Friday, December 29, 2023

திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.(லூக்.2:43).

திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.(லூக்.2:43)

ஒவ்வொரு ஆண்டும் திருக்குடும்பம் பாஸ்காத் திருவிழாவுக்காக யெருசலேமுக்குப் போவது வழக்கம்.

இயேசுவுக்கு 12 வயது நடந்த போது வழக்கம் போல திருவிழாவுக்குச் சென்றார்கள்.

திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார்.

 இது அவருடைய பெற்றோருக்குத்  தெரியாது.

எதற்காக யெருசலேமில் தங்கிவிட்டார்?

இந்தக் கேள்விக்கான பதிலைத் தன்னைத் தேடி வந்த தனது பெற்றோர்களிடமே இயேசு சொல்கிறார்,

"என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா?"

இந்தப் பதிலைக் கேட்கும் சில நண்பர்களுக்கு மனதில் ஒரு சந்தேகம் தோன்றலாம்.

இயேசு பிறந்தது பெத்தகெமில்.

அவர் வளர்ந்தது நசரேத் ஊரில் உள்ள அவர்களுடைய வீட்டில்.

போதித்தது யூதேயா, கலிலேயா. சமாரியா ஆகிய நாடுகளில்.

திருவிழா சமயங்களிலும், கோவிலில் போதிக்க வேண்டும் என்று அவர் நினைத்த சமயங்களிலுமே அவர் கோவிலுக்குச் செல்வது வழக்கம்.

12 வயதில் அவர் காணாமல் போன மூன்று நாட்களும்

  கோயிலில் தங்கி, அங்கே போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களை வினவுவதுமாய் இருந்தார்.

30 ஆண்டுகள் தன்னுடைய பெற்றோருடனே இருந்த இயேசு ஏன் "என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா?"

என்று கேட்கிறார்.

அவர் மனிதனாகப் பிறந்ததன் நோக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு 

அவரது வார்த்தைகளைத் தியானித்தால் அவற்றில் ஆழமான ஒரு உண்மை இருப்பது நமக்கு புரியும்.

"தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்."

12 வயதில் அவர் அவருடைய தந்தையின் இல்லத்தில்,

அதாவது கோவிலில் தங்கியிருந்தது மூன்று நாட்கள் மட்டுமே.

  "என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்க வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா?"

இவ் வார்த்தைகளில் அவர் உலகிற்கு வந்ததும் நோக்கம் பிரதிபலிப்பது தெரியும்.

"என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்க வேண்டுமென்பது" என்றால்,   

"என் தந்தை உலகிற்கு என்னை எதற்காக அனுப்பினாரோ அதைச் செய்ய வேண்டும் என்பது"

என்ற பொருள் மனதில் தோன்றுகிறது.

நாம் நாள் முழுவதும் பல மைல்களுக்கு அப்பால் உள்ள அலுவலகத்தில் பணிபுரிந்தாலும் அது நமது இல்லத்தில் வாழ்வோருக்காகத் தானே!

இயேசு உலகில் மனிதனாகப் பிறந்து, வளர்ந்து, நற்செய்தி அறிவித்து, பாடுகள் பட்டு மரித்தாலும் 

அது தனது விண்ணகத் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகத் தானே!

கோவிலில் அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களை வினவுவதுமாய் இருந்தார்.

அவர் எதைப் பற்றி பேசினார் என்று குறிப்பிடப்படவில்லை.

ஆனால் அவர் உலகிற்கு வந்ததன் நோக்கத்தை மனதில் கொண்டு அதைத் தியானித்தால் 

மெசியாவைப் பற்றிய பழைய ஏற்பாட்டின் இறை வார்த்தைகளை பற்றியதாய் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது.

மழை சீசன் ஆரம்பித்த உடனே பஸ்ஸில் ஏறி, குற்றாலத்தில் இறங்கி, ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, கடையில் ஒரு துண்டு வாங்கிக் கொண்டு அருவிக்குச் சென்று குளிக்கிறோம்.

குற்றாலத்திற்குப் போவது பஸ்ஸில் ஏறுவதற்காகவோ, ஹோட்டலில் சாப்பிடுவதற்காகவோ, துண்டு வாங்குவதற்காகவோ அல்ல,

 குளிப்பதற்காக.

அதுபோல இயேசு மனிதனாக பிறந்ததின் நோக்கம்

 நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக பாடுகள் பட்டு மரித்து, உயிர்ப்பதற்காக,

நாசரேத் ஊரில் 30 ஆண்டுகள் வாழ்வதற்காக அல்ல.

அவரது நோக்கத்தை மையமாக வைத்து அவரது வார்த்தைகளைத் தியானிக்க வேண்டும்.

நாம் முடிவில்லா வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக தனது ஒரே பேரான மகனை தந்தை உலகிற்கு அனுப்பினார்.

இயேசு பாடுகப்பட்டு மரித்தது அந்த நோக்கத்துக்காக தான்.

தான் உலகுக்கு வந்ததின் நோக்கத்தைத் தான் இயேசு தனது பெற்றோரிடம் சொல்கிறார்.

ஆனால் அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. (லூக்.2:50)

அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன்னுள்ளத்தில் கொண்டிருந்தாள்.(51)

 நமது கைக்கு பைபிள் வந்ததிலிருந்து இந்நிகழ்ச்சியை எத்தனை முறை வாசித்திருப்போம்!

நமக்கு விளங்கியதோ விளங்கவில்லையோ 

இந்நிகழ்ச்சிகளையெல்லாம் நம் உள்ளத்தில் கொண்டிருக்கிறோமா?

அல்லது வேகமாக வாசித்து வேகமாக மறந்து விடுகிறோமா?

வயலில் விளைந்ததை எல்லாம் ஒரே நாளில் சாப்பிட்டு விட முடியாது.

ஆகவே அதை வருடம் முழுவதும் வீட்டில் வைத்திருக்கிறோம்.

கொஞ்சம் கொஞ்சமாக தினமும் சாப்பிடுகிறோம்.

அதுபோல இறை வார்த்தைகளை எப்போதும் நமது மனதில் வைத்திருக்க வேண்டும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவைகளைப் பற்றி தியானிக்க வேண்டும்.
(தியானம் தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment