Wednesday, December 13, 2023

."இதோ! உம் சீடர் ஓய்வுநாளில் செய்யத் தகாததைச் செய்கிறார்களே" (மத்.12:2)

"இதோ! உம் சீடர் ஓய்வுநாளில் செய்யத் தகாததைச் செய்கிறார்களே" (மத்.12:2)

பரிசேயர்கள் சட்டத்தின் எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

அவர்கள் சட்டப்படி வாழ்வார்கள், ஆனால் சட்டப்படி வாழ மாட்டார்கள்.

வாழ்பவர்கள் எப்படி வாழ மாட்டார்கள்?

எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்கும் மாணவர்கள் படிக்காதது போல.

புத்தகம் படிப்பதற்கு.

புத்தகத்தை கையில் எடுத்தால் தான் படிக்க முடியும்.

ஆனால் எப்போதும் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு படிக்காமல், படிப்பது போல் பாசாங்கு காட்டுபவர்களை என்ன செய்ய முடியும்?

அப்படித்தான் பரிசேயர்களும்.

சட்டத்தின் எழுத்தை அனுசரிப்பார்கள், நோக்கத்தை அனுசரிக்க மாட்டார்கள்.

ஓய்வு நாளில் வேலை செய்ய மாட்டார்கள், ஆனால் எதற்காக வேலை செய்யக்கூடாதோ அதைச் செய்ய மாட்டார்கள்.

ஒரு நாள் இயேசு விளைச்சல் வயல் வழியே போக நேர்ந்தது.

உணவைப் பொருத்தமட்டில் அவர் கிடைக்கும் போது உண்பார்,

எதுவும் கிடைக்காவிட்டால் பட்டினி தான்.

சீடர்களின் நிலையும் அதுதான்.

இயேசு வயல் வழியே போகும்போது சீடர்கள் உணவு கிடைக்காததால் பசியாக இருந்தார்கள். 

அவர்கள் கதிர்களைக் கொய்து தின்னத்தொடங்கினர்.

பரிசேயர்களைப் பொறுத்தமட்டில்
கொய்வது அறுவடைக்குச் சமம்.

கசக்குவது மில்லில் தானியத்தை பிரிப்பதற்குச் சமம்.

ஓய்வு நாளில் அறுவடை செய்யக்கூடாது என்பது சட்டம்.

ஆகவே அவர்களுடைய கருத்துப்படி சீடர்கள் சட்டத்தை மீறி விட்டார்கள்.

ஆனால் இயேசுவைப் பொருத்தமட்டில் பசித்தவர்கள் உண்பது பாவம் அல்ல.

பசியாய் இருந்த தாவீதும், அவருடன் இருந்தவர்களும் ஆலயத்தில்  காணிக்கை அப்பங்களை உண்டதைச் சுட்டிக் காண்பிக்கிறார். 

ஓய்வு நாளாக இருந்தாலும் பசியாக இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பது நமது கடமை.

கொடுப்பதற்காக உணவைத் தயாரிப்பதைக் குற்றம் என்று சொல்லலாமா?

ஓய்வு நாளில் ஓய்வாய் இருப்பது பிறர் சிநேக சேவைகளைச் செய்வதற்காகத்தான்.

உதவிகள் தேவைப்படுவோருக்கு உதவிகள் செய்வதற்காகத்தான்.

பசியாய் இருந்த சீடர்களுக்கு அவர்கள் உணவு கொடுத்திருக்க வேண்டும்.

அவர்களும் கொடுக்காமல், கதிர்களை கொய்து சாப்பிடுவதையும் குறை சொன்னால் அவர்களிடம் பிறர் அன்பே இல்லை என்று அர்த்தம்.

பிறரன்பு இல்லாதவர்களுக்கு சட்டத்தைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

ஓய்வு நாளில் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம்.

ஞாயிறு வழிபாட்டிற்காக ஆலயத்துக்குச் செல்கிறோம்.

வழிபாடு முடிந்து நமக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தைப் பிறர் அன்பு செயல்கள் செய்யப் பயன்படுத்துகிறோமா?

அல்லது வயிறார சாப்பிட்டுவிட்டு தூங்குகிறோமா?

தூங்குவது ஓய்வு தான். ஆனால் அதற்காக ஓய்வு நாள் கொடுக்கப்படவில்லை.

அது ஆண்டவரின் நாள்.    ஆண்டவருக்குப் பிடித்தமான செயல்களைச் செய்ய வேண்டிய நாள்.

ஓய்வு நாளில் வேலை செய்யக்கூடாது என்றால் யாருக்கும் உதவி செய்யச் செல்லக்கூடாது என்று அர்த்தம் அல்ல.

உதவி செய்யச் செல்ல வேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆசை.

ஓய்வு நாளில்பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்போம். 

தாகமாய் இருப்பவர்களுக்கு குடிக்கக் கொடுப்போம்.  


அன்னியர்களை   வரவேற்வோம்.  .


 ஆடையின்றி இருப்பவர்களுக்கு, உடை கொடுப்போம்.

 நோயுற்றவர்களை   பார்க்கச் செல்வோம். 

சிறையில் இருப்பவர்களைக் காணச் செல்வோம்.

இன்னும் இது போன்ற நற்செயல்களைச் செய்வோம்.

ஓய்வு நாளை ஆண்டவரது விருப்பங்களை நிறைவேற்றப் பயன்படுத்துவோம்.

பள்ளிக்கூடம் செல்வோர் கல்வி கற்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

பயிர்த்தொழில் செய்வோர் உணவுக்கான பொருள்களை உற்பத்தி செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

கடை வைத்திருப்போர் தரம் உள்ள பொருட்களை விற்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

அதேபோல கடவுளுக்காக வாழ்வோர் பிறரன்பு செயல்கள் புரிவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

பிறரன்புச் செயல்கள்தான் இறையன்புச் செயல்கள்.


தங்களுக்காக மட்டும் வாழ்வோர், 
தங்கள் ஆன்மீக நலனுக்காக வாழவில்லை.

அயலானுக்காக வாழ்வோர் ஆண்டவருக்காகவும் வாழ்கிறார்கள்,

தங்கள் ஆன்மீக நலனுக்காகவும் 
வாழ்கிறார்கள்.

நாம் பிறர் நலனுக்காக வாழும்போது கடவுள் நமது நலனைக் கவனித்துக் கொள்வார்.

ஓய்வுநாளில் செய்ய வேண்டியதைச் செய்வோம்.

ஆண்டவரின் நாளில் அவரின் விருப்பப்படி செயல்பட்டால் அவரோடு நித்திய காலம் பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment