Sunday, December 17, 2023

நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள்.(மத். 7:1)

நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள்.(மத். 7:1) 

"தாத்தா, இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் இப்போது நரகத்தில்தானே இருப்பான்."

"'மனிதனின் ஆழ்மனதை இறைவன் மட்டுமே அறிவார்.

நமக்கு புறம் மட்டுமே தெரியும்.

நமக்கு தெரிவதை மட்டும் வைத்து நாம் யாரைப் பற்றியும் தீர்ப்புச் சொல்லக்கூடாது.

நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள். என்று ஆண்டவரே சொல்லியிருக்கிறார்."

"மனுமகனைக் காட்டிக்கொடுப்பவனுக்கோ ஐயோ கேடு! அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்" என்று ஆண்டவரே சொல்லியிருக்கிறாரே"

"'யூதாஸ் செய்தது மிகப் பெரிய பாவம். அந்தப் பாவத்தின் கனாகனத்தை நமக்கு உணர்த்தவே இயேசு அப்படி சொன்னார்.

நாம் அப்படிப்பட்ட பாவத்தை செய்து விடக்கூடாது அல்லவா."

"யூதாஸ் மோட்சத்திற்குப்
 போயிருப்பான் என்று நீங்கள் நம்புகிறீர்களா?"

"நாம் எல்லோரும் பாவிகள். இயேசு பாவிகளைத் தேடித்தான் உலகத்துக்கு வந்தார்.

நம்மைத் தேடி வந்தது நமது பாவத்திலிருந்து நம்மை மீட்க.

பரிசேயர்களும், யூத மதகுருக்களும், மறை நூல் வல்லுனர்களும் சேர்ந்துதான் இயேசுவைக் கைது செய்து,

பிலாத்தின் மூலம் அவருக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள்.

யூதாஸ் அவர்களுக்கு உதவி செய்தான்.

யூதாஸ் உட்பட அவர்கள் அனைவரும் இயேசுவின் சிலுவை மரணத்திற்குக் காரணமாக இருந்தார்கள்.

அளவற்ற இரக்கத்தின் உருவாகிய இயேசு மரண வேதனையோடு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது தனது தந்தையை நோக்கி,

"தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று செபித்தார்.

அவர் உண்மையிலேயே செபித்தாரா? 

ஒப்புக்குச் செபித்தாரா?"

"அவர் நாம் நமது பகைவர்களையும் நேசிக்க வேண்டும்,

நமக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்

என்று போதித்த கடவுள்.

அவர் எப்படி ஒப்புக்குச் செபித்திருப்பார்?

தந்தையோடு அவர் ஒரே கடவுள் தானே!

அப்படியானால் தன்னை நோக்கித் தானே அந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்க வேண்டும்.

சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்றாய் இருப்பது தானே சத்தியம்."

"'அப்படியானால் மன்னிக்க வேண்டும் என்று தந்தையிடம் வேண்டிய இயேசுவே அவர்களை மன்னித்திருப்பார் அல்லவா!"

"ஆனால், தாத்தா, அவர் மன்னிப்பதற்குத் தயாராக இருந்திருப்பார்.

ஆனால் பாவம் செய்தவர்கள் பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டுமே!

கேட்டால் தானே மன்னிப்புக் கிடைக்கும்!"

"'உனது அம்மா வீட்டில் உனக்கு உணவு தயாரித்து வைத்திருக்கிறார்கள்.

நீ வீட்டுக்குப் போய்விட்டு வந்திருக்கிறாய்.

நீ சாப்பிட்டுவிட்டு தான் வந்திருப்பாய் என்று நான் நம்பினால் அது தவறா?"

"அதாவது, இயேசு அவர்களை மன்னிக்கத் தயாராக இருந்தார், அவர்கள் மன்னிப்பு கேட்டிருப்பார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

ஆனால் அதற்கு பைபிளில் ஆதாரம் இல்லையே!"

"'பாவிகள் மன்னிப்புக் கேட்க வேண்டியது கடவுளிடம்.

மனஸ்தாபப் படவும், மன்னிப்புக் கேட்கவும் வேண்டிய அருள் வரங்களை கொடுக்க வேண்டியது கடவுள்.

நான் இயேசுவை நம்புகிறேன்.

அவர்களை மன்னியும் என்று தந்தையிடம் வேண்டியவர் உறுதியாக அதற்கான அருள் வரங்களைக் கொடுத்திருப்பார்.

உன்னிடமும், என்னிடமும் சொல்லிவிட்டு தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை."

"ஆனால் யூதாஸ் நாண்டு கொண்டல்லவா செத்தான்.

அதுவே சாவான பாவம் ஆச்சே."

"'இன்னும் நீ புறத்தை மட்டுமே பார்க்கிறாய். அகம் நமக்குத் தெரியாது.

இருந்தாலும் உனக்காக பைபிளில் இது பற்றி சிந்திக்க ஏதாவது இருக்கிறதா என்று பார்ப்போம்.

யூதாஸ் கொலையாளிகளிடம் இயேசுவைக் காட்டிக் கொடுத்தது உண்மைதான்.

ஆனால் கொலை செய்யப்படுவதற்காகக் காட்டி கொடுக்கவில்லை.

அவன் இயேசுவோடு மூன்று ஆண்டுகள் இருந்தவன்.

பலமுறை அவரது விரோதிகள் அவரைப் பிடிக்க முயன்ற போது அவர் யாருக்கும் தெரியாமல் தப்பித்திருக்கிறார்.

இது யூதாசுக்கும் தெரியும்.

அவன் பண ஆசை பிடித்தவன் என்பதும் உண்மைதான்.

ஆகவே இயேசுவைக் காட்டிக் கொடுத்தால் பணம் கிடைத்து விடும், ஆனால் இயேசு எப்படியும் தப்பித்து விடுவார் என்று அவன் எண்ணியிருக்க வேண்டும்.

அவரைக் கொல்வதற்காகக் காட்டிக் கொடுத்திருந்தால். அவருக்கு மரணத் தீர்வை கிடைத்த போது அவன் சந்தோசம் அல்லவா பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அவன் அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு, மனம் வருந்தி, முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமைக்குருக்களிடமும் மூப்பரிடமும் கொண்டுவந்து,

"மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்றான்.

மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்ததற்காக மனம் வருந்தினான்.

பணத்தையும் தூர எறிந்து விட்டான்.

உணர்ச்சி வேகத்தில் நாண்டு கொண்டான்.

நான்டு கொண்டது பாவம். ஆனாலும் அந்த சமயத்தில் அவனது உள்ளத்தில் இருந்தது மாசற்ற இரத்தத்தைக் காட்டிக் கொடுத்ததற்கான வருத்தம்.

செய்த பாவத்திற்காக உத்தம மனஸ்தாபப்பட ஒரு வினாடியின் சிறு பகுதியே போதும்.
(A small fraction of a second is enough to feel sorry for one's sin)

இயேசு தந்தையை நோக்கி செய்த செபத்தையும், யூதாஸின் மனநிலையையும் ஒன்றாக வைத்துப் பார்த்தால் 

அவன் மரணத்தின் இறுதி வினாடியில் உத்தம மனஸ்தாபட்டிருப்பான் என்று நம்பினால் தவறா?

ஒருவரைப் பற்றி கெட்ட விதமாய் தீர்ப்புக் கூற நமக்கு உரிமை இல்லை.

ஆனால் நல்லதை மட்டும் பார்த்து நல்ல விதமாய்க் கருத்து கூறினால் தப்பு இல்லையே!

ஐயோ பாவம், யூதாஸ்.

இரக்கத்தின் ஊற்றாகிய இயேசு மாசற்ற இரத்தத்தைக் காட்டிக் கொடுத்ததற்காக வருந்திய அவன் மேல் அருள் வரங்களை அள்ளிப் போட்டிருப்பார்.

அவனும் மனம் திரும்பியிருப்பான்.

நமது பாவம் பெரியதாக இருக்கலாம், நமது மீட்பரின் இரக்கம் அதைவிடப் பெரியது.

இரண்டையும் தராசில் வைத்தால் இரக்கம் தான் வெல்லும்."

" யூதாசுக்கு சார்பாக வாதிட வேறு ஏதாவது இருக்கிறதா?"

"'அவன் யூதர்களை இயேசு ரோமையர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பார் என்று நம்பியிருந்தான்.

ஆனால் இயேசு தனது பொது வாழ்வின் போது அநேக நோயாளிகளைக் குணமாக்கியதோடு அவர்களது பாவங்களையும் மன்னித்தார்.

எப்போதும் ஆயிரக்கணக்கானோர் அவரது நற்செய்தியைக் கேட்பதற்காக அவர் கூடவே செல்வார்கள்.

ஆனால் இயேசு அரசியல் புரட்சி எதுவும் செய்யவில்லை.

இயேசுவின் தலைமையில் ஒரு அரசியல் புரட்சி ஏற்பட வேண்டும் என்று யூதாஸ் விரும்பினான்.

இயேசுவைக் காட்டிக் கொடுத்தால் அவரது விரோதிகள் அவர்களை கைது செய்வார்கள்.

அதே சமயத்தில் இயேசுவால் நன்மை பெற்ற ஆயிரக்கணக்கானோர் இயேசுவுக்காக அரசை எதிர்த்து புரட்சி செய்வார்கள் என்று அவன் நம்பினான்.

அவன் பண ஆசை பிடித்தவன் என்பது உண்மைதான்.

ஆனாலும் பண ஆசையை விட இயேசுவின் மேல் உள்ள மரியாதை அதிகமாக இருந்திருக்க வேண்டும்.

ஆகவேதான் அவருக்கு மரணத் தீர்வை இட்டவுடன் பணத்தை தூர வீசி எறிந்து விட்டான்.

பணத்துக்கு அடிமையாகிவிடவில்லை.

இயேசுவின் இரக்கம் நிச்சயமாக வென்றிருக்கும்.

ஒருவன் இயேசுவுக்கும் பணத்திற்கும் ஊழியம் செய்ய முடியாது.

இயேசுவா? பணமா? என்ற கேள்வி வந்தபோது பணத்தை விட்டு விட்டான்.

இயேசுவிடம் போக போதிய தைரியம் வரவில்லை.

ஆனாலும் தனக்காக

 தான் பெற்ற பணத்தை வீசி எறிந்த யூதாசுக்கு ஆன்மீக உதவியாக 

இயேசு அருள் வரங்களை அள்ளித் தந்திருக்க வேண்டும்.

அளவற்ற அன்பின் மிகுதியால் தானே அவர் யூதாசையும் படைத்திருப்பார்!

இயேசுவின் அன்பு வென்றது என்று உறுதியாக நம்புகிறேன்.

பாவிகளாகிய நாமும் அதைத்தானே நம்பியிருக்கிறோம்!

நாம் பாவம் செய்யும் போதெல்லாம் இயேசுவைக் காட்டிக் கொடுத்துக் கொண்டு தானேயிருக்கிறோம்.

நாம் அளக்கிறபடி தான் நமக்கும் அளக்கப்படும்.

நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டுமென்றால்

 மற்றவர்களைப் பற்றி கெட்ட விதமாய் தீர்ப்புச் சொல்லக்கூடாது."

"யூதாஸைப் பற்றி இப்படி கூறு நீங்கள் அவரால் குணமாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைப் பற்றி என்ன கூறுவீர்கள்?

 இயேசு பிலாத்துவால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது இயேசுவிற்கு சார்பாக குரல் கொடுக்க அவர்கள் அங்கு வரவில்லையே."

"'அவர்கள் அங்கு வரவில்லை என்பது உண்மைதான்.

இயேசு கைது செய்யப்பட்டது ஈஸ்டருக்கு முந்திய வியாழக்கிழமை இரவு.

தீர்ப்பிடப்பட்டு சிலுவையில் அறையப்பட்டது வெள்ளிக்கிழமை.

இயேசு மரித்தது வெள்ளிக்கிழமை மாலை.

ஒரே நாளில் எல்லாம் முடிந்து விட்டது.

"தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! உன்னதங்களில் ஓசான்னா! " என்று ஆர்ப்பரித்து 

ஜெருசலேமுக்குள் அழைத்து வந்த மக்கள் நகரில் தான் இருந்திருப்பார்கள்.

அவர்கள் ஏன் இயேசுவுக்கு சார்பாக பேச பிலாத்துவின் அரண்மனைக்கு வரவில்லை என்பது நமக்கு தெரியாது.

தெரியாத விஷயத்தைப் பற்றி நாம் ஆராய்ச்சி செய்தால் உண்மையை அறிய முடியாது.

அவர்களைப் பற்றி தீர்ப்புக் கூறுவதற்குப் பதிலாக 

 நாம் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்வோம்.

எல்லா சூழ்நிலைகளிலும் நாம் இயேசுவுக்குப் பிரமாணிக்கமாயிருப்போம்.

யாராவது இயேசுவுக்கு எதிராகப் பேசினால் அவர்களோடு வாக்குவாதம் செய்வதற்குப் பதிலாக உண்மையான இயேசுவை அவர்களுக்குக் கொடுப்போம்.

இயேசுவுக்கு எதிராக தீமை செய்கிறவர்களுக்கு நன்மை செய்வோம்.

நமது நடவடிக்கைகளிலிருந்து நாம் இயேசுவின் உண்மையான சீடர்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

இயேசுவின் சாயலாக வாழ்ந்து நம்மில் இயேசுவைக் காணச் செய்வோம்.

யாரையும் தீர்ப்பிட வேண்டாம்.

தீர்ப்பு நாள் நமக்குச் சாதகமாக இருக்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment