Monday, December 18, 2023

சூசை விழித்தெழுந்து, ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்..(மத்.1:24)


 சூசை விழித்தெழுந்து, ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்..
(மத்.1:24)

அன்னை மரியாள் மூன்று வயதிலிருந்து கோவிலில் தான் வளர்ந்தாள்.

சிறு வயதிலேயே தனது கன்னிமையைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து விட்டாள்.

இது அவளை வளர்த்த கோவில் குரு சக்கரியாசுக்கும் தெரியும்.

ஆகவே அவளுக்குத் திருமண வயது வந்தவுடன் அவளது கன்னிமைக்குப் பாதுகாப்பாக இருக்க கூடிய கணவனைத் தேர்ந்தெடுக்க முடிவு முடிவு செய்தார்.

மனைவி இறந்தபின் விதவர்களாக (Widowers) வாழ்ந்து கொண்டிருப்பவர்களைக் கோவிலுக்கு வரும்படி அழைத்தார்.

வந்தவர்களில் சூசையப்பரும் ஒருவர்.

ஒவ்வொருவர் கையிலும் ஒரு கம்பு (rod) கொடுக்கப்பட்டது.

சூசையப்பர் வைத்திருந்த கம்புக்குள்ளிருந்து ஒரு புறா வெளிப்பட்டு அவரின் தலை மேல் அமர்ந்தது.

அவரே மரியாளின் கணவராகத்
 தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனது கன்னிமைக்கு பாதுகாப்பாக இருப்பதாக அவர் வாக்குக் கொடுத்த பின்பு தான் மரியாள் அவரைத் தனது கணவராக ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தாள்.

திருமண ஒப்பந்தம் நடந்தது.

அவர் அவளைத் தனது இல்லத்தில் விட்டு விட்டு தச்சு வேலை செய்வதற்காக வெளியூருக்குச் சென்று விட்டார்.

அந்த சமயத்தில்தான் கபிரியேல் தூதர் மரியாளுக்குத் தோன்றி இறைமகன் அவளது வயிற்றில் மனு மகனாக கருத்தரிக்கப் போகும் செய்தியை அறிவித்தார்.

அது இறைவனின் சித்தம் என்பதால்,

"இதோ நான் ஆண்டவரின் அடிமை" 

எனக் கூறி இறைவனின் சித்தத்தை ஏற்றுக் கொண்டாள்.

அந்த வினாடியே இறைமகன் அவளது வயிற்றில் மனு மகனாக உருவெடுத்தார்.

இந்த நிகழ்வு சூசையப்பருக்குத் தெரியாது.

அவர் தனது வேலை முடிந்தவுடன் வீட்டுக்குத் திரும்பினார்.

மரியாள் கருவுற்றிருப்பதை அறிந்தார்.

அவர் நீதிமான்.

 அவளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவராய், அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார்.

இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், 

 ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 

"சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். 

ஏனெனில், அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். 

அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.

 அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். 

ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.

மரியாளுக்கு நேரடியாகத் தோன்றிய தூதர் சூசையப்பருக்குக் கனவில் தோன்றினார்.

ஆனாலும் அவர் கொடுத்த செய்தியை சூசையப்பர் ஏற்றுக்கொண்டார்.

சூசையப்பரின் மனநிலையை அடிப்படையாகக் கொண்டு

அவர் மரியாளை மனைவியாக ஏற்றுக் கொண்டது பற்றி ஒரு சில நொடிகள் தியானிக்கலாம்.

அவர் ஒரு நீதிமான்.

கணவனுக்குத் தெரியாமல் கருத்தரித்த பெண்ணை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது யூதர்களின் சட்டம்.

சட்டப்படி நடப்பது தான் நீதி என்றால் அதைச் சூசையப்பர் செய்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் தெய்வ பயம் உள்ள நீதிமான்.

நீதிப்படி பார்த்தால் கடவுளே தனக்கு எதிராகப் பாவம் செய்த நமது முதல் பெற்றோரைத் தண்டித்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் நீதியோடு அளவற்ற அன்பும் நிறைந்தவர்.

நமது முதல் பெற்றோர் விசயத்தில் கடவுள் எடுத்த முடிவு அளவற்ற அன்பும், நீதியும் கலந்தது.

நீதிப்படி மனிதன் 
தான் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

அன்பின் அடிப்படையில் அந்த பரிகாரத்தைத் தானே செய்வது என்று கடவுள் தீர்மானித்தார்.

சூசையப்பர் ஒரு நீதிமான்.

நீதிப்படி மட்டும் பார்த்தால் அவர் மரியாளை விலக்கி வைத்து, அவளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் இறையன்புமிக்க நீதிமான்.

மரியாளுக்கு எந்தவித அவமானமும் ஏற்பட அவரது மனது சம்மதிக்கவில்லை.

ஆகவே அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார்.

இப்போது நமது மனதில் ஒரு கேள்வி எழும்.

எல்லோருக்கும் தெரியும் படி விலக்கினாலும்,

மறைவாக விலகினாலும் முடிவு ஒன்றுதான்.

விலக்கினால் மரியாள் தனியாக வாழ வேண்டியிருக்கும்.

அதுவே மற்றவர்கள் முன்னால் அவளுக்கு அவமானத்தை ஏற்படுத்தும்.

அதை சூசையப்பர் விரும்பியிருக்க மாட்டார்.

"மறைவாக விலக்குவது" என்பது பற்றி விளக்கம் எதுவும் நற்செய்தி நூலில் தரப்படவில்லை.

நமது விளக்கம் நீதிமானாகிய சூசையப்பருக்கும், கற்புக்கு அரசியாகிய மரியாளுக்கும் விரோதமாக இருந்து விடக்கூடாது.

சூசையப்பர் மரியாளை மனைவி என்ற அந்தஸ்த்திலிருந்து மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைவாக விலக்கி வைத்து விட்டு,

அவளோடு சகோதரன் உறவில் வாழ்ந்து,

அவள் பெறவிருக்கும் மகனைத் தன் மகனாக ஏற்று அவளோடு வாழத் தீர்மானித்திருக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு முன்னால்தான் மரியாளின் கணவன்.

மரியாளோடு தனிப்பட்ட உறவில் சகோதரன்.

இதனால் கணவனுக்குத் தெரியாமல் கருத்தரித்த மரியாளுக்கு உலகினர் முன்னிலையில் எந்த அவமானமும் ஏற்படாது.

கடவுள் தனது சித்தத்தை தன்னுடைய தூதர் மூலம் சூசையப்பருக்கு தெரிவித்துவிட்டார்.

சூசையப்பர் மரியாளை மனைவியாக ஏற்றுக் கொண்டு, மனு மகனின் வளர்ப்புத் தந்தையாக வாழ வேண்டும் என்பதுதான் இறைவனின் சித்தம்.

இதனால் மரியாளின் கன்னிமைக்கு எந்தவித பங்கமும் வராது.

இயேசுவின் தாய் அவரைக் கருத்தரிக்கு முன்னும் கன்னி,

கருத்தரித்தபோதும் கன்னி,

அவர் பிறந்த பின்னும் கன்னி.

இயேசு பிறக்கும் போதும் அவளது கன்னித் தன்மைக்கு எந்த பழுதும் ஏற்படவில்லை.

மரியாளுக்கு பிரசவ வலி எதுவும் ஏற்படாமல்,

ஒரு கண்ணாடியின் வழியே ஒளி செல்வது போல,

இயேசு அவளது வயிற்றிலிருந்து பிறந்தார்.

சூசையப்பருக்கு ஏற்பட்ட வாழ்க்கை சூழ்நிலை வேறு யாருக்கும் ஏற்படாது.

ஆனாலும் நமது வாழ்வில் ஏற்படும் எந்தப் பிரச்சனையையும் சூசையப்பரின் மனநிலையோடு சந்திக்க வேண்டும்.

நாம் எடுக்கும் எந்த முடிவும் நீதிக்கும், அன்புக்கும் விரோதமாக இருந்து விடக் கூடாது.

நம்மை நம்பி வாழ்பவர்களுக்கு நம்மால் எந்தவித அவமானமும் ஏற்பட்டு விடக்கூடாது.

மரியாள் கருத்தரித்த விதம் எப்படி என்று சூசையப்பருக்குத் தெரியாதிருந்தபோதும்

அவளுக்கு எந்தவித அவமானமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

குற்றமே செய்யாத மனைவியை சந்தேகக் கண் கொண்டு பார்த்து,

அந்த சந்தேகத்தாலேயே குடும்ப வாழ்க்கையை நரக வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கும்

நண்பர்களுக்கு சூசையப்பர் ஒரு பாடம்.

நமது வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நீதியும், அன்பும் கலந்த தீர்வினைக் காண்போம்.

லூர்து செல்வம்..

No comments:

Post a Comment