(லூக்.1:58)
வயதான காலத்தில் எலிசபெத்தம்மாளுக்கு குழந்தை பிறந்ததை கேள்விப்பட்ட அவளது அயலாரும் உறவினரும்
அவளுக்கு ஆண்டவர் மிகுந்த இரக்கம் காட்டியதை எண்ணி அவளோடு மகிழ்ந்தனர்.
அவளது மகிழ்ச்சியில் அவர்களும் பங்கு கொண்டனர்.
இந்த வசனத்தை வாசித்த போது எனக்கு மற்றொரு இறை வசனம் ஞாபகத்துக்கு வந்தது.
"மகிழ்வாரோடு மகிழுங்கள்: அழுவாரோடு அழுங்கள்."
(உரோமை.12:15)
மகிழ்வாரோடு மகிழ்ந்தால் மகிழ்பவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
எலிசபெத்தம்மாளின் மகிழ்ச்சியும் இரட்டிப்பு ஆகி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அழுவாதோடு அழுதால் அழுபவர்களின் வேதனை பாதி குறையும்.
இந்த வசனம் ஞாபகத்திற்கு வரும்போது அதோடு கிறிஸ்மஸ் திருவிழாவின் கொண்டாட்டம் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.
இந்த வசனத்திற்கும் கிறிஸ்மஸ் திருவிழாவின் கொண்டாட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?
இயேசு கிறிஸ்து பிறந்த அன்று வான தூதர்கள் தோன்றி ஆடுகளுக்கு சாம காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களை நோக்கி,
'' அஞ்சாதீர், இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா"
என்று கூறினர்.
ஆக கிறிஸ்துமஸ் திருவிழா நமக்கு மகிழ்ச்சியூட்டும் திருவிழா.
நாம் விழா கொண்டாட்டத்தைப் பற்றி மட்டும் மகிழாமல்,
மீட்பரின் பிறப்பை நினைத்து மகிழ்ந்தால்,
அந்த மகிழ்ச்சி விண்ணக வாசிகளிடையே பல மடங்கு பெருகிப் பொங்கும்.
ஒரு திருமண விழாவுக்குச் செல்பவர்களில் பெரும்பாலானோர் திருமண தம்பதிகளின் அழகைப் பற்றியோ, பொருத்தத்தைப் பற்றியோ கவலைப்படுவதில்லை.
திருமண விருந்து ருசியாக இருந்தால் திருமண விழா நன்றாக இருந்தது என்று சொல்வார்கள்.
விருந்து மோசமாக இருந்தால் விழாவைப் பற்றியும் குறைவாகவே மதிப்பிடுவார்கள்.
கிறிஸ்மஸ் விழாவின் கதாநாயகன் குழந்தை இயேசு.
விழாவைப் பற்றிய உணர்வுகள் குழந்தை இயேசுவையே மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
விழாவை முன்னிட்டு டிசம்பர் முதல் தேதியே தொங்க விடப்படும் கிறிஸ்மஸ் ஸ்டார்,
கிறிஸ்மஸ்காக நாம் எடுக்கும் புதிய ஆடைகள்,
கிறிஸ்மஸ் குடில்,
நள்ளிரவு கொண்டாட்டம்,
கிறிஸ்மஸ் விருந்து
ஆகியவற்றையே நமது விழா மையமாகக் கொண்டிருந்தால்,
அதாவது,
இயேசு பாலனைப் பற்றியே நாம் சிந்திக்காதிருந்தால்
நாம் கொண்டாடுவது கிறிஸ்மஸ் விழாவாக இருக்காது, வெறும் விழாவாகவே இருக்கும்.
இயேசு பாலனைப் பற்றி சிந்திக்காமல் எப்படி விழா கொண்டாட முடியும் என்று கேட்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை பிரசங்கம் முடிந்தவுடன் திருப்பலிக்கு வந்து,
நற்கருணை வாங்கியவுடன் வீட்டுக்கு செல்பவர்கள்
தாங்கள் ஞாயிறு திருப்பலிக்குச் சென்று வந்ததாகக் கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
கிறிஸ்மஸ் விழாவின் மைய கருத்தைப் பற்றி கவலைப்படாமல் வெளியரங்க விழாவை மட்டும் விமரிசையாகக் கொண்டாடுபவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.
விழாவின் மைய கருத்துதான் என்ன?
அன்னை மரியாள் இயேசுவைப் பெற்று எடுப்பதற்கு சத்திரத்தில் கூட இடம் கிடைக்கவில்லை.
மாடுகள் அடையும் தொழு மட்டுமே கிடைத்தது.
பிறந்த இயேசுவை படுக்க வைக்க தொட்டில் கட்ட கூட வசதி இல்லை.
மாடுகளின் தீவனத் தொட்டியில் வைக்கோல் படுக்கையின் மேல் தான் இயேசு பாலன் படுத்திருந்தார்.
இயேசு பாலனுக்கு புது உடை எதுவும் மரியாள் வாங்கி வரவில்லை.
கந்தல் துணிகளைக் கொண்டே அவரைப் போர்த்தியிருந்தாள்..
மார்கழிப் பனியில் அவரது உடல் நடுங்கி கொண்டிருந்தது.
உலகைப் படைத்த கடவுள் ஒன்றுமில்லாத நிலையில் மனிதனாகப் பிறந்திருக்கிறார்.
கந்தல் துணிகளைப் போர்த்திக் கொண்டு,
தீவனத் தொட்டியில் படுத்திருக்கும் இயேசு பாலனைப் பார்க்க
நாம் Tip top புத்தாடை அணிந்து செல்கிறோம்.
ஏழையாகப் பிறந்திருக்கும் இறைவனைக் கண்டு தரிசிக்க பணக்காரத் தன்மையுடன் செல்கிறோம்.
மீட்பர் பிறந்திருப்பது மகிழ்ச்சி தான். அதைப்பற்றி நாம் ஆன்மீக ரீதியில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
ஆனால் அவர் பிறந்திருக்கும் நிலை
மகிழ்ச்சிக்குரியதா?
இயேசுவின் பாடுகளும், மரணமும் நமக்கு மீட்பை பெற்றுத் தந்தன.
நமது ஆன்மா மீட்படைவது குறித்து மகிழ்ச்சி தான்.
ஆனால் அவர்
இரத்த வியர்வை வியர்த்ததையும்,
அடிகள் பட்டதையும், மிதிக்கப்பட்டதையும்,
பாரமான சிலுவையை சுமந்ததையும், சிலுவையின் பாரம் தாங்க முடியாமல் கீழே விழுந்ததையும்,
ஆணிகளால் சிலுவையில் அறையப்பட்டதையும்,
மரணம் அடைந்ததையும் பார்த்து சிரித்து கொண்டிருக்க முடியுமா?
ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் உயிர்ப்பு மகிழ்ச்சிக்குறியது என்றாலும்,
அவரது பாடுகளும், மரணமும் துக்கத்துக்கு உரியவை தானே.
அழுவாறோடு அழவேண்டும், மகிழ்வாரோடு மகிழ வேண்டும்.
இயேசு பாடுகள் பட்ட போது அன்னை மரியாள் அழுதிருப்பாள், நாமும் அழவேண்டும்.
இயேசு உயிர்த்தபோது அவள் மகிழ்ந்திருப்பாள், நாமும் மகிழ வேண்டும்.
கிறிஸ்மஸ் அன்று இயேசு ஏழையாகப் பிறந்தார்.
ஏழைக் கோலத்தில் படுத்திருக்கும் அவரைப் பார்க்க நாமும் ஏழைக் கோலத்தில் தான் செல்ல வேண்டும், ஃ
Tip top உடை அணிந்து அல்ல.
அவர் நமது ஆன்மீக மகிழ்ச்சிக்காகப் பிறந்தார். நாம் அவரது மகிழ்ச்சிக்காக விழா கொண்டாட வேண்டும்.
நமது அயலானுக்கு என்ன செய்கிறோமோ அதை அவருக்கே செய்கிறோம்.
நமக்கு புத்தாடை எடுப்பதை விட நமது அயலானுக்கு எடுத்துக் கொடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நாம் உண்பதை விட நமது அயலானுக்கு உணவு கொடுப்பதையே முக்கியமாகக் கொள்ள வேண்டும்.
நமது அயலான் மகிழ கொண்டாடும் விழா தான் இயேசு பாலன் மகிழ கொண்டாடும் விழா.
கிறிஸ்மஸ் விழாவின் மையம் இறையன்பும், பிறர் அன்பும்,
அதாவது,
இயேசு பாலனும், நமது அயலானும்.
இப்போது கிறிஸ்துமஸ் விழாவிற்காக நம்மையே தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.
இயேசு பாலனையும், நமது அயலானையும் மையமாக வைத்து விழாவிற்காக நம்மை தயாரிப்போம்.
பரிசுத்தமான இதயம் இறையன்புக்கு ஆதாரம்.
பகிர்ந்து கொள்ளுதல் பிறர் அன்புக்கு ஆதாரம்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment