Tuesday, December 26, 2023

கல்லறைக்கு முதலில் வந்த மற்றச் சீடரும் உள்ளே நுழைந்து பார்த்தார்: பார்த்து விசுவசித்தார்.(அரு.20:8)

கல்லறைக்கு முதலில் வந்த மற்றச் சீடரும் உள்ளே நுழைந்து பார்த்தார்: பார்த்து விசுவசித்தார்.
(அரு.20:8)

"மனுமகன் பாடுகள் பல படவும் மூப்பராலும், தலைமைக்குருக்களாலும், மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டுக் கொலையுண்டு, மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டுமென"

இயேசு தனது அப்போஸ்தலர்களிடம் தனது பாடுகளுக்கு முன்பேயே தெரிவித்திருந்தார்.

அவரிடம் வந்த நோயாளிகள் தங்களது விசுவாசத்தாலேயே குணம் பெற்றார்கள்.

ஆனால் அவருடைய அப்போஸ்தலர்களிடம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு விசுவாசம் இல்லை.

இருந்திருந்தால் அவர் மரித்த மூன்றாம் நாள் அவரது வருகையை எதிர்பார்த்து வீட்டிலேயே இருந்திருப்பார்கள்.

மதலேன் மரியாள் சொன்னதைக் கேட்டு இராயப்பரும், அருளப்பரும் இயேசுவின் கல்லறைக்கு வந்திருக்க மாட்டார்கள்.

ஆனாலும் அவர்கள் வந்த விதத்திலிருந்து நாம் ஒரு உண்மையை ஆணித்தரமாக அறிந்து கொள்ள முடிகிறது.

அருளப்பர் இராயப்பரை விட இளையவர்.

ஆகவே இராயப்பரை விட வேகமாக முதலில் கல்லறைக்கு வந்துவிட்டார்.

ஆனாலும் இராயப்பர் வருமுன் அவர் கல்லறைக்குள் செல்லவில்லை.

இராயப்பர் கல்லறைக்குள் நுழைந்த பின்பு தான் அருளப்பர் நுழைந்தார்.

திருச்சபையின் தலைவருக்கு அவர் முதலிடம் கொடுத்தார்.

இராயப்பர் தான் திருச்சபையின் தலைவர் என்ற உண்மையை அருளப்பர் தன்னுடைய செயலால் உறுதிப்படுத்துகிறார்.

 பைபிளிலிருந்து மட்டுமே ஆதாரத்தைத் தேடும் நமது பிரிவினைச் சகோதரர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.


"ஆண்டவரைக் கல்லறையிலிருந்து எடுத்துவிட்டனர்: அவரை எங்கே வைத்தனரோ, அறியோம்" என்று

மதலேன் மரியாள் இராயப்பரிடமும், அருளப்பரிடமும் கூறிய போது,

தான் உயிர்க்கப் போவது பற்றி தங்களிடம் இயேசு கூறியதை. அவர்கள் அவளிடம் சொல்லவில்லை.

மாறாக அவளது பேச்சை நம்பி கல்லறைக்கு ஓடினார்கள்.

மதலேன் மரியாளின் வார்த்தைகளை நம்பிய அளவுக்கு சீடர்கள் இயேசுவின் வார்த்தைகளை நம்ப வில்லை.

நமது விசுவாசத்திற்கு ஆதாரம் வார்த்தையானவரின் வார்த்தைகள் மட்டுமே.

நாம் குழந்தைகளாக இருந்தபோது நமது அம்மா நாம் முன்பின் பார்த்திராத ஒரு ஆளைக் காண்பித்து,

"அப்பா" என்று கூப்பிடு என்றார்கள்.

அவரையே நமது வாழ்நாள் முழுவதும் அப்பாவாக ஏற்றுக் கொண்டு வாழ்கிறோம்.

அம்மாவின் வார்த்தைகளுக்கு விஞ்ஞானப் பூர்வமான ஆதாரத்தைக் கேட்கவில்லை. 

அம்மாவின் வார்த்தைகளுக்கு அம்மா மட்டுமே ஆதாரம்.

இயேசுவால் நிறுவப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபை தான் நமது ஆன்மீகத் தாய்.

கத்தோலிக்கத் திருச்சபையின் போதனை தான் நமது விசுவாசத்துக்கு ஆதாரம்.

கத்தோலிக்கத் திருச்சபை நமக்குத் தந்திருக்கும் பைபிள் தான் உண்மையான பைபிள்.

ஆன்மீக ரீதியாக நம்மை பெற்ற தாய் கத்தோலிக்கத் திருச்சபைதான்.

கத்தோலிக்கத் திருச்சபை காண்பிக்கும் இயேசுதான் மனிதர்களின் பாவங்களை மன்னிக்க மனிதனாகப் பிறந்த இயேசு.

இயேசு மனிதனாக பிறந்தது நோயாளிகளைக் குணமாக்குவதற்காக அல்ல.

நமது பாவங்களை மன்னிக்கவே அவர் பாடுகள் பட்டு மரித்தார்.

நமது பாவங்களை மன்னிக்கவும், திருப்பலி நிறைவேற்றவும் அதிகாரத்தை தான் நிறுவிய கத்தோலிக்க திருச்சபைக்கே இயேசு அளித்தார்.

"யாருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்."

"இதை எனது ஞாபகமாகச் செய்யுங்கள்." 

திருப்பலிதான் கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரப்பூர்வமான ஜெப வழிபாடு.

நமது கத்தோலிக்க திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்றவர்களில் சிலர் நமது திருப்பலியில் கலந்து கொள்வதற்கு காண்பிக்கும் ஆர்வத்தை விட

பிரிவினைச் சகோதரர்களின் சுகமளிக்கும் ஜெப வழிபாட்டில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

அவர்கள் உண்மையான கத்தோலிக்கர்கள் அல்ல, பெயரளவுக்கு மட்டுமே கத்தோலித்தார்கள்.

கத்தோலிக்கத் திருச்சபை தந்திருக்கும் பைபிள் தான் முழுமையான பைபிள்.

கத்தோலிக்கத் திருச்சபையின் போதனை தான் மனு மகனாகப் பிறந்த இறைமகனின் போதனை.

எங்கே பாவ சங்கீர்த்தனமும், திவ்ய நற்கருணையும் இருக்கின்றனவோ

 அங்கேதான் நமது பாவங்களை மன்னிக்க மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு இருக்கிறார்.

நாம் உண்மையான கிறிஸ்தவர்களா அல்லது பெயரளவுக்கு மட்டும் கிறிஸ்தவர்களா என்பதைச் சிந்தித்து அறிவோம்.

கத்தோலிக்கத் திருச்சபையின் உண்மையான பிள்ளைகளாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment