Monday, December 4, 2023

"அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது: தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும் மகனுக்கும்கூடத் தெரியாது."(மாற்.13:32)

"அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது: தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும் மகனுக்கும்கூடத் தெரியாது."
(மாற்.13:32)

இயேசு தனது இரண்டாவது வருகைக்கு முன்னால் நிகழவிருக்கும் நிகழ்வுகளைப் பற்றி கூறிவிட்டு,

"இவையெல்லாம் நடைபெறுவதைக் காணும்பொழுது, அவர் அண்மையிலிருக்கிறார். வாசலிலேயே இருக்கிறார் என்று அறிந்துகொள்ளுங்கள்."

என்று கூறியதோடு,

"அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது: தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும் மகனுக்கும்கூடத் தெரியாது." என்று கூறினார்.

இயேசு இறைமகன், தந்தையோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இருப்பவர்.

கடவுளுக்கு அனைத்தும் தெரியும்.

தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவருக்கும் ஒரே ஞானம்.

அப்படி இருக்க தந்தைக்கு தெரிவது மகனுக்குத் தெரியாது என்று இயேசு ஏன் சொல்கிறார்?

பள்ளிக்கூடத்தில் படித்துக்
 கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது வரும் என்பது முக்கியமல்ல, 

பொதுத் தேர்வு வரும் போது அதை எப்படி எழுதுவது என்பதுதான் முக்கியம்.

 பொது தேர்வுக்காக தங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பாடத்தை மனதில் பதிய வைப்பதில் அக்கறை காட்ட வேண்டுமே தவிர,

முழு நேரமும் தேர்வுக்கான கால அட்டவணையை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது.

கால அட்டவணையை மட்டும் மனப்பாடம் செய்துவிட்டு

 பாடத்தை மனப்பாடம் செய்யாவிட்டால் 

தேர்வு வரும் போது எழுதுவதற்கு தலையில் எதுவும் இருக்காது.

அதே போல் தான் இயேசுவின் இரண்டாவது வருகை எப்போது நடக்கும் என்பதை விட,

இரண்டாவது வருகையின் போது ஆன்மீக ரீதியாக நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

தேர்வுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்து கொண்டிருக்கும் ஆசிரியரிடம் சென்று,

"சார், நான் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன்?" என்று கேட்டால் தெரியாது என்று தான் சொல்வார்.

அவருக்குத் தெரியும். 

ஆனாலும் தலைமை ஆசிரியர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டிய மதிப்பெண்களை தான் அறிவிக்க கூடாது என்பதால், "தெரியாது" என்று சொல்லுவார்.

இயேசுவின் இரண்டாவது வருகையின் போது நமது ஆன்மீக வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல், காலத்தைப் பற்றி மட்டும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால்

வாழ்க்கையின் பயன் நமக்குக் கிடைக்காது.

வாழ்க்கை தான் முக்கியம், காலமல்ல, என்பதை வலியுறுத்துவதற்காக தான்,

காலம் தனக்குத் தெரியாது என்று ஆண்டவர் சொல்கிறார்.

உண்மையில் கடவுளாகிய இயேசு சர்வ ஞானம் உள்ளவர்.

அவருக்கு எல்லாம் தெரியும்.

மனுமகன் எப்போது வந்தாலும் அவரை வரவேற்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார்.


"வீட்டுத்தலைவர் மாலையிலோ நள்ளிரவிலோ கோழி கூவும் பொழுதோ காலையிலோ எப்பொழுது வருவார் என்று உங்களுக்குத் தெரியாது.

 அவர் திடீரென்று வரும்பொழுது நீங்கள் உறங்கிக் கொண்டு இருப்பதைக் காணலாகாது.

 உங்களுக்குக் கூறுவதை நான் எல்லாருக்குமே கூறுகிறேன்: விழிப்பாயிருங்கள்."
(மாற்கு. 13:35-37)

நாம் எப்படி விழிப்பாயிருக்க வேண்டும்?

நாம் ஒவ்வொரு வினாடியும் நமது ஆன்மாவின் பரிசுத்தத்தனத்திலும்,

புண்ணிய வாழ்விலும் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

புண்ணிய வாழ்வு வாழ்கின்ற, பரிசுத்தமான ஆன்மா தான் இயேசு வரும்போது அவரோடு போக முடியும்.

பரிசுத்தமாக வாழ்வது எப்படி?

பாவம் இல்லாத வாழ்வு தான் பரிசுத்தமான வாழ்வு.

ஒரு விவசாயியின் நிலம் நல்ல நிலமாக இருக்க வேண்டுமென்றால் அதில் அவன் பயிர்த் தொழில் செய்ய வேண்டும்.

பயிரிடப்படாத நிலத்தில் களையும் முட் செடிகளும் தான் முளைத்து வளரும்.

பயிரிடப்படும் நிலத்தில் முளைக்கும் களைகள் அவ்வப்போது அப்புறப்படுத்தப்பட்டு விடும்.

முள் செடிகள் முளைக்காது.

அதேபோல ஆன்மீக வாழ்வு வாழ ஆரம்பித்தால் பாவம் உள்ளே நுழையாது.

நல்ல எண்ணங்களை எண்ணி, நல்ல சொற்களைப் பேசி, நற்செயல்களைச் செய்பவன் வாழ்வில் பாவம் நுழையாது.

மனித பலவீனத்தின் காரணமாக பாவம் செய்ய நேர்ந்தால்,

உடனுக்குடன் பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய 
அனுமானத்தின் மூலம் பாவ அழுக்கை அப்புறப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் பல்லை விளக்கி
 சுத்தப்படுத்திவிட்டு,

நல்ல தண்ணீரில் குளித்து உடலைச் சுத்தப்படுத்தி விட்டு சுத்தமான உடை அணிவது போல,

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் உத்தம 
மனஸ்தாபத்தின் மூலம் பாவ
 அழுக்கை நீக்கிவிட்டு,

நற்செய்தியால் மனதை நிரப்பி,

நற்செயல்கள் செய்து வாழ்ந்தால் நமது ஆன்மா பரிசுத்தமானதாகவும் புண்ணியங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.

இயேசு எப்போது வந்தாலும் அவரோடு செல்ல நாம் தயாராக இருப்போம்.

இயேசு எப்போது வருவார் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதை விட 

அவரது வருகைக்காக நம்மை நாமே தயாரிப்பது தான் முக்கியம்.

பாவங்களைத் தவிர்த்து,
புண்ணியங்களைச் செய்து,
பரிசுத்தமாக வாழ்வோம்.

பரிசுத்தர் வரும்போது அவரோடு செல்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment