Wednesday, December 13, 2023

என் தந்தை எல்லாவற்றையும் எனக்குக் கையளித்துள்ளார்."( மத்.11:27)

"என் தந்தை எல்லாவற்றையும் எனக்குக் கையளித்துள்ளார்."
( மத்.11:27)

"தாத்தா, ஒரு சின்ன சந்தேகம்."

"கேளு."

"நான் என் நண்பனுக்குச் செலவுக்குப் பணம் கொடுத்தால் , அதற்கு என்ன அர்த்தம்?"

"பணம் கொடுக்கிறாய் என்றுதான் அர்த்தம்."

"இல்லை, தாத்தா. அவனிடம் சொந்தமாகப் பணம் இல்லை என்று அர்த்தம்."

"'அதற்கு என்ன, இப்போ?"

"இயேசு, "என் தந்தை எல்லாவற்றையும் எனக்குக் கையளித்துள்ளார்." என்று சொல்கிறார்.

தந்தை எல்லாவற்றையும் கையளிக்கு முன் அவை மகனிடம் இல்லை என்று தானே அர்த்தம்."

"'பேரப்பிள்ள, நீ பேசுவது எந்த மொழி?"

"தமிழ் மொழி"

"'சங்க காலத்தில் Aeroplane க்கு என்ன தமிழ் வார்த்தை?"

"சங்க காலத்தில் Aeroplane ஏ இல்லை. அதற்கு எப்படி வார்த்தை இருந்திருக்க முடியும்?"

'"சங்க காலத் தமிழே அக்காலத்து தமிழர்களுக்கு புரிந்தது போல் நமக்குப் புரியாது. சங்க கால பாட்டுக்கு பதவுரை கூற ஆள் இல்லாவிட்டால் அதில் ஒரு வரி கூட நமக்குப் புரியாது.

மனித மொழியால் எல்லா மொழிகளுக்கும் அப்பாற்பட்ட கடவுளைப் பற்றிப் புரியும்படி கூறுவது கடினம்.

கடவுள் கணிதத்துக்கு உட்பட்டவரா? அப்பாற்பட்டவரா?"

"கடவுள் கணிதத்திற்கு மட்டுமல்ல, 

எல்லா மனித கண்டு பிடிப்புகளுக்கும் அப்பாற்பட்டவர்."

"'எண்கள் கணிதக் கருத்துதானே. ஒன்று, இரண்டு, மூன்று ஆகியவை கணிதக் கருத்துகள்தானே. அவற்றுக்கு அப்பாற்பட்டவர் தானே கடவுள்?"

"ஆமா. ஆனால் நாம் ஒரு கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்று சொல்கிறோம்.

கணிதத்திற்கு அப்பாற்பட்ட கடவுளைப் பற்றி விளக்க ஏன் கணிதத்தைப் பயன்படுத்துகிறோம்?"

"'மனித மொழிக்கு அப்பாற்பட்ட கடவுளது செய்திகளை கூற நாம் மனித மொழியை வேறு வழியில்லாமல் பயன்படுத்துகிறோம்.

மனித மொழி மனிதர்களின் அனுபவங்களுக்கு உட்பட்டது.

இறை அனுபவத்தை மனித மொழியால் விளக்கும் போது அதைப் புரிந்து கொள்ள மனித மொழிக்குரிய அகராதி பயன்படாது.

நற்செய்தி வசனங்களுக்கு மனித அகராதிப்படி பொருள் கொடுத்தால் அது உண்மைக்குப் புறம்பாகக்கூடும்.

ஆகையினால் தான் பைபிளை கையில் எடுத்துக் கொண்டு, அதன் வசனங்களுக்கு தங்கள் இஷ்டம் போல் பொருள் கொடுப்பவர்கள் தவறிப் போகிறார்கள்.

பைபிள் வசனங்களை அகராதிப்படி அல்ல,

இயேசு நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபையின் வழிகாட்டுதலின்படி தான் புரிந்து கொள்ள வேண்டும்.

தெரிந்து கொள்வது வேறு, புரிந்து கொள்வது வேறு.

இறைமகன் ஒரு கன்னியின் வயிற்றில் மனிதவுரு எடுத்து மனிதனாகப் பிறந்தார் 

என்ற இறையியல் உண்மையை நாம் தெரிந்து கொண்டாலும்

அதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானம் உதவாது,

விசுவாசம் மட்டுமே உதவும்."

"நீங்கள் கூறுவது எனக்குப் புரிகிறது.

இயேசு மனித மொழியில் தான் பேசினார்.

அதை ஏன் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை?"

"'அப்படியானால் உன்னிடம் விசுவாசம் இல்லை என்று அர்த்தம்.

இயேசு நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபையின் விசுவாசப்படி

ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார்.

தந்தை, மகன், தூய ஆவி மூவரும் ஒரே கடவுள்.

மூவருக்கும் 
ஒரே தேவ சுபாவம், 
ஒரே அன்பு,
ஒரே ஞானம்,
ஒரே வல்லமை.

தந்தைக்குரிய அதே தேவ சுபாவம் தான் மகனுக்கும், தூய ஆவிக்கும்.

மனிதவியலில் தாயும் பெண், மகளும் பெண், ஆனால் ஒரே பெண் அல்ல, இரண்டு பெண்கள்.

தாயிடம் இருப்பது போன்ற குணங்கள் மகளிடம் இருக்கலாம், ஆனால் இருவரிடமும் அதே குணம் இருக்க முடியாது.

தாயிடமும் அன்பு இருக்கலாம் மகளிடமும் அன்பு இருக்கலாம்.

தாய் அன்பாய் இருக்கிறாள், மகளும் அன்பாய் இருக்கிறாள்.

மகள் தன் அன்பை இழந்துவிட்டாலும் 
தாயிடம் அன்பு இருக்கலாம்.

ஏனென்றால் இரண்டும் ஒரே அன்பல்ல.

ஆனால் இறையியலில் தந்தையிடம் உள்ள அதே ஞானம் தான் மகனிடமும், தூய ஆவியிடமும்.

தந்தையும், மகனும் வெவ்வேறு ஆட்களாக இருந்தாலும் இருவரும் ஒரே கடவுள் தானே! அதே கடவுள் தானே!

அதே கடவுளில் எப்படி வெவ்வேறு ஞானம் இருக்க முடியும்?''

"தந்தையும், மகனும் நித்தியமாய் ஒரே கடவுளாய் இருக்கிறார்கள்.

சர்வமும் உள்ள கடவுள் தனக்குத்தானே எதையும் கொடுக்க முடியாது.

 அப்படியானால் தந்தை மகனுக்கு எதுவும் கொடுக்க முடியாது.

 தந்தையிடம் நித்தியமாய் இருப்பது தான் மகனிடமும் இருக்கிறது.

அப்படியானால் "என் தந்தை எல்லாவற்றையும் எனக்குக் கையளித்துள்ளார்'' என்று ஏன் மகன் சொல்கிறார்?

இதுதான் என் கேள்வி"

"'இயேசு மனிதர்களிடம் பேசுவதால் அவர்களுக்கு புரியும் படி மனிதப் பிரகாரமாய் பேசுகிறார்.

''என் தந்தையிடம் எது உள்ளதோ அது எல்லாம் என்னிடமும் அப்படியே இருக்கிறது,

ஏனெனில், "நானும் தந்தையும் ஒன்றே." 

என்ற பொருள் படும்படிதான் இயேசு சொல்கிறார்.

நாம் நமது அகராதிப்படி அர்த்தம் பார்த்துக் கொண்டு நம்மை நாமே குழப்பிக் கொள்கிறோம்.

நமது விசுவாசம் ஒன்றே.

உன் அப்பா உன்னைப் பார்த்து,
"நீ ஏன் அப்படி செய்தாய்?
நீயெல்லாம் என் பிள்ளையா?"

என்று கேட்டால் அவரது கூற்றை எப்படிப் புரிந்து கொள்வாய்?

எப்படிப் புரிந்து கொள்ள மாட்டாய்?"

"நான் செய்தது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்து கொள்வேன்.

நான் அவரது பிள்ளை இல்லை என்று புரிந்து கொள்ள மாட்டேன்,

ஏனென்றால் நான் அவரது பிள்ளை என்று எனக்குத் தெரியும்."

"'அதேபோல்தான் பைபிள் வசனங்களை நமது விசுவாசத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும்,

 விஞ்ஞான அறிவின் அடிப்படையில் அல்ல,

மொழி அகராதியின் அடிப்படையிலும் அல்ல.

"இவ்வுலகில் மனிதனைப் படைத்தது குறித்து வருந்தினார்."
( ஆதி. 6:5) என்ற பைபிள் வசனத்தை எப்படி புரிந்து கொள்வாய்? எப்படி புரிந்து கொள்ள மாட்டாய்?"

"இப்படிச் சொல்லுமளவிற்கு மண்ணுலகில் மனிதருடைய அக்கிரமம் பெருகிவிட்டது என்று புரிந்து கொள்வேன்.

கடவுள் வருத்தப்பட்டார் என்று புரிந்து கொள்ள மாட்டேன்.

 ஏனென்றால் கடவுளால் வருத்தப்பட முடியாது என்பதை உறுதியாக விசுவசிக்கிறேன்"

"'very good.இப்படியே பைபிள் வசனங்களை கத்தோலிக்கத் திருச்சபையின் விசுவாசத்தின் அடிப்படையில் தான் புரிந்து கொள்ள வேண்டும், நமது இஷ்டப்படி அல்ல.

நீ சந்தேகம் கேட்ட முழு வசனத்தையும் வாசி"

"என் தந்தை எல்லாவற்றையும் எனக்குக் கையளித்துள்ளார். மகன் யாரென்று, தந்தையன்றி வேறெவனும் அறியான். தந்தை யாரென்று மகனும், மகன் எவனுக்கு வெளிப்படுத்துவாரோ அவனுமன்றி வேறெவனும் அறியான்."

"'இந்த வசனத்திலிருந்து நீ என்ன புரிந்து கொள்கிறாய் என்று சொல் பார்ப்போம்."

".இயேசு பரிசுத்த தம திரித்துவத்தைப் பற்றி பேசுகிறார்.

அது ஒரு பரம இரகசியம்.

மகன் யாரென்று, தந்தைக்கு மட்டுமே தெரியும்.

தந்தை யாரென்று மகனுக்கு மட்டுமே தெரியும்.

மகன் யாருக்கு வெளிப்படுத்துகிறாரோ அவர்களுக்கும் தந்தை யார் என்று தெரியும்.

முதல் மூன்று வரிகளில் தந்தைக்கும் அவருக்கும் உள்ள உறவைப் பற்றிக் கூறிவிட்டு 

மகனுக்கு மட்டுமே தந்தை யார் என்று தெரியும் என்று கூறியதால்

இயேசுதான் இறைமகன் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தான் இறைமகன் என்பதை மக்களுக்கு புரிய வைப்பதற்காகத் தான் இந்த வசனத்தை இயேசு கூறினார்.

குறிப்பாக இயேசுவின் சீடர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை இராயப்பர் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும்.

அதனால்தான் பின்பொரு முறை இயேசு சீடர்களைப் பார்த்து,

"நீங்களோ நான் யார் என்று சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டபோது.

அவர் மறுமொழியாக, "நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்" என்றார்.

இராயப்பர் இயேசுவின் வார்த்தைகளை அவரது போதனையின் அடிப்படையில் சரியாகப் புரிந்து கொண்டது போல,

நாமும் பைபிள் வசனங்களை கத்தோலிக்கத் திருச்சபையின் விசுவாசத்தின் அடிப்படையில் புரிந்து கொள்வோம்.

நமது கால்கள் உறுதியான பின்பு தான் நடக்க ஆரம்பிக்க வேண்டும்.

நடக்க நடக்க நமது கால்கள் மேலும் உறுதியாகும்.

அதுபோல நமது விசுவாசத்தை உறுதியாக்கிக் கொண்டு தான் 

பைபிளை வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

விசுவாசத்தின் அடிப்படையில் பைபிளை வாசித்தால் வாசிக்க வாசிக்க நமது விசுவாசம் மேலும் உறுதியாகும்.

கத்தோலிக்க விசுவாசத்தின் அடிப்படையில் கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.

நாம் விண்ணகம் செல்லும் போது நமது மீட்பர் நம்மைப் பார்த்து கூறுவார்,

"உனது விசுவாசம் உன்னை இரட்சித்தது."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment