சில நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் ஒரு சில நூறு மடங்கு, வேறு சில அறுபது மடங்கு, இன்னும் சில முப்பது மடங்கு பலன் கொடுத்தன.
( மத்.13:8)
விவசாயம் செய்பவர்களுக்கு விதை விதைப்பவன் விதைக்கச் சென்ற உவமையின் கருத்து நன்கு புரியும்.
விதை தரமானதாக இருந்தாலும் அது விழும் நிலம் தரமானதாக இருந்தால்தான் முளைத்து வளர்ந்து பலன் தரும்.
விவசாயி விதைப்பதற்கு முன்னால் நிலத்தை முதலில் பண்படுத்துவான்.
அதில் கிடக்கும் கற்கள், முள் செடிகள், களைச் செடிகள் போன்றவற்றை அப்புறப்படுத்துவான்.
அதன் பின் நிலமெங்கும் இயற்கை எருவை பரப்புவான். (மாட்டுச் சாணத்திலிருந்து கிடைக்கும் எரு.)
பிறகு நிலத்தை நன்கு உழுது,
மண்ணை விதையிலிருந்து வெளிவரும் வேர்கள் ஊன்றி வளர்வதற்கு ஏற்றதாக மாற்றுவான்.
அதன் பின்பு தரமான விதையை அங்கு விதைப்பான.
மழை பெய்யும் போதோ அல்லது வாய்க்காலிலிருந்து நீர் பாய்ச்சும் போதோ தண்ணீர் எங்கும் பரந்து செல்வதற்காக நிலத்தை சமப்படுத்துவான்.
விதைகள் முளைத்து வளரும் போது அவற்றோடு முளைக்கும் களைகளை களைகொத்தி கொண்டு அப்புறப்படுத்துவான்.
அடிக்கடி எருவைத் தூவி தேவையான போதெல்லாம் நீர்ப் பாய்ச்சுவான்.
பயிர் நன்கு வளர்ந்து மிகுந்த பலன்தரும்.
இயேசு கூறிய உவமையின் வழியே ஆன்மீகத்துக்குள் நுழைவோம்.
நிலம் நமது உள்ளம்.
விதை இறை வார்த்தை.
காலையில் எழுந்தவுடன் வேதாகமத்தை வாசிக்கிறோம்.
கோவிலுக்குத் திருப்பலியில் கலந்து வழிபாடு செய்யும்போது குருவானவர் வைக்கும் பிரசங்கத்தைக் கேட்கிறோம்.
நாம் வேதாகமத்தை வாசிக்கும் போதும், குருவானவரின் பிரசங்கத்தைக் கேட்கும் போதும் இறை வார்த்தையாகிய விதை நமது உள்ளத்தில் விதைக்கப்படுகிறது.
நமது உள்ளம் எப்படி இருந்தால் விதை முளைத்து வளர்ந்து பலன் தரும்?
நமது உள்ளத்தில் கற்கள், முள் செடிகள் ஆகியவற்றைப் போன்ற எண்ணங்கள், அதாவது இறை வார்த்தைக்குப் பொருந்தாத எண்ணங்கள் நமது உள்ளத்தில் இருந்தால்.
நமது உள்ளம் இறை வார்த்தை முளைக்க தகுதியற்றது.
காலையில் வேதாகமத்தை வாசிக்கும் போது நமது உள்ளம் விளையாட்டு மைதானத்தில் இருந்தால்,
இறைவார்த்தை நமது உள்ளத்தில் விழாது.
குருவானவரின் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது நமது உள்ளம் பூசை முடிந்த பின் போக வேண்டிய கசாப்புக் கடையிலும், நண்பகலில் சாப்பிட வேண்டிய பிரியாணியிலும்,
T.V.யில் பார்க்க வேண்டிய கிரிக்கெட் உலகக் கோப்பை விளையாட்டிலும் இருந்தால்
குருவானவரின் பிரசங்கம் காதில் விழுந்து, வழுக்கி வெளியே விழுந்து விடும், நமது உள்ளத்துக்குள் போகாது.
உள்ளத்துக்குள் போகாத விதை எப்படி அங்கு முளைக்கும்?
அப்படியே போனாலும் இறை வார்த்தைக்கு எதிரான எண்ணங்கள் மத்தியில் விழுந்து அது பலன் தராது.
பூசை முடிந்தவுடன் ஒரு நண்பர் சொல்கிறார்,
"சுவாமியார் பிரசங்கத்தை மிகவும் நீட்டி விட்டார். எட்டு மணிக்கு ஆரம்பித்த பூசை பத்து மணிக்கு முடிந்திருக்கிறது. இனி கசாப்பு கடைக்குப் போனாலும் நல்ல கறி கிடைக்காது."
உடல் கோவிலிலும், உள்ளம் கோவிலுக்கு வெளியிலும் இருந்தால் இறை வார்த்தை விதை விழுந்தாலும் அது முளைக்காது.
அதற்கு சம்பந்தம் இல்லாத எண்ணங்கள் அதை அமுக்கி விடும்.
நமது உள்ளம் இறைவனோடு ஒன்றித்து இருந்தால்தான் அவரது வார்த்தை நம் உள்ளத்தில் பதியும்.
இறை வார்த்தை நமது உள்ளத்தில் பதிந்தால் தான் அது நமது சொல்லிலும், செயலிலும் வெளிப்பட்டு
நமது ஆன்மீக வாழ்க்கையை வளப்படுத்தும்.
நமது உள்ளமாகிய நிலத்தில் பாவ ஆசைகளாகிய முள்செடிகள் இருக்கக் கூடாது.
ஏனெனில் அவற்றினிடையே விழுந்த இறை வார்த்தையால் நமக்கு எந்த பயனும் இல்லை.
இறை வார்த்தையைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் நமது உள்ளத்தில் எப்போதும் இருக்க வேண்டும்.
பசியோடு இருந்தால்தான் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகும்.
உண்மையான ஆவலுடன் இறைவாதத்தையைக் கேட்டால் தான் அதன் பொருள் நமக்கு புரியும்.
அதன்படி வாழ ஆவல் பிறக்கும்.
விவசாயி தனது நிலத்தைப் பண்படுத்தி விட்டு விதைப்பது போல,
நாமும் நமது உள்ளமாகிய நிலத்தை பயன்படுத்திவிட்டு இறைவார்த்தையைக் கேட்டுப் பயன்பெறுவோம்.
. லூர்து செல்வம்.
No comments:
Post a Comment