.

அந்த வினாடியில் நமது ஆன்மா பாவ மாசின்றி பரிசுத்தமாகிறது.

நாம் பெற்ற பரிசுத்தத் தனத்தைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை.

அந்த கடமையை நிறைவேற்றுவது தான் கிறிஸ்தவ வாழ்க்கை.

ஆனால் நமது வாழ்க்கையை சிறிது நேரம் பின் நோக்கிப் பார்த்தால் நாம் நமது கடமையை நிறைவேற்றவில்லை என்ற உண்மை புரியும்.

அதற்கு எதிர் மாறாக ஜென்மப்  பாவத்திலிருந்து விடுதலை பெற்று பரிசுத்தமடைந்த நமது ஆன்மாவைக் 

கர்மப் பாவங்களின் மூலம்  
மாசு படுத்துவதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்திருப்பது புரியும்.

இறையன்புக்கும், 
பிறரன்புக்கும் எதிராக நாம் செய்த, செய்து கொண்டிருக்கிற  பாவங்களைப் பற்றி நினைத்துப் பார்த்தால் இது புரியும்.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன்
 பல்லை விளக்கி, 
முகத்தைக் கழுவி, 
உடலைக் குளிப்பாட்டி, 
சுத்தமான உடையணிந்து, 
வயிறார சாப்பிட்டு 
நமது உடலை பேணும் நாம் 

அதில் ஒரு சதவீதமாவது நமது ஆன்மாவைப் பேணுவதில் செலவழித்திருக்கிறோமா?

காலையில் எழுந்தவுடன் முந்திய நாள் நாம் செய்த பாவங்களை நினைத்துப் பார்த்து,

 அவைகளுக்காக மனஸ்தாபப்பட்டு,

 இறைவனின் மன்னிப்பைப் பெற்று 

முதலில் நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்திவிட்டு ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறோமா?

பாவ அழுக்கு படிந்த ஆன்மாவோடு 

"தந்தை மகன் தூய ஆவியின் பெயரால்" நமது நாளை ஆரம்பித்தால்,

நமது பாவ வாழ்க்கைக்கு இறைவனையும் துணைக்கு அழைப்பது போல் தோன்றவில்லையா?

அதே பாவம் நிலையோடு கோவிலுக்குச் சென்று,

 பாவ சங்கீர்த்தனம் செய்யாமல்,

 திருப்பலியில் கலந்து கொள்வதோடு,

 திரு விருந்தும் அருந்தினால்

 சாணி அள்ளிய கையோடு சாப்பிட ஆரம்பிப்பது போல் தோன்றவில்லையா?

வயலில் வேலை செய்துவிட்டு,

வீட்டுக்கு வந்து கால் கை கழுவாமல், உணவை உண்டு விட்டு,

அப்படியே படுக்கைக்குச் சென்றால் படுக்கை என்னாகும்?

நமது உடலும் என்னாகும்?

பாவ அழுக்கைக் கழுவாமல்,

காலை செபத்தை வாசித்து விட்டு,

 திருப்பலி கண்டு, திரு விருந்திலும் கலந்து கொண்டால்

நமது ஆன்மீக வாழ்க்கை என்னாகும்?

Dining table ல் அமர்ந்து, எவர் சில்வர் தட்டில் உணவைப் போட்டு சாப்பிடுவதற்குப் பதிலாக, 

அதே உணவை எருக்குழியில் போட்டு எருவோடு சேர்த்து அள்ளிச் சாப்பிடுவது 
போலாகும்.

வாசகங்கள் வாசிக்கப்பட்ட பின் கோவிலுக்குள் நுழைந்து,

பிரசங்க நேரத்தில் வெளியே போய்விட்டு,

நற்கருணை கொடுக்கும்போது உள்ளே நுழைந்து,

இடது கையில் ஆண்டவரை வாங்கி, வலது கையால் நாவிற்குள் அனுப்பிவிட்டு,

நற்கருணைத் துகள்களை தரையில் தட்டி விட்டு,

அப்படியே கோவிலில் விட்டு வெளியேறி,

Tea கடைக்கு செல்லும் 'உத்தம' கிறிஸ்தவர்களும் நமக்குள் இருக்கிறார்கள்.

கடவுளுக்காகவும், பிறருக்காகவும் 
வாழாமல், தங்களுக்காக மட்டும் வாழும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.


கடவுளுக்காகவும், பிறருக்காகவும் மட்டும் வாழும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.

நாம் எந்தப் பக்கம் என்பதை நினைத்துப் பார்ப்போம்.

பாவ மன்னிப்பை விசுவசித்தால் மட்டும் போதாது, வாழ வேண்டும்.

நாம் அனைவரும் பாவிகள் தான்.

நம்மைத் தேடித் தான் இயேசு உலகிற்கு வந்தார்.

நாம் அவரைத் தேடி,
பாவ மன்னிப்பு பெற்று 
பரிசுத்த வாழ்வு வாழ்வோம்.

அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment