Thursday, December 7, 2023

இயேசு, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன ?" என்று அவர்களைக் கேட்க, அவர்கள், "ஏழு இருக்கின்றன. சில சிறு மீன்களும் உள்ளன" என்றனர். (மத்.15:34)(தொடர்ச்சி)

சிந்திப்போம். செயல்படுவோம்.



இயேசு, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன ?" என்று அவர்களைக் கேட்க, அவர்கள், "ஏழு இருக்கின்றன. சில சிறு மீன்களும் உள்ளன" என்றனர். (மத்.15:34)
(தொடர்ச்சி)

ஏழு அப்பங்களையும், சில மீன்களையும் கொண்டு, நாலாயிரத்துக்கும் அதிகமான பேருக்கு இயேசு உணவு கொடுத்த நிகழ்ச்சியிலிருந்து நாம் என்ன பாடம் கற்கிறோம்?

நமது முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் நம்மைப் படைத்த இறைவனை நேசிக்க வேண்டும்.

நம்மை நாமே நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்,

என்ற இயேசுவின் இரண்டு கட்டளைகளின் அடிப்படை மேல் தான் கிறிஸ்தவம் எந்த கட்டடம் உறுதியாக நிற்கிறது.

இரண்டு கட்டளைகளையும் அகற்றிவிட்டால் கட்டடம் சரிந்து விடும். 

நம்மிடம் இருப்பதை நமது 
அயலானோடு பகிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் இயேசுவின் விருப்பம்.

இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தான் அன்று இயேசுவின் சீடர்கள் தங்களிடம் இருந்த ஏழு அப்பங்களையும் சில மீன்களையும் 4000 பேருக்கு மேற்பட்டவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார்கள்.

நாமும் நம்மிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்துண்டு வாழ வேண்டும் என்ற பாடத்தை தான் இந்த நிகழ்விலிருந்து நாம் கற்கிறோம்.

பக்கத்து வீட்டுக்காரன் பட்டினியால் எழ முடியாமல் படுத்திருக்கும் போது வயிறார உண்டு விட்டு உறங்குவது கிறிஸ்தவம் அல்ல.

நம்மிடம் இருப்பது எதுவாக இருந்தாலும்,

திறமைகளாக இருக்கலாம்,
பொருட்களாக இருக்கலாம்,
பணமாக இருக்கலாம்,

எவைகளாக இருந்தாலும் அவையெல்லாம் நமக்கு இறைவனால் தரப்பட்டவை.

அவை நமது சொந்த பயன்பாட்டுக்கு மட்டும் தரப்படவில்லை,

நமது அயலானின் பயன்பாட்டுக்கும் சேர்த்துதான் நமக்கு தரப்பட்டுள்ளன.

நாம் நமது உழைப்பினால் ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கலாம்.

இறைவனது உதவியின்றி நம்மால் உழைக்க முடியாது.

இறைவனின் உதவியோடு நாம் பெறும் ஊதியம் இறைவனது படைப்புகளான நமது பிறருக்கும் பயன்பட வேண்டும்.

நமது ஊதியத்தின் ஒரு பகுதி நமது அயலானுக்கு உதவி செய்ய ஒதுக்கப்பட வேண்டும்.

கிறிஸ்மஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

கிறிஸ்மஸ் விழாவை எப்படிக் கொண்டாடுவது என்று திட்டங்கள் தீட்ட ஆரம்பித்திருப்போம்.

யார் யாருக்கு என்னென்ன புத்தாடைகளை எங்கே வாங்க வேண்டும்,

கிறிஸ்மஸ் விருந்துக்கு என்னென்ன உணவு வகைகள் தயாரிக்கப்பட வேண்டும்,

யார் யாரை விருந்துக்கு அழைக்க வேண்டும்,

எப்போது எப்படிப்பட்ட star ஐத் தொங்க விட வேண்டும், 

எப்படிப்பட்ட குடில் அமைக்க வேண்டும் என்பவை போன்ற திட்டங்களை தீட்ட ஆரம்பித்திருப்போம்.

இத்திட்டங்களில் நாம் மட்டும் இருக்கிறோமா, நமது பிறரும் இருக்கிறார்களா என்ற கேள்விகளுக்கான விடையில் தான் நமது கிறிஸ்தவம் அடங்கி இருக்கிறது.

நாம் மட்டும் இருந்தால் நம்மிடம் கிறிஸ்தவம் இல்லை.

நமது பிறரும் இருந்தால் தான் நாம் உண்மையான கிறிஸ்தவர்கள்.

இயேசு தான் மட்டும் வாழ வேண்டும் என்பதற்காக மனிதனாகப் பிறக்கவில்லை,

மற்றவர்கள் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மனிதனாகப் பிறந்தார்.

மற்றவர்களுக்காக வாழ்பவர்கள் தான் உண்மையான கிறிஸ்தவர்கள்.

நாம் நமக்காக மட்டும் வாழ்கின்றோமா,

நமது பிறருக்காகவும் வாழ்கின்றோமா,

சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் சீடர்கள் தங்களிடம் இருந்த ஏழு அப்பங்களையும் தாங்கள் மட்டும் உண்ணவில்லை.

இயேசுவின் விருப்பப்படி மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.

நாமும் இயேசுவின் சீடர்கள் தான்.

அன்று சீடர்கள் செய்ததை இன்று நாம் செய்வோம்.

நம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்காகவும் பயன்படுத்துவோம்.

மார்கழிக் குளிரில் மாட்டுத் தொழுவத்தில் படுக்கத் தொட்டில் கூட இல்லாமல்,

மாடுகளின் தீவனத் தொட்டியில் படுத்திருக்கும் இயேசு பாலன்,

Tip top உடை அணிந்து என்னைப் பார்க்க வாருங்கள் என்று நம்மை அழைக்கவில்லை.

ஏழைகள் பாக்கியவான்கள், அவர்களோடு வாருங்கள் என்று தான் அழைக்கிறார்.

நம்மிடம் புத்தாடை வாங்கப் போதிய பணம் இல்லாமலிருக்கலாம்.

நம்மிடம் உள்ள பழைய ஆடைகளை நாமும், நமது பிறரும் அணிந்து இயேசு பாலனை பார்க்கச் செல்வோம்.

ஏழையாகப் பிறந்த பாலனை ஏழையாகவே பார்க்கச் செல்வோம்.

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே." என்று இயேசு பாலன் நம்மை ஆசீர்வதிப்பார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment