Friday, November 10, 2023

"எந்த வேலைக்காரனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது." (லூக்.16:13)

"எந்த வேலைக்காரனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது." (லூக்.16:13)

ஒருவன் ஒரே நேரத்தில் எதிர் எதிர் திசைகளை நோக்கி நடக்க முடியுமா?

கிழக்கு நோக்கி நடப்பவன் அதே நேரம் மேற்கு நோக்கி நடக்க முடியுமா?

ஒருவன் நல்லவனாக இருப்பான், அல்லது, கெட்டவனாக இருப்பான்,

 நல்லவனாகவும் கெட்டவனாகவும் இருக்க முடியாது.

ஒரே நேரத்தில் கடவுளுக்கும், செல்வத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது.

செல்வம் கடவுளின் விரோதியா?

உலகையும், அதைச் சார்ந்த பொருட்களையும் செல்வம் என்று அழைக்கிறோம்.

நம்மைப் போலவே அவையும் கடவுளால் படைக்கப்பட்டவையே.

எது எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டதோ அது அந்த நோக்கத்திற்காக செயல்பட வேண்டும்.

நாம் இறைவனையும் நமது அயலானையும் அன்பு செய்யவும்,

 இறைவனுக்கும் அயலானுக்கும் பணி புரியவும் படைக்கப்பட்டுள்ளோம்.

நமது பணியில் நமக்கு உதவுவதற்காகவே உலகமும் அதில் உள்ள பொருட்களும் இறைவனால் படைக்கப்பட்டுள்ளன.

அமர்வதற்காக உருவாக்கப்பட்ட நாற்காலியைத் தலையில் சுமந்து கொண்டு ஒருவன் இருந்தால் அவனைப் பார்ப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா?

இறைவனுக்காக வாழ வேண்டிய நாம் அவரால் படைக்கப்பட்ட பொருட்களுக்காக வாழ்ந்தால் நாமும் நகைப்பிற்கு உரியவர்களே.

நாம் உலகில் வாழ்வது செல்வம் ஈட்டுவதற்காக அல்ல.

நாம் செய்ய வேண்டிய பணியில் நமக்கு உதவுவதற்காகவே செல்வத்தை ஈட்டுகிறோம். 

நாம் பள்ளிக்கூடத்துக்குப் போவதற்குச் சைக்கிளை பயன்படுத்துகிறோம்.

ஆனால் சைக்கிளைப் பயன்படுத்துவதற்காக பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லை.

அதுபோல உலகில் வாழும்போது செல்வத்தை ஈட்டுகிறோம், 

ஆனால் செல்வத்தை ஈட்டுவதற்காக உலகில் வாழவில்லை.

உலகில் வாழ்வது இறைவனுக்கு சேவை செய்ய, செல்வத்தை ஈட்டுவதும் இறைவனுக்கு சேவை செய்யவே.

இறைவனுக்கு சேவை செய்வதுதான் நமது குறிக்கோள், செல்வம் ஈட்டுவது அல்ல.

தங்களைப் படைத்த இறைவனைப் பற்றி கவலைப்படாமல், செல்வம் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள் செல்வத்துக்குச் சேவை செய்கிறார்கள்.

இறைவனுக்கு சேவை செய்யாதவர்கள் மட்டுமே செல்வத்துக்கு சேவை செய்கிறார்கள்.

அதுபோல செல்வத்துக்கு சேவை செய்யாதவர்கள் மட்டுமே இறைவனுக்கு சேவை செய்கிறார்கள்.

அதனால் தான் இறைவனுக்கும் செல்வத்துக்கும் ஒரே நேரத்தில் சேவை செய்ய முடியாது என்று ஆண்டவர் சொல்கிறார்.

உடல் நலனுக்காகச் சாப்பிடுபவன் உணவைப் பயன்படுத்துகிறான்.

உடல் நலனைப் பற்றி கவலைப்படாமல் உணவை அதன் சுவைக்காக மட்டும் சாப்பிடுபவன் உணவுக்கு அடிமையாகி விடுகிறான்.

இறையன்பு பிறர் அன்பு பணிகளுக்காக செல்வத்தைப் பயன்படுத்த வேண்டும்.

செல்வம் தரும் இன்பத்திற்காக மட்டும் அதைப் பயன்படுத்துபவன் செல்வத்தின் அடிமை.

நாம் இறைவனுக்கு அடிமை. 
செல்வம் நமக்கு அடிமை.

நாம் நாம் விண்ணைச் சார்ந்தவர்கள்.
 செல்வம் மண்ணைச் சார்ந்தது.

செல்வத்தின் அடிமைகள் விண் நோக்கி பயணிக்க முடியாது..

நாம் பயன்படுத்துவதற்கென்றே இறைவன் செல்வத்தைப் படைத்திருப்பதால் 

நம் அனைவரிடமும் எந்த வகையிலாவது எந்த அளவிலாவது செல்வம் இருக்கும்.

நம்மிடம் இருக்கும் செல்வத்தை எப்படி பயன்படுத்துவது?

இறை வழிபாட்டிற்கென்று கட்டப்பட்ட ஆலயங்களைப் பராமரிக்கச் செல்வத்தைப் பயன்படுத்தலாம்.

ஆலயங்களை பராமரித்துக் கொண்டிருப்பவர்களைப் பராமரிக்க நம்மாலான உதவியைச் செல்வத்தைக் கொண்டு செய்யலாம்.

நம்மிடம் உள்ள செல்வத்தைக் கொண்டு நமது அயலானுக்கு உதவிகள் செய்யும்போது நாம் இறைவனுக்கே சேவை செய்கிறோம்.

'ஆகவே பிறரன்பு பணிகளுக்கு நம்மிடம் உள்ள செல்வத்தைப் பயன்படுத்தலாம்.

இத்தகைய பணிகளை இறைவனது அதிமிக மகிமைக்காகவே செய்ய வேண்டும், தற்பெருமைக்காகவோ, சுய விளம்பரத்திற்காகவோ செய்யக்கூடாது.


நமது உடல் உட்பட அனைத்து உலகப் பொருட்களையும் இறைவனது சேவைக்காக மட்டும் பயன்படுத்துவோம்.

நாம் இறைவனுக்கு மட்டுமே அடிமைகள், செல்வத்துக்கு அல்ல.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment