ஆடு மேய்ப்பவனுக்கு எல்லா ஆடுகளும் முக்கியம்தான்.
மேய்ப்பதற்காக வெளியே அவன் ஓட்டிச் செல்லும் எல்லா ஆடுகளும் பத்திரமாக பட்டிக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் அவனுடைய ஆசை.
ஆனாலும் மேயும் இடத்தில் ஏதாவது ஒரு ஆடு வழி தவறிச் சென்று, தொலைந்து விட்டால்
மற்ற ஆடுகளை மேய விட்டு விட்டு காணாமல் போன ஆட்டைத்தேடி அலைவான்.
அவனது கண்ணும் கருத்தும் ஆட்டைக் கண்டு பிடிப்பதிலேயே இருக்கும்.
கண்டு பிடித்து விட்டால் பத்திரமாக இருக்கும் ஆடுகளால் ஏற்படும் மகிழ்ச்சியை விட
கண்டுபிடிக்கப்பட்ட ஆட்டினால் அதிக மகிழ்ச்சி ஏற்படும்.
ஒரு தந்தைக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
எல்லா பிள்ளைகளையுமே அவன் அதிகம் நேசிப்பான்.
ஆனாலும் ஏதாவது ஒரு மகனுக்கு சுகமில்லாமல் போய்விட்டால்,
சுகமானவர்களை வீட்டில் விட்டுவிட்டு சுகமில்லாதவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வான்.
மற்றவர்களோடு செலவழிக்கும் நேரத்தை விட அவனோடு அதிக நேரத்தைச் செலவழிப்பான்.
மற்றவர்களுக்காக செலவழிக்கும் பணத்தைவிட சுகமில்லாதவனுக்கு அதிகம் செலவழிப்பான்.
அதிகமான ஆறுதல் வார்த்தைகளைப் பேசுவான்.
சில நாட்கள் மருத்துவத்திற்குப் பின் அவன் சுகம் அடைந்து விட்டால் அவனால் ஏற்படும் மகிழ்ச்சி மற்றவர்களால் ஏற்படும் மகிழ்ச்சியை விட அதிகமாக இருக்கும்.
உறவினர்கள் கூட சுகமில்லாமல் இருந்து சுகம் அடைந்தவனைப் பற்றி தான் அதிகம் விசாரிப்பார்கள்.
அதேபோல், கடவுள் அவரால் படைக்கப்பட்ட எல்லா மனிதர்களையும் அளவு கடந்த விதமாய் நேசித்தாலும்,
பரிசுத்தவான்கள் மேல் காட்டும் அக்கறையை விட பாவிகள் மேல் அதிக அக்கறை காட்டுகிறார்.
நாம் பயன்படுத்தும் bike நல்ல நிலையில் இருக்கும்போது அதன் மீது காட்டும் அக்கறையை விட,
அது பழுதுபட்டு விட்டால் அதன் மீது அதிக அக்கறை காட்டுகிறோம்.
பிரச்சனை இல்லாத வாகனத்தை பயணம் முடிந்தவுடன் வீட்டில் விடுகிறோம்.
ஆனால் பிரச்சனை உள்ள வாகனத்தை Workshop க்கு அடிக்கடி கொண்டு போவதும்,
வீட்டுக்கு எடுத்து வருவதுமாக அதன் மீது அதிக கவனத்தையும் நேரத்தையும் செலவழிக்கிறோம்.
பரிசுத்தவான்கள் கடவுளது விருப்பப்படி வாழ்வதால் அவர் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருந்தால் போதும்.
ஆனால் பாவிகள் அவருடைய விருப்பத்திற்கு எதிர் மாறாக வாழ்வதால் அவர்களை தன்பால் ஈர்ப்பதற்கு அதிகமான அருள் வரங்களைப் பொழிய வேண்டியிருக்கிறது.
பாவிகளை மனந்திருப்ப தான் மனிதனாய்ப் பிறந்து பாடுகள் பட்டு மரித்தது மட்டுமல்லாமல்,
அவர்களை நல்வழிக்கு கொண்டு வர நற்செய்தியின் தூதுவர்களாக தனது சீடர்களையும் அனுப்புகிறார்.
அவரால் அனுப்பப்படுகிற வேத போத போதகர்களின் அதிகமான கவனம் பாவிகளை மனம் திரப்புவதில் தான் இருக்கும்.
அவர்கள் நற்செய்தியை உடனே ஏற்றுக் கொள்ளுபவர்கள் மத்தியில் உழைப்பதை விட
ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மத்தியில் அதிகம் உழைக்க வேண்டி இருக்கிறது.
நன்றாக படிக்கின்ற மாணவர்களுக்காக செலவழிக்கிற நேரத்தை விட
மக்குகளுக்காக அதிக நேரத்தை ஆசிரியர் செலவழிப்பது போல,
வேத போதகர்கள் பரிசுத்தமானவர்களுக்காக செலவழிக்கும் நேரத்தை விட,
பாவிகளுக்காக அதிக நேரம் செலவழிக்கிறார்கள்.
அதிக உழைப்பினால் கிடைக்கிற வெற்றிக்கு அதிகமான மகிழ்ச்சியும் கிடைக்கும்.
ஆசிரியருக்கு பள்ளிக்கூட தேர்வில் 98 மதிப்பெண்கள் பெறுகிற மாணவன் பொதுத்தேர்வில் நூறு மதிப்பெண்கள் பெற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட,
பத்து மதிப்பெண்கள் பெறும் மாணவன் 35 மதிப்பெண்கள் பெற்றால் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்.
உண்மையான ஆத்ம தாகம் உள்ள பங்குக் குருவானவர்,
பக்தியுள்ள கிறிஸ்தவ குடும்பங்களின் இல்லங்களுக்கு சென்று செலவழிக்கும் நேரத்தை விட,
ஒழுங்காக வாழாத கிறிஸ்தவ இல்லங்களுக்குச் சென்று அவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக அதிக நேரத்தைச் செலவிடுவார்.
திடமாக வாழ்பவனுக்கு Tonic கொடுப்பது,
சாகக் கிடக்கும் நோயாளியைப் பிழைக்க வைப்பது
.
ஆகிய இரண்டு சேவைகளில் எந்த சேவை மருத்துவருக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கும்?
ஒரே நேரத்தில் பிறந்த இரண்டு பேர் எழுபது ஆண்டுகள் வாழ்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் அவரது வாழ்நாளில் சாவான பாவம் எதுவுமே செய்யவில்லை.
ஒவ்வொரு வினாடியும் விண்ணகம் செல்லும் நிலையில் வாழ்ந்தார்.
அடுத்தவர் அவரது வாழ்நாள் முழுவதும், , சாவான பாவங்களிலே மூழ்கி கிடந்தார்.
இருவரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் மரித்தார்கள்.
சாவான பாவமே செய்யாமல் பரிசுத்தமாக வாழ்ந்தவரது ஆன்மா உத்தரிக்கிற ஸ்தலம் வழியே விண்ணகம் சென்றது.
வாழ்நாள் முழுவதும் பாவங்களிலே மூழ்கிக் கிடந்தவர் மரித்து கொண்டிருக்கும் நேரத்தில் இறுதி வினாடியில் அவரது பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு இறைவனிடம் மன்னிப்பு கேட்டார்.
பாவ மன்னிப்பு பெறுவதற்கு ஒரு வினாடியில் ஒரு துளியே (Fraction of a second) போதும்.
அவரது ஆன்மாவும் உத்தரிக்கிற ஸ்தலம் வழியே விண்ணகம் சென்றது.
இயேசுவின் சொற்படி, பாவியாகவே வாழ்ந்து,
இறுதி வினாடியில் பாவ மன்னிப்பு பெற்று, விண்ணகம் சென்ற ஆன்மாவுக்காக
விண்ணகவாசிகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.
வாழ்நாள் முழுவதும் நல்லவராக வாழ்ந்து விண்ணகம் சென்றவரும் அந்த மகிழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பார்.
தான் விண்ணகம் சென்றதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை விட, மனம் திரும்பிய பாவி விண்ணகம் சென்றதால் ஏற்பட்ட மகிழ்ச்சியே அதிகமாக இருந்திருக்கும்.
இறைவனின் இரக்கம் அளவிட முடியாதது.
வாழ்நாள் முழுவதும் கள்ளனாய் வாழ்ந்து விட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்த கள்ளன்
இயேசுவின் இரக்கத்தால் நல்ல கள்ளன் என்று பெயர் வாங்கி விட்டான்.
இயேசுவோடேயே அவனும் விண்ணகம் சென்று விட்டான்.
நாம் எவ்வளவு பெரிய பாவியாய் இருந்தாலும் நம்மையும் விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லவே இயேசு மனிதனாய்ப் பிறந்தார்.
இயேசுவின் இரக்கத்தை நாம் ஏற்றுக் கொள்வோம்.
இயேசு நம்மை ஏற்றுக் கொள்வார்.
"நித்திய பிதாவே!
உமது நேசக்குமாரனாகிய
எமது ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின்
உடலையும்
உதிரத்தையும்,
ஆன்மாவையும்,
தெய்வீகத்தையும்
எமது பாவங்களுக்காவும்,
அகில உலகின் பாவங்களுக்காகவும்,
பரிகாரமாக உமக்கு
ஒப்புக்கொடுக்கிறோம்.
இயேசுகிறிஸ்துவின்
வேதனை நிறைந்த பாடுகள்
வழியாக
எங்கள் மீதும்,
எங்கள் குடும்பங்களின் மீதும்,
அகில உலகின் மீதும் இரக்கமாயிரும்."
நேரம் கிடைக்கும் போதெல்லாம்
இறை இரக்கத்தின் செபமாலையை சொல்வோம்.
இறைவனின் இரக்கத்தின் முன்னால் நமது பாவங்கள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்து விடும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment