Friday, December 15, 2023

"விசுவாசம் இல்லாத சீர்கெட்ட தலைமுறையே, எதுவரை உங்களுடன் இருப்பேன்? எதுவரை உங்களைப் பொறுத்துக்கொண்டிருப்பேன்?"(மத். 17:17)

''விசுவாசம் இல்லாத சீர்கெட்ட தலைமுறையே, எதுவரை உங்களுடன் இருப்பேன்? எதுவரை உங்களைப் பொறுத்துக்கொண்டிருப்பேன்?"
(மத். 17:17)

வலிப்பினால் துன்பப்பட்ட ஒரு பையனைக் குணமாக்க முடியாத தனது சீடர்களைப் பார்த்து இயேசு,

''விசுவாசம் இல்லாத சீர்கெட்ட தலைமுறையே,'' என்று இயேசு தனது சீடர்களைப் பார்த்துக் கூறுகிறார்.

அவர்களைப் போல் நாமும் விசுவாசம் இல்லாமலிருந்தால் நம்மைப் பார்த்தும் அதே வார்த்தைகளைக் கூறுவார்.

உலகைச் சார்ந்த தொழில் அதிபர்கள் தங்கள் நிர்வாகத்திற்கு ஆட்கள் தேவை என்றால் முதலில் விளம்பரம் கொடுப்பார்கள்.

அதில் வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இருக்க வேண்டிய கல்வித் தகுதி, தொழில் திறமை ஆகியவற்றைக் குறிப்பிட்டிருப்பார்கள். 

விண்ணப்பிப்பவர்களையும் நேர்காணலில் தாங்கள் எதிர்பார்த்த தகுதி இருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்த்து தான் தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால் ஆண்டவர் கையாண்ட முறையே வேறு.

உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கும் பணி உலகில் உள்ள மற்ற எல்லாப் பணிகளையும் விட மிகப்பெரிய பணி, கடினமான பணி.

அப்பணிக்கு அடிப்படைத் தேவை உறுதியான விசுவாசம்.

அடுத்த தேவை இறையியலில் ஞானம்.

மனிதனை படைக்கும் போது அவனது உடலை களிமண்ணால் செய்து, அவனது அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதியது போல,

தகுதியை அடிப்படையாகக் கொள்ளாமல் சாதாரண படியாத பாமர மக்களைச் சீடர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார்.

சீடர்கள் இயேசு தங்களுக்கு ரோமை பேரரசிடமிருந்து அரசியல் விடுதலை பெற்றுத் தரப் போகிறார் என்று எண்ணினார்கள்.

இயேசு நிறுவப் போகும் சாம் ராஜ்ஜியத்தில் தங்களுக்கு உயர்ந்த பதவிகள் வேண்டும் என்று அருளப்பரும், வியாகப்பரும் அவரிடம் கேட்டதிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்.

சீடர்களுக்கு ஆன்மீகத்தில் பயிற்சி கொடுப்பதற்காகத்தான் தனது பொது வாழ்வின் போது அவர்களைத் தன்னுடனே இயேசு வைத்திருந்தார்.

அவர்கள் முன்னால் வியாதியஸ்தர்களைக் குணமாக்கிய போது,

"உனது விசுவாசம் முன்னே குணமாக்கிற்று." என்று சொல்வார்.

ஆனாலும் இயேசு எதிர்பார்த்த அளவு சீடர்களிடம் விசுவாசம் வளரவில்லை.  

ஒருநாள் தம்முடைய சீடரோடு கடலில் படகில் பயணம் செய்து கொண்டிருந்தபோது,

இயேசு படகில் உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது புயற்காற்று   வீசியது. 

கடவுள் தங்களோடு இருக்கும்போது தங்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்று சீடர்கள் விசுவசித்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் படகு மூழ்கி விடுமோ என பயந்து,

"குருவே, மடிந்துபோகிறோம்" என்று அவரை எழுப்பினர்.

 அவர் எழுந்து காற்றையும் கொந்தளிப்பையும் கடியவே, அவை அடங்கின. அமைதி உண்டாயிற்று.

பின்னர், அவர் அவர்களிடம், "உங்கள் விசுவாசம் எங்கே?" என்றார்.

இன்னொரு முறை இயேசு கடல் மேல் நடந்து வந்தார்.

இராயப்பரும் கடல் மேல் நடக்க ஆசைப்பட, இயேசு "வா" என்றார்.

இராயப்பரும் படகினின்று இறங்கிக் கடல்மீது நடந்து இயேசுவை நோக்கி வந்தார்.

காற்று பலமாக வீசியது.

இராயப்பர் தனது முழு கவனத்தையும் இயேசுவின் மேல் வைக்காமல் காற்றையும் கவனித்ததால் மூழ்க ஆரம்பித்தார்.

ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று அலறினார்.

 உடனே இயேசு கையை நீட்டி, அவரைப் பிடித்து, "குறைவான விசுவாசம் உள்ளவனே, ஏன் தயங்கினாய் ?" என்றார்.

பொது வாழ்வின் போது தான் பாடுகள் படப்போவதையும், மரிக்கப் போவதையும், மூன்றாம் நாள் உயிர் போவதையும் பற்றி சீடர்களிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் இயேசு உயிர்த்த பின்பு துவக்கத்தில் சீடர்கள் அதை நம்பவில்லை.

இயேசு விண்ணகம் எய்திய பின் பரிசுத்த ஆவியின் வருகையின் போது தான் சீடர்களின் விசுவாசம் உறுதி பெற்றது.

அவர்களின் விசுவாசம் உறுதி பெற்ற பின்பு தான் கத்தோலிக்க திருச்சபை இயங்க ஆரம்பித்தது.

அது முதல் இன்று வரை பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலின் படி தான் திருச்சபை இயங்கிக் கொண்டிருக்கிறது, இன்னும் தொடர்ந்து இயங்கும்.

நாம் ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவி நம் மீது இறங்கியதால் விசுவாசத்தை இலவசமாகப் பெற்றோம்.

பிறக்கும் குழந்தை குழந்தையாகவே இருப்பதில்லை, வளர்கிறது.

நாம் பெற்ற விசுவாசம் வளர்ந்திருக்கிறதா அல்லது இன்னும் குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறதா, சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

படகுப் பயணத்தின் போது இயேசு சீடர்களின் கூடவே இருந்தும் 

விசுவாசக் குறைவின் காரணமாக,

 படகு மூழ்கி விடுமோ என்று சீடர்கள் பயந்தார்கள்.

இயேசு நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்பதை உறுதியாக விசுவசிக்கிறோமா?

உறுதியாக விசுவசித்தால் நமது வாழ்வில் பிரச்சனைகள் வரும்போது பயப்படவே மாட்டோம்.

இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதை விசுவசித்தால் மட்டும் போதாது,

அவர் நம்மோடு இருக்கும் போது நமக்கு எந்த வித ஆபத்தும் வராது என்பதை உறுதியாக விசுவசிக்க வேண்டும்.

நான் ஆபத்து என்று குறிப்பிடுவது நமது ஆன்மீக வாழ்வுக்கு எதிரான ஆபத்து.

உடலைச் சார்ந்த மரணம் ஒரு ஆபத்து அல்ல.

அது மோட்சத்தின் வாசல்.

நமக்கு வரும் நோய்   நாம் சுமக்க வேண்டிய சிலுவை, பிரச்சனை அல்ல.

இயேசு சிலுவையில் மரித்தார் என்பதையும், மூன்றாம் நாள் உயிர்த்தார் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாமும் ஒரு நாள் மரிப்போம், இயேசுவின் இரண்டாவது வருகையின் போது உயிர்ப்போம் என்பதை விசுவசிக்க வேண்டும்.

இந்த விசுவாசம் உறுதியானதாக இருந்தால் நாம் நமது வாழ்வில் எதற்கும் பயப்பட மாட்டோம்.

நமது விசுவாசம் உறுதியானதாக இருந்தால்,

நமது உடலுக்கு என்ன நேர்ந்தாலும்,

நமது ஆன்மா பத்திரமாக இருக்கும்.

நமது ஆன்மாவின் நலன் தான் நமக்கு முக்கியம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment