Wednesday, November 29, 2023

என் பின்னே வாருங்கள்: உங்களை, மனிதரைப் பிடிப்போராக்குவேன்" என்றார்.(மத். 4:19)

'என் பின்னே வாருங்கள்: உங்களை, மனிதரைப் பிடிப்போராக்குவேன்" என்றார்.
(மத். 4:19)

கடவுளின் வழிகள் அற்புதமானவை.

மனித மூளையால் முழுமையாக கண்டுபிடிக்க முடியாதவை.

ஒரு பெரிய படையால் வெல்ல முடியாத,

ஆறு முழம் ஒரு சாண் உயரமுள்ள,

 தலையில் வெண்கலத் தொப்பியும், மீன் செதிலைப் போன்ற ஒரு போர்க்கவசமும் அணிந்திருந்த. 

 கால்களில் வெண்கலக் கவசத்தையும், தோள்களின் மேல் ஒரு வெண்கலக் கேடயத்தையும் அணிந்திருந்த,

 நெசவுக்காரனின் தறிமரம் போன்றிருந்த அறுநூறு சீக்கல் இரும்பாலான  ஈட்டியை வைத்திருந்த 

கோலியாத் என்னும் பிலிஸ்தியர்படை தளபதியை வெல்ல

ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த தாவீது என்ற சிறுவனைக் கடவுள் பயன்படுத்தினார்.

அவன் ஒரு கவணையும், ஓடையில் பொறுக்கிய ஐந்து கூழாங்கற்களையும் பயன்படுத்தி கோலியாத்தைக் கொன்றான்.

கவணையும், கூழாங்கற்களையும் பயன்படுத்தி ஒரு பெரிய படையையே வென்ற தாவீதின் வம்சத்தில் தான் இறைமகன் மனுவுரு எடுத்தார்.

இயேசு கடவுள். சர்வ வல்லமையும், அளவற்ற ஞானமும் உள்ளவர்.

தனது நற்செய்தியை உலகெங்கும் போதிக்க,

 படிப்பறிவில்லாத பாமர சீடர்களையே பயன்படுத்தினார்.

ஒரு நாள் அவர்  கலிலேயாக் கடலோரமாய்  நடந்து செல்லுகையில், இராயப்பர் என்னும் சீமோனும், 

அவர் சகோதரர் பெலவேந்திரருமாகிய இரு சகோதரர்கள்  

கடலில் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

படிப்பறிவில்லாத அவர்கள் வாழ பயன்படுத்திய தொழிலே மீன் பிடித்தல் தான்.


மீன் பிடித்தலையே தொழிலாகக் கொண்ட அவர்களைப் பார்த்து,

 "என் பின்னே வாருங்கள்: உங்களை, மனிதரைப் பிடிப்போராக்குவேன்" என்றார்.

மனிதர்களுக்கு நற்செய்தியை அறிவித்து அவர்களை  இறைவனிடம் கொண்டுவரும் பணிக்காக இயேசு அவர்களை அழைத்தார்.

இன்று 14 ஆண்டுகள் தேவ சாஸ்திரமும், தத்துவ சாஸ்திரமும் பயின்ற பின்பு தான் ஒருவர் குருவானவர் ஆக முடியும்.

ஆனால் இயேசு பள்ளி கூட வாசமே பட்டறியாத சீமோனுக்கு இராயப்பர் என்று பெயரிட்டு 

அவரைத் தனது திருச்சபைக்கு தலைவராக நியமித்தார்.

அவர்கள் மீன் பிடித்தது உலக வாழ்க்கைக்கான தொழில்.

உண்ண உணவும், உடுந்த உடையும், உறங்க உறைவிடமும் கிடைப்பதற்காக செய்த தொழில்.

அவர்களை  ஆன்மீக அர்ப்பண வாழ்வுக்காக இயேசு அழைத்தார்.

உடனே அவர்களும் வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.

தங்கள் குடும்பத்தினருக்கு உணவும் உடையும் எப்படி அளிப்பது என்பதைப் பற்றி அவர்கள்  சிந்தித்துப் பார்க்கவில்லை.

இயேசு அழைத்தார். அவரைப் பின் சென்றார்கள்.

அருளப்பரும், யாகப்பருங்கூட  மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் தான்.

அவர்களையும் இயேசு அழைத்தார்.

உடனே அவர்கள் தம் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.

இயேசு அழைத்தவுடன் உலகத்தை விட்டு விட்டு அவரைப் பின்பற்றுபவர்கள் தான் அவருடைய சீடர்களாக வாழ முடியும்.

நாம் எப்படி?

உலகில் வாழ்வது உண்மைதான்.
உணவும், உடையும், உறைவிடமும் நமக்குத் தேவை என்பதும் உண்மைதான்.

ஆனால் அவற்றுக்காக வாழ வேண்டும் என்பது உண்மையல்ல.

உணவுக்காக வாழ்வது வேறு, வாழ்வதற்காக உண்பது வேறு.

அதேபோல்தான் உடைக்காக வாழ்வது வேறு, வாழ்வதற்காக உடுப்பது வேறு. 

நாம் உலகில் வாழ்வது உலகிற்காக அல்ல,

விண்ணகம் செல்லும் வரை வாழ்வதற்காகவே உலகம்.

இந்த உலகை விட்டு விட்டு தான் நாம் விண்ணகம் செல்ல வேண்டும்.

நாம் என்ன செய்தாலும் அது விண்ணகத்தையே நோக்கமாக கொண்டதாக இருக்க வேண்டும்.

இயேசுவும் உண்டார், உடுத்தினார், உறங்கினார்,

ஆனால் அதுவெல்லாம் நமக்காக.

நமக்கு நற்செய்தியைப் போதிப்பதற்காக.

நமக்காக பாடுகள் பட்டு மரிப்பதற்காக.

உருவமற்ற கடவுள் மனித உருவம் எடுத்தது நமது உடலை மீட்பதற்காக அல்ல, ஆன்மாவை மீட்பதற்காக.

நாம் உடலோடு வாழ்வது உடல் நலனுக்காக அல்ல ஆன்மாவின் நலனுக்காக.

நாம்  நமது உடலைப் பேணுவதே ஆன்மாவுக்காகத்தான்.

ஒரு வண்டியின் சக்கரங்கள் உருள்வது உருள வேண்டும் என்பதற்காக அல்ல,

 வண்டி நகர வேண்டும் என்பதற்காக.

இயேசு நம்மை அழைக்கிறார்.

நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின் செல்ல வேண்டும்.

எல்லாவற்றையும் எப்படி விடுவது?

நமது உறவுகளின், நாம் பயன்படுத்தும் பொருட்களின் உலக பயன்பாட்டை விட்டுவிட்டு

 அவற்றை இறைவனுக்காக பயன்படுத்த புறப்பட வேண்டும்.

இறை பணி செய்து வாழ்வதற்காக உண்ண வேண்டும்.

நாம் செய்யும் இறை பணிக்கு ஏற்ற உடை அணிய வேண்டும்.

அதனால் தான் நமது குருக்கள் இயேசு ஆண்டவர் உடுத்தது போன்ற உடுப்பை உடையாக அணிகிறார்கள்.

ஒரு காலம் இருந்தது, அப்போது குருக்களை குருத்துவ உடையில் மட்டுமே பார்க்க முடியும்.

உடையில் குருத்துவம் இல்லை, ஆனால் உடை குருத்துவத்தின் அடையாளமாக இருந்தது.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.

நடக்க முடியாத வயதானவர்கள், ஓடியாடி விளையாடிய இளமைப் பருவத்தை நினைத்துப் பார்ப்பது போல

நான் பழைய காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

காலம் மாறும்.

விண்ணக வாழ்வுக்காக உலகில் வாழ்வோம்.

நாம் ஈட்டும் செல்வத்தை விண்ணக வாழ்வுக்கு மக்களை அழைத்துச் செல்வதற்காகப் பயன்படுத்துவோம்.

ஆன்மீக வாழ்வு வாழ தைரியம் கிடைப்பதற்காக உண்போம்.

நாம்  யாருக்காக வாழ்கிறோம் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்வதற்காக நமது நடை, உடை, பாவனைகள் இருக்க வேண்டும்.

மற்றவர்களை ஆன்மீகத்தில் வாழ வைப்பதற்காக நாம் வாழ்வோம்.

இயேசு நம்மை அழைக்கின்றார் மனிதர்களைப் பிடிப்பதற்காக.

மனிதர்களைப் பிடித்து இயேசுவிடம் அழைத்து வருவோம்.

நாம் வாழ்வதே அதற்காகத்தான்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment