Saturday, December 30, 2023

திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.(லூக்.2:43)(தொடர்ச்சி)

திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.(லூக்.2:43)
(தொடர்ச்சி)

அனைவருக்கும் அடியேனின் புத்தாண்டு வாழ்த்துக்கள். 

2023ல் ஆரம்பித்த தியானத்தை 2024ல் தொடர்கிறோம்.

ஆண்டு முழுவதும் உணவு வகைகள் மாறினாலும் உண்பது மாறாதது போல,

இறை வசனங்கள் மாறினாலும் தியானம் மாறாது.

"என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா ?"

தந்தையின் இல்லம் எது?

விண்ணுலகில் வாழும் எங்கள் தந்தையே!"

என்று நாம் ஜெபிக்கும்போது, விண்ணகமே தந்தையின் இல்லம் என்று நினைக்கிறோம்.

நாம் நினைப்பது சரிதான்.

விண்ணகம் எங்கே இருக்கிறது?

நாம் இப்போது வாழும் நேரம், இடம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது விண்ணகம்.

Heaven is beyond time and space.

நேரம், இடம் ஆகியவற்றுக்கு உட்பட்டு வாழும் நாம்,

நாம் வாழும் இல்லத்தைப் போல நமது தந்தையின் இல்லத்தைக் கற்பனை செய்து விடக் கூடாது.

கடவுள் எங்கும் இருக்கிறார்.

மனித மொழியில் 'எங்கும்' என்ற வார்த்தை எல்லா இடங்களிலும் என்று பொருள்படும்.

ஆனால் கடவுள் இடத்துக்கு அப்பாற்பட்டவர்.

'இருக்கிறார்' என்ற வார்த்தை நிகழ்காலத்தைக் குறிக்கும்.

ஆனால் கடவுள் காலத்திற்கு அப்பாற்பட்டவர். நித்தியர்.

அப்படியானால் கடவுள் எப்படி எங்கும் இருக்கிறார்?

தனது பண்புகளால் எங்கும் இருக்கிறார்.

God is everywhere by His attributes.


சர்வ வல்லமை, அளவற்ற ஞானம்,
அளவு கடந்த அன்பு ஆகியவை கடவுளின் முக்கிய பண்புகள்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் 6000 மைல்களுக்கு அப்பால் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆறாவது ஜார்ஜ் மன்னர் இந்தியாவை ஆட்சி செய்தார்.

அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு இந்தியர்கள் வாழ்ந்தார்கள்.

அதிகாரம் அவரது பண்பு. அவரது அதிகாரம் இந்தியாவை ஆட்சி செய்தது.

சுதந்திர இந்தியாவை ஆள்பவர் யார்?

டில்லியில் இருக்கும் இந்தியாவின் பிரதமர்.

பிரதமரின் அதிகாரம் தான் இந்தியாவை ஆள்கிறது.

கடவுளின் பண்புகளுக்கும் மனிதர்களின் பண்புகளுக்கும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.

நம்மிடம் அன்பு இருக்கிறது.

ஆனால் கடவுள் அன்புமயமானவர்.
அன்பே கடவுள்.

கடவுள் வல்லமை மயமானவர்.
வல்லமையே கடவுள்-

கடவுள் ஞான மயமானவர்.
ஞானமே கடவுள்.

இந்த பண்புகள் வாழ இடம் தேவையில்லை.

வல்லமை மயமான கடவுள் தனது வல்லமையால் அனைத்தையும் படைத்தார்.

அவர் படைத்த அனைவரையும் அன்பு செய்கிறார்.

அனைத்தையும் அவர் அறிகிறார்.

மனிதன் இடத்தை அடைத்துக் கொண்டு வாழ்கிறான்.

 Man occupies space.

ஒரு இடத்தில் இருக்கும் மனிதன் அதே நேரத்தில் இன்னொரு இடத்தில் இருக்க முடியாது.

 ஒருவன் இருக்கும் இடத்தில் இன்னொருவன் இருக்க முடியாது.

ஆனால் கடவுளுக்கு இடமும் தேவையில்லை, நேரமும் தேவையில்லை. அவற்றுக்கு அப்பாற்பட்டவர்.

இடத்தில் வாழும் மனிதனிடம் அவர் அன்பால் வாழ்கிறார்,

வல்லமையால் வாழ்கிறார்,

ஞானத்தினால் வாழ்கிறார்.

அவரால் படைக்கப்பட்ட அனைத்தும் அவருடைய வல்லமையாலும், அன்பினாலும், ஞானத்தினாலும் இயங்குகின்றன.

ஒரு அணு கூட அவருடைய வல்லமையால் தான் இயங்குகிறது.

அவரின்றி அணுவும் அசையாது.

இப்போது தந்தையின் இல்லம் எங்கே இருக்கிறது விடை கேள்விக்கு விடை தெரிந்திருக்கும்.

கடவுள் தன்னுடைய வல்லமையாலும், அன்பினாலும், ஞானத்தினாலும் எங்கெல்லாம் வாழ்கிறாரோ அங்கெல்லாம் கடவுளின் இல்லம் இருக்கிறது.

அவருடைய வல்லமையாலும், அன்பினாலும், ஞானத்தினாலும்தான் நாம் வாழ்கிறோம்.

ஆகவேதான் நாமும் கடவுள் வாழும் இல்லம்தான்.

சர்வ வல்லமை வாய்ந்த, 
அளவற்ற ஞானமுள்ள,
அளவற்ற அன்புள்ள கடவுள் 

நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அன்புள்ள என்ற வார்த்தையை அன்பு மயமான என்று புரிந்து கொள்ள வேண்டும். 

அளவு கடந்த வல்லமையும்,
அளவு கடந்த ஞானமும்,
அளவு கடந்த அன்பும்

நமக்குள் இருப்பதால்

எப்போதும் கடவுள் நம்முடன் இருக்கிறார்,

 நாம் கடவுளோடு இருக்கிறோம் என்ற உணர்வோடு வாழ வேண்டும்.

நம்மை ஆளும் மன்னர் நமது வீட்டில் நம்மோடு இருந்தால் அவருக்கு எதிராக நாம் செயல்படுவோமா?

நம்மை ஆளும் கடவுள் நமக்குள் இருப்பதை உணர்ந்து வாழ்ந்தால் நாம் அவருக்கு எதிராக செயல்படுவோமா?

அதாவது, பாவம் செய்வோமா? 

நிச்சயமாக மாட்டோம்.

கடவுள் நமக்குள் இருக்கிறார் என்ற உணர்வோடு வாழ்ந்தால்,

நாம் அவருக்காகவே வாழ்வோம்.

கடவுள் நம்மோடும், 
நாம் அவரோடும் வாழ்வதுதான் ஆன்மீக வாழ்வு.

நாம் கடவுள் வாழும் இல்லம் என்ற உணர்வு நமக்கு மோட்ச வாழ்வின் முன் ருசியைக் (Pretaste) கொடுக்கிறது.

தாயின் மடியில் வாழும் குழந்தையைப் போல நாம் விண்ணகத் தந்தையின் மடியில் வாழ்கிறோம்.

இறைமகன் மனுமகனாக உலகில் பிறந்தது நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, நம்மோடு வாழ்ந்து நம்மை விண்ணக வாழ்வுக்கு அழைத்துச் செல்வதற்காகத் தான்.

இந்த ஆன்மீக உணர்வு இந்த ஆண்டு மட்டுமல்ல, வருகின்ற எல்லா ஆண்டுகளிலும் நம்மோடு இருக்க வேண்டும்.

",இயேசுவே, நீர் தந்தையுள்ளும் தந்தை உம்முள்ளும் வாழ்வது போல,

என்னுள் வாழும் உம்முள் நான் வாழ்கிறேன்.

எப்போதும் என்னை உமது அரவணைப்பில் வைத்துக் கொள்ளும். 

ஆமென்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment