நீங்கள் வீட்டுக்குள் போகும்போது, " உங்களுக்குச் சமாதானம் " என்று வாழ்த்துங்கள். (மத்.10:12)
இயேசு சமாதானத்தின் தேவன்.
கீழே மண்ணில் வாழும் பாவிகளை மீட்டு, மேலே விண்ணுக்கு அழைத்துச் செல்வதற்காக
விண்ணிலிருந்து மனிதனின் சம நிலைக்கு (சம தானத்துக்கு) இறங்கி வந்த தேவன்.
நித்திய காலமாக விண்ணகத்தில் வாழ்ந்து வரும் இறைமகன்,
மண்ணகத்தில் மனிதவுரு எடுத்தபோது வானவர் பாடிய பாடல்:
"உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக. உலகிலே நல் மனதோர்க்கு சமாதானம் உண்டாகுக."
"Glory to God in the highest, and on earth peace to men of good will.”
பரிசுத்தம் = பரிசுத்தம்.
பரிசுத்தரான கடவுள் நமது முதல் பெற்றோரை பாவ மாசு இல்லாத பரிசுத்தர்களாகப் படைத்தார்.
ஆனால் அவர்கள் விலக்கப்பட்ட கனியைத் தின்றதினால் பரிசுத்த நிலையிலிருந்து பாவ நிலையில் விழுந்தார்கள்.
அவர்களை பாவ நிலையிலிருந்து தூக்கி பரிசுத்த நிலைக்கு உயர்த்த,
அவர்களது பாவத்துக்கு பரிகாரம் செய்ய,
மனிதனாய்ப் பிறந்து,
பாவிகள் செய்ய வேண்டிய பாவப் பரிகாரத்தை பாவமற்ற அவரே செய்தார்.
நாம் செய்த பாவங்களை சிலுவை வடிவில் அவரே சுமந்து,
சிலுவையில் தன்னையே நமக்காகப் பலியாக்கினார்.
அவர் தன்னைச் சிலுவையில் பலி கொடுத்த வினாடியே இறைவனுக்கும் நமக்கும் சமாதானம் ஏற்பட வழி பிறந்தது.
அவரது சிலுவைப் பலியின் பயனாக நமது பாவங்களுக்கு இறைவனின் மன்னிப்பைப் பெற்ற வினாடியே அவரோடு சமாதானம் ஆகிறோம்.
பாவ நிலையில் பாவ சங்கீர்த்தனத் தொட்டிக்குப் போகும் நாம்,
அங்கிருந்து சமாதான நிலையில் திரும்புகிறோம்.
நாம் பெற்ற சமாதானத்தை அனைவரும் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
(ஆசைப்பட வேண்டும்)
அதனால்தான் நமது நண்பர்களைச் சந்திக்கும் போது,
"வணக்கம்" என்று சொல்வதற்குப் பதிலாக, "உங்களுக்கு சமாதானம் உண்டாகுக" என்று சொல்கிறோம் (சொல்ல வேண்டும்)
அப்படி சொல்லும் போது நாம் சமாதான நிலையில் இருக்க வேண்டும்.
"நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையம்" என்ற கூற்றுக்கு ஏற்ப,
"நான் இறைவனோடு சமாதானமாக இருப்பது போல் நீங்களும் சமாதானமாக இருங்கள்" என்று வாழ்த்துகிறோம்.
சமாதானத்தின் ஊற்றாகிய இயேசு உயிர்த்தபின் தனது சீடர்களுக்கு காட்சி கொடுக்கும் போது,
"உங்களுக்கு சமாதானம் உண்டாகுக" என்றுதான் வாழ்த்தினார்.
இயேசுவின் பொது வாழ்வின் போது தனது சீடர்களை நற்செய்தியை அறிவிக்க அனுப்பும்போது, அவர்களிடம்,
"நீங்கள் எந்த நகருக்கு, எந்த ஊருக்குப் போனாலும், அங்கே தகுதியுள்ளவன் யார் என்று கேட்டறிந்து அங்கிருந்து போகும்வரை அவனிடம் தங்கியிருங்கள்.
நீங்கள் வீட்டுக்குள் போகும்போது, " உங்களுக்குச் சமாதானம் " என்று வாழ்த்துங்கள்."
என்று சொல்லி அனுப்பினார்.
இயேசு மூன்று ஆண்டுகள் போதித்த நற்செய்திகளை எல்லாம் ஒரே வார்த்தையில் கூற வேண்டும் என்றால்,
"சமாதானம்" என்று கூற வேண்டும்.
இயேசுவின் நற்செய்தியை போதிப்பதன் நோக்கமும்,
அதைக் கேட்டு, தியானித்து, வாழ்வதன் நோக்கமும்
இறைவனோடு சமாதானம் செய்து கொள்வது தான்.
இறைவனோடு மட்டுமல்ல நமது அயலானோடும் சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.
தனது அயலானோடு சமாதானமாக வாழாதவனால் இறைவனோடு சமாதானம் செய்து கொள்ள முடியாது.
சமாதானத்திற்கான வழி பாவ மன்னிப்பு.
நமது அயலான் நமக்கு விரோதமாக செய்த குற்றங்களை நாம் மன்னிக்காவிட்டால்
இறைவன் நமது பாவங்களை மன்னிக்க மாட்டார்.
"எங்களுக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களை மன்னியும்" என்று தான் தினமும் விண்ணக தந்தையிடம் சொல்கிறோம்.
அயலானோடு சமாதானமாக வாழாதவர்களின் காணிக்கையைக் கூட இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டார்.
நல்ல மனது உள்ளவர்கள் எல்லோரோடும் சமாதானமாக வாழ்வார்கள்.
ஒருவன் யாரோடாவது சமாதானமாக வாழாவிட்டால் அவனுக்கு நல்ல மனது இல்லை என்று அர்த்தம்.
நல்ல மனது இல்லாதவனின் வார்த்தைகளும் செயல்களும் நல்லவைகளாக இருக்காது.
நல்லதையே நினைத்து,
நல்லதையே பேசி,
நல்லதையே செய்பவன்
சமாதானத்தின் இருப்பிடம்.
அன்பு என்றால் கடவுள்.
இரக்கம் என்றால் கடவுள்.
சமாதானம் என்றால் கடவுள்.
கடவுளின் உள்ளத்தில் எதிர்மறையான எண்ணங்களுக்கு இடமில்லை.
அன்பு மயமான கடவுளால் யாரையும் வெறுக்க முடியாது.
அவருக்கு விரோதமாக செயல் புரிந்து கொண்டிருக்கும் சாத்தானைக் கூட அவரால் வெறுக்க முடியாது.
இரக்கமயமான கடவுளால் யார் மீதும் கோபம் கொள்ள முடியாது.
நாம் எவ்வளவு பெரிய பாவிகளாய் வாழ்ந்தாலும் கடவுள் நம்மீது இரக்கமாகவே இருக்கிறார்.
தன்னை சிலுவையில் அறைந்தவர்களைக் கூட மன்னிக்கும் படி தந்தையிடம் வேண்டுமளவுக்கு அவரது இரக்கம் பெரியது.
கடவுள் சமாதான மயமானவர்.
பாவம் செய்யும்போது நாம் தான் சமாதானத்தை முறித்துக் கொண்டு வெளியேறுகிறோம். கடவுளின் சமாதானம் மாறாது. ஆகவேதான் எப்போதும் நம்மை மன்னிக்க தயாராக இருக்கிறார்.
நாம் கடவுளின் பிள்ளைகள். தாயைப் போல பிள்ளை என்பார்கள்.
நம்மிடம் சமாதானம் இல்லாவிட்டால் கடவுளின் பிள்ளைகள் என்ற பெயருக்கு அருகதை அற்றவர்களாக மாறிவிடுவோம்.
இறைவனோடும், நமது அயலானோடும் சமாதானமாக வாழ்வோம்.
கடவுளின் பிள்ளைகளாக வாழ்வோம்.
கடவுள் வாழும் மோட்சம் நமக்குச் சொந்தமாக வேண்டும் என்றால் நாம் அவரைப் போல வாழ்வோம்.
நமது விண்ணகத் தந்தை சமாதானமே உருவானவராக இருப்பதால்,
நாமும் சமாதானமாக வாழ்வோம்.
அனைவருக்கும் சமாதானம் உண்டாகுக.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment