Wednesday, December 27, 2023

இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்:(லூக்.2:34)

"இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்:
(லூக்.2:34)

யூத மதச் சட்டப்படி ஒரு தாய்க்கு முதலில் பிறக்கும் குழந்தையைக் கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.

இது யூத மதத்தைப் பின்பற்றும் மனிதர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம்.

கடவுள் மனிதர்களுக்கான சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்.

காலத்திற்கு அப்பாற்பட்ட கடவுள் துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

ஆனாலும் மனித குலத்தைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக துவக்கமும் முடிவும் உள்ள மனிதனாகப் பிறக்கத் திட்டமிட்ட கடவுள்,

மனிதர்களுக்கான சட்டங்களுக்கு தன்னையே உட்படுத்திக் கொண்டார்.

அதனால்தான் தான் குழந்தையாக இருந்த போது கோவிலில் தந்தை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படவும்,

திருமுழுக்கு அருளப்பர் கையால் ஞானஸ்நானம் பெறவும் தன்னை உட்படுத்திக் கொண்டார்.

அதன்படி அவர் பிறந்த 40 வது நாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டார்.

சட்டப்படி ஒரு சோடி காட்டுப் புறாக்கள் பலியாகக் கொடுக்கப்பட்டன. 

தேவ ஆவியின் ஏவுதலால் கோயிலுக்கு வந்த சிமியோன் என்னும் நீதிமான், குழந்தையைக் ஏந்திக்கொண்டு,

திருக் குடும்பத்துக்கு ஆசிகூறி, 

 குழந்தையின் தாயாகிய மரியாளைப் பார்த்து,

 "இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்: எதிர்க்கப்படும் அறிகுறியாக இருப்பான்.

 உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்" என்றார்.

இறை மகன் மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுத்துப் பிறந்தது மனித குல மீட்புக்காக, அதாவது, எழுச்சிக்காக.

எழுச்சிக்காகப் பிறந்தவர் எப்படி வீழ்ச்சியாக இருப்பார்?

இறைவன் நமது முதல் பெற்றோரைப் படைத்தபோது அவர்கள் அனுசரிப்பதற்காகக் கட்டளை ஒன்று கொடுத்திருந்தார்.

கட்டளை கொடுக்கப்பட்டதன் நோக்கம் அவர்கள் அதன்படி நடந்து தங்கள் பரிசுத்தத் தனத்தில் வளர்வது.

பரிசுத்தத் தனத்தில் வளர்வதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளை,

அவர்கள் அதை மீறிய போது அவர்களது வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது. 

காலையில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு நேரம் குறிப்பிடப்படாவிட்டால்,

அவர்கள் நினைத்த நேரத்தில் பள்ளிக்கு வரலாம்.

நேரம் குறிப்பிடப்பட்ட பின்,

நேரத்துக்கு வருபவர்கள் நல்ல மாணவர்கள்.

பிந்தி வருபவர்கள் தண்டனைக்கு உட்பட்ட மாணவர்கள்.

மனித குல மீட்புக்காகப் பிறந்த இயேசுவின் சொற்படி நடக்கிறவர்கள் மீட்பு பெறுவார்கள்.

அது அவர்களுக்கு எழுச்சி.

சொற்களை மீறி நடப்பவர்கள் தண்டனைக்கு உட்படுவார்கள்.

அது அவர்களுக்கு வீழ்ச்சி.

நேசிக்கப்படும் பொழுது மனிதர்களின் எழுச்சிக்கு காரணமாகும் அதே இயேசு,

வெறுக்கப்படும் போது அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் ஆகிறார்.

ஆனால் வீழ்ச்சிக்கு அவர் காரணம் என்று  புரிந்து கொள்வது சரியான புரிதல் அல்ல.

நரகத்துக்குப் போகின்றவர்கள் கடவுள் எங்களைப் படைத்ததால்தான் நரகத்துக்குப் போகிறோம் என்று சொல்வது எப்படிச் சரியாகும்?

கடவுள் நம்மைப் படைத்தது விண்ணகப் பேரின்ப வாழ்வுக்காகத்தான்.

ஆனாலும் பேரின்ப வாழ்வு வேண்டுமா, பேரிடர் வாழ்வு வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டியது மனிதன் தான்.

சுகம் இல்லாத ஒருவன் மருத்துவரிடம் செல்கிறான்.

அவர் அவனுக்கு மருந்தாக சில மாத்திரைகளைக் கொடுக்கிறார்.

மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிட்டால் அவன் குணம் பெறுவான்.

சாப்பிடாவிட்டால் குணம் பெற மாட்டான்.

வியாதி குணமாகாவிட்டால் அதற்கு காரணம் மாத்திரைகள் அல்ல,

அவற்றை சாப்பிடாத நோயாளிதான்.

அதேபோல ஒரு மனிதன் பாவத்திலிருந்து மீட்பு பெற்றால் அதற்குக் காரணம் 

அதற்காகப் பாடுகள் பட்டு தன்னையே சிலுவையில் பலியாக்கிய இயேசு கிறிஸ்து.

மீட்பு பெறாவிட்டால் அதற்குக் காரணம் மீட்புத் தர வந்த இயேசுவை அவன் ஏற்றுக் கொள்ளாதது தான்.

சர்வ சுதந்திரத்தோடு நித்திய காலமாய் வாழும் இறைவன்,

தனது சாயலாகப் படைத்த மனிதனுக்குச் சுதந்திரத்தைப் பகிர்ந்து கொடுத்துள்ளார்.

சுதந்திரத்தைப் பயன்படுத்தி இறைவன் தரும் மீட்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி
மீட்பை ஏற்றுக்கொள்ளா விட்டால் அதற்குக் காரணம் அவன் தான், மீட்பர் அல்ல.

நாம் எப்படி நமது சுதந்திரத்தைப் பயன்படுத்துகிறோம்?

காலையில் 5 மணிக்கு எழுந்து, காலைக் கடன்களை முடித்துவிட்டு, குளித்துவிட்டு| சுத்தமான உடையணிந்து ஆறு மணித் திருப்பலிக்குச் செல்ல வேண்டும்.

காலை ஐந்து மணிக்கு கடிகாரம் அலாரம் அடிக்கிறது.

அலார ஓசை கேட்டவுடன் எழ வேண்டும்.

ஆனாலும் எழவா, வேண்டாமா என்று தீர்மானிக்க நமக்குப் 
பரிபூரண சுதந்திரம் இருக்கிறது.

எழுபவர்கள் பாக்கியவான்கள், எழாதவர்கள் சோம்பேறிகள்.

நமது சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

கோவிலுக்குள் நுழைந்தவுடன் திவ்ய நற்கருணையின் முன் ஒற்றை முழங்கால் படியிட்டு எழவோ, (Genuflect)

தலையை மட்டும் குனிந்து வணங்கவோ நமக்கு  முழு சுதந்திரம் இருக்கிறது.

திவ்ய நற்கருணை நாதருக்கு உரிய ஆராதனையைக் கொடுக்க விரும்புவோர் முழங்கால் படியிட்டு எழுவர்.

தலை குனிந்து வணங்குவது மனிதருக்குச் செலுத்தும் மரியாதை.

நமது சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

திவ்ய நற்கருணையை நாவில் வாங்கவோ, கையில் வாங்கவோ நமக்கு முழுமையான சுதந்திரம் இருக்கிறது.

நற்கருளையில் ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கிறார்.

நாவில் வாங்கும் போது துகள் எதுவும் கீழே விழ வாய்ப்பு இல்லை.

ஆனால் கையில் வாங்கும் போது துகள்கள் கையில் ஒட்டவும் தரையில் விழவும் வாய்ப்பு இருக்கிறது.

தரையில் விழும் துகள்கள் வருவோர் போவோரால் மிதிபட வாய்ப்பு இருக்கிறது.

நமது சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

நமது முதல் பெற்றோர் தங்களது சுதந்திரத்தை விலக்கப்பட்ட கனியைத் தின்னப் பயன்படுத்தினார்கள்.

நாம் நமது சுதந்திரத்தை பாவம் செய்ய பயன்படுத்துகிறோமா?

 நற்செயல் புரியப் பயன்படுத்துகிறோமா?

நமது சுதந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை முழுத் திருப்பலி காணப் பயன்படுத்துகிறோமா?

அரைகுறையாக காணப் பயன்படுத்துகிறோமா?

நமது சுதந்திரத்தைத் தீமைக்கு நன்மை செய்யப் பயன்படுத்துகிறோமா?

பழிக்குப் பழி வாங்கப் பயன்படுத்துகிறோமா?

நமது உடல் உறுப்புகளை நமது விருப்பம் போல் தான் பயன்படுத்துகிறோம். அதற்கு நமக்கு முழு உரிமை இருக்கிறது.

நமது கரங்களை அள்ளிக் கொடுக்க பயன்படுத்துகிறோமா? அள்ளி எடுக்க பயன்படுத்துகிறோமா?

நமது வாயை அன்பாக பேசப் பயன்படுத்துகிறோமா?
கோபமாகப் பேச பயன்படுத்துகிறோமா?

நமது செயலால் மற்றவர்கள் பயன்பெற்றால் அது நற்செயல்,

மற்றவர்களுக்கு துர்மாதிரிகை ஏற்பட்டால் அது தீச்செயல்.

நாம் பாவத்திலிருந்து எழுந்து, நற்செயல்கள் புரிய நமக்குத் தனது அருள் வரங்களைத் தரவே இயேசு மனிதனாகப் பிறந்தார்.

அவர் தரும் அருள் வரங்களைப் பயன்படுத்தாமல் நாம் பாவத்தில் விழுந்தால் அதற்கு பொறுப்பு நாம் தான்.

நாம் வாழும் நேரம் இறைவன் நமக்குக் கொடுத்த பரிசு.

நேரத்தைப் பயன்படுத்துபவர்கள் வாழ்வார்கள்.

வீணடிப்பவர்கள் வீழ்வார்கள்.

நேரம் + பயன்பாடு = வாழ்க்கை.
நேரம் + வீணடித்தல் = வீழ்ச்சி.

 இறைவன் தந்த நேரத்தை அவர் சித்தப்படி வாழப் பயன்படுத்துவோம்.

நிலைவாழ்வு பெறுவோம்.

அதுதான் நாம் படைக்கப்பட்டதன் நோக்கம்.

நம்மைப் படைக்க கடவுள் நமது அனுமதியைக் கேட்கவில்லை.

ஆனால் நம்மை மீட்க நமது அனுமதியை எதிர்பார்க்கிறார்.

கடவுளோடு ஒத்துழைத்து அவர் தரும் மீட்பைப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment