Tuesday, December 26, 2023

.."எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். நான் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்"(மத்.2:13)

"எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். நான் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்"(மத்.2:13)

புனித சூசையப்பர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை.

தனது மனைவி மரியாளின் வயிற்றில் கருத்தரித்திருப்பது சர்வ வல்லமை வாய்ந்த இறைமகன் என்பது 

கபிரியேல் தூதர் அவரது கனவில் தோன்றி தெரிவித்த பின்பு தான் அவருக்குத் தெரியும்.

அன்னை மரியாள் கபிரியேல் தூதரை நேரில் பார்த்தாள்.

ஆனால் சூசையப்பர் கனவில் தான் பார்த்தார்.

இறைவனின் தூதர் கனவில் தோன்றி அறிவித்த இறைச் செய்தியை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அவருக்கு விசுவாசம் இருந்தது.


கபிரியேலின் சொற்களை நம்பி மரியாளைத் தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

மனைவியாக ஏற்றுக் கொண்டாலும் மரியாளுக்குப் பாதுகாவலராகவும், இயேசுவுக்கு வளர்ப்புத் தந்தையாகவும் மட்டுமே வாழ்ந்தார்.

அன்னை மரியாளைப் போலவே அவரும் இறைவனின் அடிமையாகவே வாழ்ந்தார்.

எதிர்க் கேள்வி கேட்காமல் எஜமானனின் சொல்லுக்குக் கீழ்படிபவனே அடிமை.

"சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை
 ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்."

சூசை விழித்தெழுந்து, ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

ஆண்டவரின் தூதர் சூசைக்குக் கனவில் தோன்றி, 

"எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். நான் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்" என்றார்.

அவர் எழுந்து பிள்ளையையும் தாயையும் இரவிலேயே கூட்டிக்கொண்டு, எகிப்துக்குச் சென்றார்.

"எழுந்து, பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ராயேல் நாட்டுக்குச் செல்லும்."

சென்றார்

"கலிலேயா நாட்டுக்குச் செல்லும்."

சென்றார்.

இறைவன் சொன்னதை, '
 சொன்னபடியே,
 சொன்ன உடனேயே செய்தார்.

சாதாரண மனிதன் தனக்கு என்ன செய்தி கிடைத்தாலும் தனது புத்தியைப் பயன்படுத்தி அதன் காரண காரியத் தொடர்புகளை ஆராய்ந்த பின்புதான் ஏற்றுக் கொள்வான் அல்லது விட்டுவிடுவான்.

ஆனால் அடிமை தனது எஜமான் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வான்.

சூசையப்பரும் அப்படியே செய்தார்.

ஆண்டவரின் தூதர் சூசையப்பரை குழந்தையுடனும், அதன் தாயுடனும் எகிப்துக்கு போக சொன்ன போது,

அவர் நம்மைப் போல சாதாரண மனிதனாக இருந்திருந்தால்,

"சர்வ வல்லமையுள்ள கடவுள் ஏன் ஒரு சாதாரண மனிதனிடமிருந்து தப்பிப்பதற்காக எகிப்துக்கு ஓட வேண்டும்?" என்று நினைத்திருப்பார்.

ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை.

அவர் அடிமை, கடவுள் அவரது எஜமான்.

எஜமான் போ என்றவுடன் போகிறார்,

 வா என்றவுடன் வருகிறார்.

இஸ்ரேல் நாட்டுக்குப் போ என்றவுடன் போகிறார்,

 கலிலேயாவுக்கு போ என்றவுடனும் போகிறார்.

அன்னை மரியாளும், சூசையப்பரும் அவர்களாக இயங்கவில்லை,

கடவுள்தான் அவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

நாம் அவர்களுடைய பக்தர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

தாயைப் போல் பிள்ளை,
குருவைப் போல் சீடன்.

நாம் அவர்களது பக்தர்கள் என்பது உண்மையானால் நாமும் அவர்களைப் போல் ஆண்டவரின் அடிமைகள்.

அவர்கள் ஆண்டவரது அடிமைகளாக வாழ்ந்தார்கள்.

நாமும் அப்படி வாழ்கின்றோமா?

கடவுள் நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறாரா?

அல்லது

நாம் நமது இஸ்டம்போல் இயங்கிக் கொண்டிருக்கிறோமா?

நமது வாழ்வில் துன்பங்கள் வரும்போது,

 நமது ஆன்மாவின் நன்மைக்காக, ஆனால் நமது மனித குணத்திற்கு விருப்பம் தராத நிகழ்வுகள் வரும்போது,

அவை கடவுளின் சித்தம் என்று அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு

அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கிறோமா?

அல்லது முணு முணுத்துக் கொண்டே வேறு வழியில்லாமல் அவற்றை அனுபவிக்கிறோமா?

நமது செப விண்ணப்பங்களில் அதிகம் இடம்பெட்டிருப்பது ஆன்மாவைச் சார்ந்த வேண்டுதல்களா?

அல்லது நமது உடல் நலனைச் சார்ந்த வேண்டுதல்களா?

என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி என்று கூறுகிறோமா?

அல்லது,

ஒழுங்காக கோவிலுக்குப் போகும் எனக்கு ஏன் இவற்றை அனுமதிக்கிறீர் என்று கடவுளிடம் கேள்வி கேட்கிறோமா?

நமக்குச் சுகம் இல்லாமல் இருக்கும்போது நமது அம்மா வெறும் கஞ்சி போட்டுத் தந்தால்,

அது பிரியாணியைப் போல் ருசியாக இல்லை என்று முணுமுணுப்பதில்லை.

கஞ்சி நமக்கு சுகம் தரும் என்று ஏற்றுக் கொள்கிறோம்.

இதேபோல் கடவுள் நம்மிடம் செயல்படும் போது ஏன் முணுமுணுக்கிறோம்?

நாம் கடவுளின் அடிமைகளாக வாழ்ந்தால்தான், நாம் சூசையப்பருடையவும் அன்னை மரியாளுடையவும் பக்தர்கள்.

உண்மையிலேயே திரு குடும்பத்தின் பக்தர்களாக, 

ஆண்டவரின் அடிமைகளாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment