Saturday, December 16, 2023

ஆதியிலே வார்த்தை இருந்தார்: அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.(அரு.1:1)

ஆதியிலே வார்த்தை இருந்தார்: அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.
(அரு.1:1)

"தாத்தா, நற்செய்தி  அருளப்பர் ஏன் இறைமகனை வார்த்தை என்கிறார்?"

"'கடவுள் மனிதனை எப்படிப் படைத்தார்?"

"நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் நீங்களும் கேள்வி கேட்கிறீர்கள்?"


"'தெரிந்ததிலிருந்து தெரியாததற்குப் போக வேண்டும்.

என் கேள்விக்கு முதலில் பதில் சொல்"

"கடவுள் மனிதனைத் தன் சாயலில் படைத்தார்."

"'மிருகங்கள் நம்மைப் போலவே உயிரோடு பிறக்கின்றன, வாழ்கின்றன, இறக்கின்றன.

அவைகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?"

"மிருகங்களுக்கு ஆன்மா இல்லை. நாம் ஆன்மாவோடு பிறந்தோம்."

"'மிருகங்களுக்கும் உடல் இருக்கிறது. நமக்கும் உடல் இருக்கிறது.

மிருகங்களும் சாப்பிடுகின்றன, நடக்கின்றன, ஓடுகின்றன, தூங்குகின்றன.

நாமும் சாப்பிடுகின்றோம் நடக்கின்றோம் ஓடுகின்றோம், தூங்குகிறோம்.

எதில் நாம் மிருகங்களிலிருந்து வேறுபடுகிறோம்?"

"நமக்கு சிந்திக்கத் தெரியும், 
சிந்தித்ததைப் பேசத் தெரியும், 
சிந்தனைக்கு ஏற்ப செயல் புரியத் தெரியும்.

மிருகங்களால் சிந்திக்கவும் முடியாது, பேசவும் முடியாது."

"'சிந்தனை, சொல், செயல் மூன்றும் நம்முடைய இயல்பு.

மிருகங்கள் நடப்பதையும் ஓடுவதையும் செயல் என்று கூற முடியாது, ஏனென்றால் அவை சிந்தனையின் விளைவு அல்ல.

நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம்.

சிந்தனை, சொல், செயல் மூன்றும்தான் நமக்கு கடவுளின் சாயலைக் கொடுக்கின்றன.

கடவுளும் சிந்திக்கிறார், 
சிந்தனையை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார், 
நம்மில்  செயல் புரிகிறார்.

நாமும் சிந்திக்கிறோம், 
சிந்திப்பதை சொல் மூலம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம், செயல் புரிகிறோம்.

நாம் சிந்திக்கும்போது நமது மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன.

எண்ணங்கள் வார்த்தையின் வடிவில் இருக்கின்றன.

வார்த்தைகளைத் தான் பேசுகிறோம்.

நாம் சிந்திப்பதைச் செயலில் காட்டுகிறோம்."

"அதாவது கடவுளும் சிந்திக்கிறார்.

தான் சிந்திப்பதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

நம்மில் செயல் புரிகிறார்.

 நமது சிந்தனை, சொல், செயல் ஆகியவை தான் நம்மை நமக்கு கடவுளின் சாயலைக் கொடுக்கின்றன என்று சொல்கிறீர்கள், அப்படித்தானே."

"'அப்படியே தான்"

"ஆனால், தாத்தா, நமக்கு வாய் இருக்கிறது. அதன் மூலம் நமது எண்ணங்களை வார்த்தை வடிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

 ஆனால் கடவுள் ஆவியானவர். அவரால் எப்படி நம்மைப் போல் பேச முடியும்?"

"'நமது ஆன்மா ஆவி, கடவுளைப் போல.

நமது உடல் மண்ணில் உள்ள பொருட்களால் ஆனது.

ஆவியான கடவுளுக்கு உடல் இல்லை, ஆகவே நம்மை போல் வாயும் இல்லை, நம்மைப் போல் பேச முடியாது.

ஆனால் அவரது சிந்தனைகளை நம்முடைய மனதோடு அவரால் பகிர்ந்து கொள்ள முடியும்.

அவரது எண்ணங்களை தீர்க்கத்தரிசிகளோடு பகிர்ந்து கொண்டதால் தான் பைபிள் உருவானது.

பைபிள் என்றாலே இறைவாக்கு தானே.

நமது உள்ளத்தில் அவர் பேசுகிறார்.

நமது சிந்தனையில் தோன்றும் எண்ணங்கள் வார்த்தை வடிவில் உள்ளன.

நமது சிந்தனையில் வார்த்தைகள் பிறக்கின்றன.

தந்தை இறைவனின் சிந்தனையில் பிறக்கும் வார்த்தைதான்  மகன்.

ஆகவே தான் இறைமகனை வார்த்தை என்கிறோம்.

தந்தைக்கும் மகனுக்கும் உள்ள அன்பு தான் பரிசுத்த ஆவி. அன்பின் தேவன்."


"இப்போது நான் சொல்கிறேன்.

"ஆதியிலே வார்த்தை இருந்தார்:

 அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், 

அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்." என்று அருளப்பர் கூறுகிறார்.

நித்திய காலத்திலிருந்தே  தந்தை இறைவன் வார்த்தையாகிய மகனைப் பெறுகிறார்.

அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், ஆகவே தந்தை கடவுள்.

அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்." ஆகவே மகன் கடவுள்.

தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் பரிசுத்த ஆவி கடவுள்.

மூன்று ஆட்கள், ஒரு கடவுள்.

இந்த பரிசுத்த தம திரித்துவத்தின் இரகசியத்தை

கடவுள் அருளப்பரோடு பகிர்ந்து கொள்கிறார்.

அருளப்பர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்."


"'தந்தையிடமிருக்கும் வார்த்தை நம்மை மீட்பதற்காக மனுவுருவானார்.
  
தனது மீட்புப் பணியை தூய ஆவியின் மூலம் செயல் படுத்திக் கொண்டிருக்கிறார்.

தந்தை படைத்தார்.
மகன் மீட்டார்.

தூய ஆவி ஒவ்வொரு ஆன்மாவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
மூவரும் ஒரே கடவுள்

ஆகவே இப்படியும் சொல்லலாம்.

கடவுள் படைத்தார்.
கடவுள் மீட்டார்.
கடவுள் ஒவ்வொரு ஆன்மாவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மனித உரு எடுத்தது மகன் மட்டுமே."

"தந்தை இறைவன் தனது சிந்தனையில் பிறந்த வார்த்தையை, அதாவது மகனை,
 நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

தந்தையுள் வாழும் அவர் நமக்குள்ளும் வாழ்கிறார்.

நமது சிந்தனை, சொல், செயல் மூன்றும் வார்த்தையை, அதாவது மகனை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

நாம் கடவுளைப் பற்றியே நினைத்து,
அவரைப் பற்றியே பேசி, அவருக்காகவே செயல் புரிந்து வாழ்ந்தால் 

மற்றவர்கள் நம்மில் கடவுளைக் காண்பார்கள்.

நம்முள் வாழும் வார்த்தையானவர் அன்பே உருவானவர் .

அவரது அன்பை நம்மோடு பகிர்ந்துள்ளார். 

கடவுள் தன்னையும் நேசிக்கிறார்,  நம்மையும் நேசிக்கிறார்.

நாமும் கடவுளை முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் நேசிக்க வேண்டும்.

நம்மை நாம் நேசிப்பது போல் நமது அயலாணையும் நேசிக்க வேண்டும்.

நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் அன்பு இருக்க வேண்டும்.

நமது அன்பை அனுபவிக்கும் நமது அயலான் நம்மில் அன்பே உருவான கடவுளைக் காண வேண்டும்.

இயேசு நமக்கு முன்மாதிரிகையாய்  வாழ்ந்தது போல நாம் அவரைப் பின்பற்றி நமது அயலானுக்கு முன்மாதிரிகையாய் வாழ வேண்டும்.

நமது முன்மாதிரிகையான வாழ்க்கை  நம்மை  செயல் மூலம் வார்த்தையை அறிவிக்கும் வீரர்களாக மாற்றும்.

இவ்வுலகில் வார்த்தைக்காக வாழ்ந்து மறுவுலகில் வார்த்தையோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

:

No comments:

Post a Comment