Tuesday, December 19, 2023

"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" (லூக்.1::38)

"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" 
(லூக்.1::38)

தாயைப் போல் பிள்ளை, நூலை போல் சேலை என்பார்கள்.

இயேசு தனது அன்னை மரியாளை நமது தாயாகத் தந்திருக்கிறார்.

நாமும் அவளை நமது தாயாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

நாம் மரியாளின் பிள்ளைகள் என்றால் நாம் அவளைப் போல ஆண்டவரின் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

சிறிது நேரம் சிந்தித்துப் பார்ப்போம்.

வேலைக்காரர்களுக்கும் (Servants) அடிமைகளுக்கும் (Slaves) வித்தியாசம் உண்டு.

வேலைக்காரர்கள் எஜமானர்களின் உடைமைப் பொருள் அல்ல.

அவர்களுக்கு இஷ்டம் இருந்தால் வேலையைப் பார்த்துவிட்டு அதற்குரிய சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம். 

இஷ்டம் இல்லாவிட்டால் வேலையை விட்டு நின்று கொள்ளலாம்.

ஆனால் அடிமை எஜமானனின் உடைமை.

எஜமான் அவர்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

சம்பளம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர்களுக்கு உணவும் வாழ வசதியும் செய்து கொடுத்தால் போதும்.

நாம் ஒரு bike வைத்திருந்தால் அதற்கு சம்பளமா கொடுக்குறோம்?

அதற்கு உணவாக பெட்ரோலை மட்டும் தானே கொடுக்கிறோம்.

அது நிற்க வீட்டில் இடமும் கொடுக்கிறோம்.

நமது அன்னை மரியாள் தன்னை இறைவனுடைய அடிமையாக அர்ப்பணித்து விட்டாள்.

தன்னுடைய நலனுக்காக அல்ல இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து விட்டாள்.

அவள் முழுக்க முழுக்க இறைவனுடைய உடைமை.


நாம் நமது உடைமையாகிய பைக்கை பெட்ரோலால் நிரப்பி அதற்கு உயிர் கொடுப்பது போல,

இறைவன் மரியாளைத் தனது அருளால் நிரப்பி ஆன்மீக உயிர்த்துடிப்போடு அவளை வாழச் செய்தார்.

நாசரேத் ஊரில் சூசையப்பருடைய
சொந்த வீட்டிலேயே இயேசு குழந்தையாகப் பிறந்திருக்கலாம், அவர் நினைத்திருந்தால்.

ஆனால் சூசையப்பறையும் நிறைமாத கர்ப்பிணியான மரியாளையும் பெத்லகேம் ஊருக்கு பயணம் செய்ய ஏற்பாடு செய்தவர் இறைவன் தானே.

அங்கே அவர்களுக்கு தங்குவதற்கு வசதியான இடம் கூட ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை.

மாடுகள் அடையும் சாணி நாற்றம் வீசும் மாட்டுத் தொழுவத்தையே இறைவன் அவர்களுக்கு ஏற்பாடு செய்தார்.

ஆண்டவரது அடிமைகளாகிய அவர்கள் எதிர்க் கேள்வி கேட்காமல் அவர் சொன்னதை எல்லாம் தங்களது கஷ்டத்தை பார்க்காமல் அப்படியே செய்தார்கள்.

மாட்டுத் தொழுவத்தில் தான் உலகைப் படைத்த இறை மகன் மனு மகனாகப் பிறந்தார்.

யூதர்களின் அரசராகப் பிறந்த அவரை முதலில் வந்து வாழ்த்தியவர்கள் ஆடு மேய்க்கும் இடையர்கள்.

அவரது பிறப்பைப் பற்றிய செய்தி அவர்களுக்குத் தான் முதலில் அறிவிக்கப்பட்டது.

உலகையே காத்து வரும் இறைவன் ஏரோதிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள அவர்களை தன்னை எடுத்துக் கொண்டு எகிப்துக்கு போகச் சொன்னார்.

அடிமைகள் எதிர்க் கேள்வி கேட்காமல் சொன்னபடி செய்தார்கள்.

எகிப்தில் மூன்று ஆண்டுகள் நாடோடி வாழ்க்கையே வாழ்ந்தார்கள்.

தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை எல்லாம் முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்கள்.

முழு நேரமும் இறை மகன் அவர்களோடு தான் இருந்தார்.

அவர்களை கஷ்டங்களிலிருந்து காப்பாற்றவில்லை.

மூன்று ஆண்டுகள் கழித்து தான் அவர்களைச் சொந்த நாட்டுக்கு இறைமகன் வரச் சொன்னார்.

அங்கே பிழைப்புக்கு தச்சு வேலைதான் செய்தார்கள்.

இறை மகனே அந்த வேலையைத் தான் செய்தார்.

எல்லா வகையிலும் தனது அன்னைக்கும் வளர்ப்புத் தந்தைக்கும் கீழ்படிந்து நடந்தார்.

பொது வாழ்வின் போது இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்த இறை மகன்,

தான் நாசரேத்தில் வாழும்போது சூசையப்பரை மரணத்திலிருந்து காப்பாற்றவில்லை.

இயேசுவின் மடியிலேயே தலை வைத்து அவர் இறந்தார்.

அடிமைகளுக்கு சொந்த ஆசைகள் இருக்கக் கூடாது.

எஜமானனின் ஆசை தான் அவர்களின் ஆசை.

ஆகவே தான் சூசையப்பரும் அன்னை மரியாளும் இறை மகனின் ஆசைப்படி மட்டும் வாழ்ந்தார்கள், அடிமைகளாக.

உலகத்தில் ஆண்டவரின் அடிமையாக வாழ்ந்ததால் தான் மரியாள் விண்ணகத்தில் பரலோக பூலோக அரசியாக முடி சூட்டப்பட்டாள்.

ஆண்டவர் அவரது அடிமைகளுக்கு கொடுத்த உணவு அவரது அருள்.

கொடுத்த வீடு அவருடைய மோட்ச வீடு.

நாம் அன்னை மரியாளின் பிள்ளைகள், அடிமை பெற்ற பிள்ளைகள்.

நாமும் ஆண்டவருடைய அடிமைகள் தான்.

அன்னை மரியாள் தனது அடிமை வாழ்வை வாழ்ந்தது போல அவரது பிள்ளைகளாகிய நாம் வாழ்கிறோமா?

அல்லது நமது இஷ்டப்படி வசதிகளோடு வாழ்கிறோமா?

அடிமைகளுக்கு சொந்தமாக ஆசைகள் எதுவும் இருக்கக் கூடாது என்று நமக்கு தெரியும்.

ஆனால் நமது ஜெபத்தில் மட்டும்,

''உமது சித்தம் விண்ணுலகில் நிறைவேறுவது போல பூவுலகிலும் நிறைவேறுவதாக"

என்று கூறிவிட்டு,

நமது ஆசைகள் நிறைவேறுவதற்காகத் தானே வீட்டிலும், கோயிலிலும் ஜெபிப்பதோடு,

 புனிதர்களின் திருத்தலங்களுக்கு சென்றும் ஜெபிக்கிறோம்!

"நான் தேர்வில் வெற்றி பெற வேண்டும்,

நல்ல சம்பளத்தோடு உயர்ந்த உத்தியோகம் கிடைக்க வேண்டும்,

நல்ல இடத்தில் திருமணம் நடக்க வேண்டும்,

முதலில் ஆண் குழந்தை பிறக்க வேண்டும்,

சொத்து சுகங்கள் நிறைய கிடைக்க வேண்டும்,

கடன் பிரச்சனைகள் தீர வேண்டும்,"

என்பவை போன்ற ஆயிரக்கணக்கான கருத்துக்களுக்காக தானே புனிதர்களின் திருத்தலங்களுக்குத் திருயாத்திரைகள் போகிறோம்!

நாம் நமது சிலுவையைச் சுமந்து கொண்டு தானே இயேசுவைப் பின்பற்ற வேண்டும்.

ஆனால் சிலுவைகள் வரும்போது அவற்றை இறக்கி வைக்க தானே ஆண்டவரின் உதவியைத் தேடுகிறோம்!

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று சொன்ன இயேசுவிடம்

எத்தனை பேர் "உமக்காகச் சுமக்க எனக்கு சிலுவையைத் தாரும் ஆண்டவரே" என்று கேட்கிறோம்?

அடிமைத் தாயின் பிள்ளைகளாகிய நாம் எஜமானர்களைப் போல வாழ ஆசைப்படுகிறோம்.

மாடடைத் தொழுவில் இயேசு பாலனை மடியில் சுமந்த மரியாள்,

சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட இயேசுவின் உடலை மடியில் சுமந்த நேரம் வரை 

தன் மகனின் அடிமையாக, அவரைப் போலவே சிலுவையைச் சுமந்து தான் வாழ்ந்தாள்.

நாமும் ஆண்டவரின் அடிமைகளாக,

நமக்காக வாழாமல்,

அவருக்காக மட்டுமே வாழ்ந்தால் தான் நாம் உண்மையில் மரியாளின் மைந்தர்கள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment