Friday, November 17, 2023

தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் நீதிவழங்காமல் இருப்பாரோ ?(லூக்.18:7)

தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் நீதிவழங்காமல் இருப்பாரோ ?
(லூக்.18:7)

பள்ளிக்கூடத்தில் அகில இந்திய சுற்றுப்பயணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

சுற்று பயணத்தில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் ஒரு வாரத்துக்குள் தங்கள் பெயர்களைக் கொடுப்பதோடு பயண சம்பந்தப்பட்ட சகல செலவுகளுக்காகவும் ரூபாய் 5000 கொடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் அறிவித்தார்.

ஒரு மாணவன் தன் தந்தையிடம் இதைத் தெரிவித்தான்.

"நமது பொருளாதார நிலையில் இத்தகைய பயணங்களில் கலந்து கொள்வது இயலாத காரியம்" என்று தந்தை கூறிவிட்டார்.

ஆனால் மாணவன் விடவில்லை.

ஏழு நாட்களும் ஓயாமல் தந்தையின்  கையைப் பிடித்துக் கொண்டு "Please, Appa'' என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டே இருந்தான்.

ஏழாவது நாள் தந்தை மனமிரங்கி யாரிடமிருந்தோ ரூபா,ய் 5000 கடன் வாங்கி மகனிடம் கொடுத்தார்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்." என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

அதன் அடிப்படையில் ஒரு பக்தன்  ஞாயிறு திருப்பலியின் போது இயேசுவிடம் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிறான்.

அதன்பின் தொடர்ந்து ஆறு நாட்களும் தான் கேட்ட உதவி கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தான், ஆனால் கிடைக்கவில்லை.

ஆறாவது நாள் பைபிள் வாசிக்கும் போது,

கடவுளுக்கு அஞ்சாத, மனிதனையும் மதிக்காத நடுவன் ஒருவனிடம் கைம்பெண் ஒருத்தி நீதி கேட்ட உவமையை வாசித்தான்.

நெடு நாள் நீதி வழங்காத நடுவன், கைம்பெண்ணின் தொந்தரவை தாங்க மாட்டாமல் நீதி வழங்கினான்.

இயேசு உவமையைக் சொன்ன பின்,

''தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் நீதிவழங்காமல் இருப்பாரோ ?

 அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரோ?

 விரைவிலேயே அவர்களுக்கு நீதி வழங்குவார் என உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

நாம் கடவுளிடம் என்ன உதவியைத் கேட்டாலும் அதைத் திரும்பத் திரும்ப கேட்க வேண்டும்.

நாம் கடவுளிடம் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

நாம் கேட்பதைக் கேட்டவுடன் கடவுள் தராமலிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

நாம் தொடர்ந்து விடாமல் கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம்.

உலகியலில் கூட ஒரு காதலன் தன் காதலிக்கு phone செய்யும்போது அவள் உடனே எடுப்பதில்லை.

அவன் அவளுக்கு அடிக்கடி phone செய்ய வேண்டும் என்று அவள் விரும்புவதே அதற்குக் காரணம்.

Call களின் எண்ணிக்கையை வைத்து அவனுடைய காதலின் ஆழத்தை அவள் அளந்து விடுவாள்.

"இயேசுவே என்மேல் இரக்கமாயிரும்" என்பது ஒரு சிறு மனவல்லப ஜெபம்.

ஒருமுறை சொல்ல சில வினாடிகளே ஆகும்.

இதே ஜெபத்தை நாம் எப்போதும் சொல்லிக் கொண்டேயிருந்தால் அதன் பலன் மிகவும் மகத்தானது. 

இயேசுவுக்கும் நமக்கும் உள்ள அன்பின் ஆழத்தையும்  நெருக்கத்தையும் அது அதிகரிக்கும்.

பாவ எண்ணங்கள் நம்மை நெருங்காது.

இயேசு எப்போதும் நமது எண்ணத்தில் இருந்தால் சாத்தான் நம்மைப் பற்றி நினைத்துக் கூட பார்க்காது.

இந்த சந்தர்ப்பத்தில் வேறொரு உண்மை நமது மனதில் இருக்க வேண்டும்.

இயேசு நமது ஆன்மீகத் தலைவர், அரசியல் தலைவர் அல்ல.

இயேசுவுக்கும் நமக்கும் உள்ள உறவு முழுக்க முழுக்க ஆன்மீக உறவு.

ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள உறவு கல்வி சம்பந்தமானது.

வகுப்பில் மாணவர்கள் கல்வி நோக்குடன்தான் ஆசிரியர் முன் அமர்ந்திருக்கிறார்கள்.

"ஏதாவது சந்தேகமிருந்தால் கேளுங்கள்" என்று ஆசிரியர் சொன்னால், மாணவர்கள் கேட்கும் சந்தேகம் பாடம் சம்பந்தப்பட்டதாய் இருக்க வேண்டும்.

ஆங்கில ஆசிரியரிடம் போய்,

"ரஷ்யா ஏன் உக்ரேன் மீது போர் தொடுத்தது" என்று கேட்கக் கூடாது.

அது வரலாற்று ஆசிரியரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி.

இயேசு நமது ஆன்மீக மீட்பர்.

ஆகவே அவரிடம் நாம் கேட்க வேண்டிய உதவி நமது ஆன்மாவின் மீட்பு சம்பந்தப்பட்டதாய் இருக்க வேண்டும்.

நம்மை இயேசு இப்போது உலகில் தானே வாழ வைத்திருக்கிறார். இப்போது உலக சம்பந்தப்பட்ட உதவிகளை கேட்க கூடாதா?
 
கேட்கலாம். முதலில் உலகியலை ஆன்மீகமாக மாற்றி உதவியைக் கேட்கலாம்.

உலகியலை எப்படி ஆன்மீகமாக மாற்றுவது?

நாம் ஒரு பல சரக்குக் கடையில் வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

நமக்கு சம்பள உயர்வு பெற்றுத் தர வேண்டும் என்று இயேசுவிடம் வேண்டுகிறோம்.

நமது சம்பளம் உலகியலைச் சேர்ந்தது.

அதன் ஒரு பகுதியை ஏழைகளுக்கு உதவியாகக் கொடுக்க ஒதுக்கி வைத்தால் அதுவே ஆன்மீகமாக மாறி விடுகிறது.

ரயிலில் பயணிப்பது உலகியல்.
அதே ரயிலில் திருயாத்திரையாக வேளாங்கண்ணிக்குப் பயணிப்பது ஆன்மீகம்.

சாப்பிடுவதும், சாப்பிடாமல் இருப்பதும் உடலியல்.

ஆனால் திருச்சபையின் கட்டளைகளுக்கு இணங்க பெரிய வெள்ளிக்கிழமை அன்று தாவர உணவு மட்டும் சாப்பிடுவதும்,

ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகியவற்றைச் சாப்பிடாமலிருப்பதும் ஆன்மீகம்.

உலக சம்பந்தப்பட்ட உதவிகளை முதலில் ஆன்மீக மயமாக்கி, ஆன்மீக நோக்கத்திற்காக அவற்றைக் கேட்பது ஆன்மீகம்.

ஒரு குருவானவருக்குச் சுகம் இல்லை. சுகம் இல்லாமல் இருப்பது உடலியல்.

ஆனால் அதனால் அவரது ஆன்மீகப் பணி பாதிக்கப்படுகிறது.

''இயேசுவே, நான் செய்ய வேண்டிய ஆன்மீகப் பணிகளை ஒழுங்காகச் செய்வதற்காக எனக்கு உடல் நலத்தைத் தாரும்.'' என்று ஜெபிக்க வேண்டும்.

நாம் என்ன உதவி கேட்டாலும் அது நமது ஆன்மாவுக்கு உதவிகரமாக இருந்தால் தான் இயேசு அந்த உதவியைத் தருவார்.

நாம் கேட்கும் உதவியை அவர் தராவிட்டால் அது நமது ஆன்மாவுக்கு ஏற்றது அல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆன்மீக உதவிகளைக் கேட்போம்.
திரும்பத் திரும்ப கேட்போம்.

தந்தாலும் நன்றி கூறுவோம்.
தராவிட்டாலும் நன்றி கூறுவோம்.

உதவி கேட்பதை நிறுத்தக்கூடாது,

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment