Thursday, November 2, 2023

நீ முதலிடத்தில் அமராதே..(லூக்.14:8)

    நீ முதலிடத்தில் அமராதே..
(லூக்.14:8)

தலையான பாவங்களுள் முதன்மையானது கர்வம், அதாவது, தற்பெருமை.

 தான்தான் மற்ற எல்லோரையும் விட பெரியவன், தனக்கு மிஞ்சியவர்கள் யாரும் கிடையாது என்று எண்ணுவது தற்பெருமை.

படிக்கிற காலங்களில் எல்லா பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றிருக்கலாம்.

ஓடிய ஓட்டப் பந்தயங்களில் எல்லாம் முதலாக வந்து வெற்றிவாகை சூடியிருக்கலாம்.

பார்ப்போரது கண்களைக் கவர்ந்திழுக்கும் அழகைப் பெற்றிருக்கலாம்.

லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் வேலையில் இருக்கலாம்.

கோடிக்கணக்கில் பணம் புறளும் தொழிற்சாலையின் அதிபராக இருக்கலாம்.

இவையெல்லாம் நாம் பெருமைப்படுவதற்கு உரிய காரணங்கள் அல்ல.

ஏனெனில் இவற்றிற்கெல்லாம் உரிமை கொண்டாடும் நாமே நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல.

நாம் அனுபவிக்கும் வரங்கள் எல்லாம் இறைவன் நமக்குத் தந்தவை. அதற்காக அவருக்கு தாழ்ச்சியுடன் நன்றி கூற வேண்டுமே தவிர நாம் நம்மைப் பற்றிப் பெருமையாக எண்ணிக்கொள்ள கூடாது.

ஒவ்வொரு வினாடியும் நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் கடவுள் தனது கைகளை அகற்றினால், நாம் இல்லை.

ஐரோப்பா முழுவதையும் கட்டி ஆண்ட மாவீரன் நெப்போலியனை எங்கே?

நமக்குச் சொந்தமில்லாத ஒன்றைப் பற்றி நாம் பெருமைப்பட்டால் நம்மை போல் முட்டாள்கள் இல்லை.

அகில உலகையும் படைத்த சர்வ வல்லப கடவுள் தான் படைத்த உலகிலேயே மனிதனாய்ப் பிறப்பதற்கு தேர்ந்தெடுத்தது

 மாடுகள் அடையும் மாட்டுத் தொழுவம்.

ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த கடவுள்,

தான் 30 ஆண்டுகள் தனது பெற்றோருடன் சாப்பிட்டு வாழ தேர்ந்தெடுத்தது தச்சுத் தொழில்.

நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இருக்க வல்லமை வாய்ந்த கடவுள் 

3 ஆண்டுகள் கலிலேயாவிலும், யூதேயாவிலும் நற்செய்தி அறிவிக்கப் பயணம் செய்தது கால் நடையாக.

இதையெல்லாம் அவர் செய்தது எதற்காக?

நமக்கு முன்மாதிரிகை காண்பிப்பதற்காக.

சுயமாக நாம் ஒன்றுமில்லாதவர்கள் என்பதை உணர்வோம்.

கடவுள் உதவி இல்லாவிட்டால் நம்மால் ஒரு வினாடி கூட உயிர் வாழ முடியாது என்பதை உணர்ந்தால் நாம் நம்மை பற்றி பெருமையாக நினைக்க மாட்டோம்.

கோடிக்கணக்கில் வரவு செலவு வைத்திருக்கும் வங்கியில் பணி புரிபவர்களுக்கு வங்கிப் பணத்தில் ஒரு பைசா கூட சொந்தம் இல்லை.

நாம்  உலகையே கட்டி ஆண்டாலும் உலகின் ஒரு அணுகூட நமக்குச் சொந்தமில்லை.

மண்ணில் விளையும் அத்தனை உணவுப் பொருட்களையும் உண்டு கொழுத்து வாழ்பவன் உடல் ஒருநாள் அந்த மண்ணுக்கு உணவாகும்.

இந்த உண்மைகளை எல்லாம் சிந்திப்போம்.

தற்பெருமை கொள்வதைக் கைவிடுவோம்.

அன்னை மரியாளைப் போல தாழ்ச்சியுடன் இறைவனின் அடிமையாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment